மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! - ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா - யார் இவர்?

Oct 06, 2026 - 12:30
0
மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக.! - ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் நேஹா போரா - யார் இவர்?

இந்தியாவின் சமீபத்திய மாணவர் மற்றும் இளைஞர் போராட்டங்களில் கவனம் பெற்ற ஒருவராக மாறியிருக்கிறார் நேஹா போரா. மாணவர் அரசியல், கல்வி உரிமை, ஜனநாயக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் இவர், அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவராக உள்ளார். தற்போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்திலும் முக்கிய முகமாக அவர் உள்ளார். அக்டோபர் 2 முதல் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் அவர் பங்கேற்றதுடன், போலீஸாரால் பலமுறை தடுத்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

யார் இந்த நேஹா போரா?

உத்தரகண்ட் மாநிலத்தின் கதிமா பகுதியைச் சேர்ந்தவர் நேஹா போரா. அவரது தந்தை இந்திய ராணுவத்தில் பணியாற்றியதால், சிறுவயதிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வளர்ந்துள்ளார். இந்த இடமாற்றங்கள் அவருடைய வாழ்க்கைப் பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

neha bora

படிப்பில் ஆர்வம் கொண்ட நேஹா போரா, டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் முடித்துள்ளார். தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு மேற்கொண்டு வருகிறார். கல்வியுடன் மட்டுமல்லாமல், நாடகக் கலை மீதும் ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடகக் கலைஞராகவும் செயல்பட்டு வருகிறார்.

மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர், படிப்படியாக தேசிய அளவில் அறியப்பட்ட மாணவர் செயற்பாட்டாளராக உருவெடுத்தார். குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்னைகள், தேர்வு முறைகேடுகள், கல்வி தனியார்மயமாக்கல் போன்ற விவகாரங்களில் அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளார்.

தேர்வு முறைகேடுகளிலிருந்து தேசிய கவனம்

2026-ல் வினாத்தாள் கசிவுகள் மற்றும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடைபெற்ற போராட்டங்களில் நேஹா போரா தீவிரமாக பங்கேற்றார். அப்போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

neha bora

அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, சமூக செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக்குடன் இணைந்து டெல்லியில் 23 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றார். நேஹா போரா உள்ளிட்ட மூன்று AISA மாணவர் தலைவர்கள் மேற்கொண்ட இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜூலை மாதம் முடிவுக்கு வந்தது. நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல்நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் மூலம் கல்வி தொடர்பான பிரச்னைகளை மாணவர்களின் உரிமைகளுடன் இணைத்து தேசிய அளவில் பேச வைத்தார்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்த போராட்டங்கள்

நேஹா போராவின் அரசியல் செயல்பாடுகள் கல்வித் துறையோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆன்லைன் அரசியல் நையாண்டி இயக்கமாக உருவாகி பின்னர் இளைஞர் இயக்கமாக மாறிய கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party) சார்ந்த போராட்டங்களிலும் அவர் பங்கேற்றுள்ளார்.

இந்த இயக்கம் முன்வைத்த போராட்டங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக போலீசார் நடந்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கும் நேஹா போரா எதிர்ப்பு தெரிவித்தார். இளைஞர்களின் போராட்ட உரிமை மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்து தொடர்ந்து அவர் பேசி வந்துள்ளார். காக்ரோச் இயக்கம் தற்போது தேர்தல் வாக்காளர் பட்டியல் விவகாரத்திலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

உமர் காலித், ஷர்ஜீல் இமாம் விவகாரத்திலும் குரல்

நேஹா போராவின் செயல்பாடுகள் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளன. 2020 டெல்லி கலவர வழக்கில் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உமர் காலித்தின் விடுதலையை அவர் பகிரங்கமாக ஆதரித்துள்ளார்.

அதேபோல், CAA எதிர்ப்புப் போராட்டங்களுடன் தொடர்புடைய வழக்கில் UAPA சட்டத்தின் கீழ் சிறையில் உள்ள ஷர்ஜீல் இமாமின் விடுதலைக்காகவும் அவர் குரல் எழுப்பியுள்ளார். இதனால் அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன.

neha bora

வாக்காளர் பட்டியல் விவகாரத்தில் புதிய போராட்டம்

இந்நிலையில், தற்போது நேஹா போராவின் போராட்டம் தேர்தல் மற்றும் வாக்குரிமை தொடர்பான விவகாரத்தை நோக்கி திரும்பியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் Special Intensive Revision (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள், இந்த நடவடிக்கை வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்கள் நீக்கப்படுவதற்கான அபாயத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். தேர்தல் ஆணையமும் அரசுத் தரப்பும் முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி

அக்டோபர் 2 அன்று தொடங்கிய இந்தப் போராட்டத்தில் AISA உள்ளிட்ட மாணவர் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்த நிலையிலும் போராட்டக்காரர்கள் அங்கு திரண்டனர். அந்த நாளில் சுமார் 500 பேர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் AISA தேசியத் தலைவர் நேஹா போராவும் ஒருவர்.

அதன் பின்னரும் போராட்டம் தொடர்ந்தது. அக்டோபர் 3 அன்று நேஹா போரா, யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் உள்ளிட்ட பலரும் தடுத்து வைக்கப்பட்டனர். போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தரை நோக்கிச் செல்ல முயன்றபோது போலீஸ் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. 

பேரணியில் தடுப்பை தாண்ட முயன்ற நேஹா

அக்டோபர் 4 அன்று இந்தியா கேட் பகுதியில் இருந்து ஜந்தர் மந்தர் நோக்கி AISA உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் குடிமக்கள் பேரணியைத் தொடங்கின. ஆனால், போலீசாரும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் தடுப்புகளை அமைத்து பேரணியைத் தடுத்தனர்.

அப்போது நேஹா போரா போலீஸ் தடுப்பைத் தாண்ட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் டெல்லி போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டார். பின்னர், அவர் அடையாளம் குறிப்பிடப்படாத தனியார் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டதாக AISA தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. போலீஸ் தரப்பு இதுகுறித்த சில குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. பின்னர் நேஹா போரா விடுவிக்கப்பட்டார்.

 இந்த சம்பவம், நடைபெற்று வரும் போராட்டத்தில் நேஹா போராவின் பங்களிப்பை மேலும் கவனத்துக்குக் கொண்டு வந்தது. போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும், “Jantar Mantar 2.0” இப்போதுதான் தொடங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

ஒரு மாணவியிலிருந்து போராட்டத்தின் முகமாக…

கல்வி உரிமை முதல் வாக்குரிமை வரை, பல்வேறு சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் குரல் எழுப்பி வரும் நேஹா போரா, தற்போது இந்தியாவின் Gen-Z மற்றும் மாணவர் இயக்கங்களில் கவனம் பெற்ற இளம் பெண் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.

அவருடைய செயல்பாடுகளை ஆதரிப்பவர்களும் விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். ஆனால், ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படிக்கும் மாணவியாகத் தொடங்கிய அவரது பயணம், இன்று தேசிய அளவிலான போராட்டங்களின் மையத்தில் நிற்கும் மாணவர் தலைவராக அவரை கொண்டு வந்திருக்கிறது. தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தொடர்பான தற்போதைய போராட்டம் அடுத்த கட்டத்தை எட்டும் நிலையில், நேஹா போராவின் அடுத்த நடவடிக்கையும் அரசியல் மற்றும் மாணவர் வட்டாரங்களில் கவனிக்கப்படும் ஒன்றாகியுள்ளது.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User