பஞ்சாப்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அகாலி தளத்துடன் பாஜக கூட்டணி; சூடுபிடிக்கும் சட்டமன்றத் தேர்தல் களம்
பஞ்சாப்பில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலுக்கான ஏற்பாடுகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அகாலிதளமும், பா.ஜ.கவும் தனித்து போட்டியிட்டன. அதில் இரு கட்சிகளுமே ஒற்றை இலக்கத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இரு கட்சிகளும் கூட்டணியை உடைத்துக்கொண்டன.
தற்போது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதால் இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. வரவிருக்கும் பஞ்சாப் தேர்தலுக்காக இரு கட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ளன.
குரு நானக் ஜெயந்தியையொட்டி டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் நிதின் நபின், உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் ஆகியோர் இந்தக் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இது குறித்து பேசிய அமித் ஷா, இந்தக் கூட்டணி குறித்த பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்ததாகவும், இந்தக் கூட்டணியை இந்து-சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளம் என்றும் அவர் வர்ணித்தார்.

"பாதலுடன் எங்களுக்கு நீண்டகாலமாக ஆழமான உறவு இருந்து வருகிறது. அதேபோல, பாஜகவிற்கும் அகாலி தளத்திற்கும் இடையிலும் ஒரு வலுவான பிணைப்பு உள்ளது. இந்தக் கூட்டணி பஞ்சாபில் மட்டுமல்லாமல், நாடு முழுவதிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இந்து-சீக்கிய சகோதரத்துவத்தின் அடையாளமாகத் திகழும் என்று நான் நம்புகிறேன்" என்றார் அமித் ஷா.
டிசம்பர் 2029-க்குள் பஞ்சாப்பை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவோம் என்ற தனது வாக்குறுதியை அமித் ஷா மீண்டும் வலியுறுத்தியதோடு, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க எதுவும் செய்யாததற்காகத் தற்போதைய ஆம் ஆத்மி மற்றும் முன்னாள் காங்கிரஸ் அரசுகளைக் கடுமையாகச் சாடினார்.
தொகுதிப் பங்கீடு குறித்த விவரங்கள் எதுவும் அறிவிக்கப்படாத போதிலும், இந்தக் கூட்டணியில் அகாலி தளம்தான் மூத்த சகோதரர் (பெரிய அண்ணன்) என்றும், முதலமைச்சரும் அந்தப் பஞ்சாப் கட்சியைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்றும் அமித் ஷா தெளிவுபடுத்தினார்.
மூத்த சகோதரர்தான் முதலமைச்சராவார் என்று கூறிய அமித் ஷா, இரு கட்சிகளும் மொத்தம் உள்ள 117 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். இதில் பேசிய அகாலி தளம் தலைவர் சுக்பீர் பாதல், இந்தக் கூட்டணியை வெறும் அரசியல் கூட்டணி என்று மட்டும் பார்க்காமல், பஞ்சாபின் நலனுக்கான உணர்ச்சிகரமான கூட்டணி என்று குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் சிரோமணி அகாலி தளம் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பஞ்சாபிலுள்ள மொத்தம் 117 தொகுதிகளில் சுமார் 40 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தக் கூட்டணி உறுதியானால் 2020-இல் இரு கட்சிகளும் கூட்டணி முறியும் முன்பு பாஜக போட்டியிட்ட 23 தொகுதிகளை விட, இது கிட்டத்தட்ட இருமடங்காகும். முன்னதாக, இந்தக் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் 94 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு வந்தது.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே கணிசமான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)