Coimbatore Day: அன்று வாழத் தகுதியற்ற இடம்... இன்று `தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' - HBD கோவை

Nov 24, 2026 - 11:00
0
Coimbatore Day: அன்று வாழத் தகுதியற்ற இடம்... இன்று `தென்னிந்தியாவின் மான்செஸ்டர்' - HBD கோவை

ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு முன்பு வரை பேரூர் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சிற்றூரே கோயம்புத்தூர். கோவன் என்ற பழங்குடித் தலைவன் ஆண்ட இந்த ஊர், கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டு, பின்னர் மருவி கோயம்புத்தூராக மாறியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலப்பரப்பு ஒரு குறிப்பிட்ட அரசர்களின் ஆளுகைக்குள் நிரந்தரமாக இருந்ததில்லை. பல்வேறு அரசுகளின் ஆளுகைக்குக் கீழ் மாறி மாறி இருந்து வந்துள்ளது. சேரர், சோழர், பாண்டியர், விஜயநகர மன்னர்கள், ஹைதர் அலி, திப்பு சுல்தான் எனப் பலரின் ஆளுகைக்குக் கீழ் இருந்துள்ளது. அப்போது ஒரு கோயில், சிறிய கோட்டை, நான்கைந்து வீதிகள் மட்டுமே கொண்ட ஊராக இருந்த கோவைக்கு எந்த முக்கியத்துவமும் இருக்கவில்லை.

கோவை
கோவை

கோவை மாவட்டம் உருவாக்கம்!

அதேசமயம் கோயம்புத்தூர் உருவாவதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பேரூர், வெள்ளலூர், சூலூர் ஆகிய ஊர்கள் உருவாக்கப்பட்டிருந்தன. மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரையை இணைக்கும் 'ராஜகேசரி பெருவழியில்' அமைந்திருந்த வெள்ளலூர், கிரேக்கர்கள் மற்றும் ரோமானியர்களுடன் வணிகத் தொடர்பைக் கொண்டிருந்தது. திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் 1799ம் ஆண்டில் கோவை ஆங்கிலேயர் வசமானது. இதையடுத்து பவானி, தாராபுரம் ஆகிய பகுதிகளைத் தலைநகரங்களாகக் கொண்டு மாவட்டத்தை உருவாக்கினர்.

கோவை
கோவை

பின்னர் ஆங்கிலேயர்களின் நிர்வாக வசதிக்காக 1804ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியன்று கோவை நகரைத் தலைநகரமாகக் கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர். கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, அதன் வடக்கு எல்லையாக மைசூரும், மற்றொரு புறம் சேலம் மாவட்டத்தின் காவிரி ஆறும், தென்கிழக்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், மேற்கே கொச்சி, மலபார், நீலகிரி மாவட்டங்களும் எல்லைகளாக இருந்தன. 1868ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் முதல் பிரிவினை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோவையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டது. அதன்பின்னர் மற்ற பகுதிகள் பல்வேறு காலகட்டங்களில் தனியாகப் பிரிந்து சென்றன.

கோவை பெரியார் அறிவுலகம்

வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காரணிகள்!

அக்காலத்தில் போதிய சுகாதார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இல்லாத கோவை நகரம், 19ம் நூற்றாண்டில் கடும் பஞ்சங்களிலும், 20ம் நூற்றாண்டில் காலரா, பிளேக் ஆகிய கொள்ளை நோய்களிலும் சிக்கிப் பல்லாயிரம் மக்களை இழந்தது. அதன் காரணமாக மக்கள் வாழத் தகுதியற்ற ஊர் என ஆங்கிலேயர்களால் குறிப்பிடப்பட்ட நிகழ்வுகளும் நடந்தன. பின்னர் நகரம் விரிவாக்கம் செய்யப்பட்டு, ஆர்.எஸ்.புரம், ராம்நகர், டாடாபாத் போன்ற புதிய பகுதிகளில் மக்கள் குடியேற்றப்பட்டனர். பின்னர் 1862ல் சென்னையின் கிழக்குக் கடற்கரையையும், மங்களூரின் மேற்குக் கடற்கரையையும் போத்தனூர் வழியாக இணைத்து உருவாக்கிய WEST COAST EXPRESS ரயில் வசதி, 1882ல் சர் ராபர்ட் ஸ்டேன்ஸால் அறிமுகம் செய்யப்பட்ட பஞ்சாலை, 1929ல் கிடைத்த சிறுவாணி குடிநீர், 1931ல் கோவைக்கு வந்த பைக்காரா மின்சாரம் ஆகிய காரணிகள் கோவையின் பிரமாண்ட வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன.

சிறுவாணி அணை
சிறுவாணி அணை

1831ம் ஆண்டில் ஆடிஸ் என்பவரால் தொடங்கப்பட்ட லண்டன் மிஷனரியே கோவையின் முதல் பள்ளியாகும். 1816ம் ஆண்டில் நீதிமன்றமும், 1862ம் ஆண்டில் சிறைச்சாலையும் கோவைக்கு வந்தன. 1866ம் ஆண்டில் கோவை நகராட்சியாகத் தரம் உயர்ந்தது. சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் தொடங்கிய கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ் என்ற பஞ்சாலையைத் தொடர்ந்து ஏராளமான பஞ்சாலைகள் உருவாகின. அதற்குக் கோவை புறநகர்ப் பகுதிகளில் விளைவிக்கப்பட்ட பருத்தி விளைச்சல் கைகொடுத்தது. பஞ்சாலைகள் சார்ந்து பொறியியல் தொடர்பான தொழில்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தன.

குறிப்பாகப் பம்ப், மோட்டார், இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி, பவுண்டரிகள் மற்றும் அதனைச் சார்ந்த தொழில்களும் உருவாகின. முதன்முதலில் வெட் கிரைண்டரை உருவாக்கிய கோவை, அதன் தாயகமாகவும் விளங்குகிறது.

கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சி

உழைப்பினால் உயரும் கோவை!

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை எவ்வித முக்கியத்துவமும் இல்லாத கோவை, இன்று இந்தியாவின் தவிர்க்க முடியாத முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நகரம் எனப் பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்குத் தமிழுக்கும், மிதமான தட்பவெப்ப நிலைக்கும் கோவை பெயர் பெற்றுள்ளது. அன்று மக்கள் வாழத் தகுதியற்ற இடமாகக் கருதப்பட்ட கோவை, இன்று பல லட்சம் பேருக்கு வாழ்வளிக்கும் இடமாக மாறியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இத்தகைய அபரிமிதமான வளர்ச்சியைக் கோவை அடைந்ததற்குக் கோவை மக்கள் மற்றும் தொழிலாளர்களின் உழைப்பிற்குப் பெரும் பங்குண்டு.

உழைப்பினால் உயர்ந்து வரும் கோவைக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User