கோவை மாவட்டம், ஈச்சனாரி விநாயகர் ஆலயம்: நஷ்டங்கள் தீர்க்கும் 27 நட்சத்திர அலங்காரங்கள்!

Mar 19, 2026 - 08:02
 0
கோவை மாவட்டம், ஈச்சனாரி விநாயகர் ஆலயம்: நஷ்டங்கள் தீர்க்கும் 27 நட்சத்திர அலங்காரங்கள்!

நம் நாட்டில் பார்க்கும் இடமெல்லாம் விநாயகர் கோயில்கள் நிறைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் தனித்துவம் வாய்ந்தவை. சில கோயில்களில் சில புகழ்பெற்றும் விளங்குகின்றன.

அதற்குக் காரணம் அதன் பழைமையும் மகிமையுமே. அப்படி ஒரு கோயில்தான் ஈச்சனாரி விநாயகர் ஆலயம். கோவையில் இருந்து பொள்ளச்சி செல்லும் வழியில் அமைந்து உள்ளது ஈச்சனாரி விநாயகர் கோயில்.

விநாயகப் பெருமான் மட்டுமே சந்நிதி கொண்டருளும் இந்தக் கோயிலின் தலபுராணம் சுவாரஸ்யமானது.

சுமார் 450 வருடங்களுக்கு முன்பு ‘மேலைச் சிதம்பரம்’ என்று போற்றப்படும் ‘பேரூர் பட்டீஸ்வரர்’ ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக, ஐந்து அடி உயரமும் மூன்று அடி பருமனும் கொண்ட விநாயகர் சிலை வடிக்கப்பட்டது. அந்தச் சிலை, ஒரு நல்ல நாளில் வண்டியில் ஏற்றப்பட்டு பட்டீஸ்வரம் கொண்டுசெல்லப்பட்டது.

ஈச்சனாரி விநாயகர் ஆலயம்
ஈச்சனாரி விநாயகர் ஆலயம்

விநாயகரின் வாகனம், தற்போது அவர் கோயில்கொண்டிருக்கும் ஈச்சனாரி பகுதிக்கு வந்தபோது, முகூர்த்தமும் காஷ்டையும் நன்றாக இருப்பதாகவும் அந்த இடத்தில் கோயில் கொண்டால், உலக மக்களுக்கு தம் அருள்திறன் பூரணமாகக் கிடைக்கும் என்பதையும் உணர்ந்தார் விநாயகர்.

விளைவு, விநாயகரைச் சுமந்து வந்த வாகனத்தின் அச்சு முறிந்தது; விநாயகர் அந்த மண்ணிலேயே சாய்ந்துவிட்டார். எவ்வளவு முயற்சி செய்தும், அவரைத் தூக்க முடியவில்லை.

அப்போது இருந்த காஞ்சி ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகள், இறைவனின் திருவுள்ளத்தை அறிந்து அங்கேயே விநாயகரைப் பிரதிஷ்டை செய்ய அறிவுறுத்தினார்.

அதன்படி, அங்கேயே சிறு மேடை அமைத்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்தனர்; பின்னர் கோயிலும் கட்டினர் என்பது தல வரலாறு.

மற்றொரு சம்பவமும் சொல்லப்படுகிறது.

1917-ம் வருடத்தில், மயிலை கிருஷ்ணசாமி பிள்ளை என்பவர், கோவை - பொள்ளாச்சி சாலையைச் சீரமைக்கும் பணியின் ஒப்பந்த தாரராகப் பணியாற்றியதாகவும், சாலை அமைக்க மண்ணை வெட்டி எடுத்தபோது விநாயகர் சிலை கிடைத்ததாகவும், பின்னர் அங்கே விநாயகருக்குக் கோயில் கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

கோயில் அமைந்த இடம் ஈச்சங்காடாகத் திகழ்ந்ததால், இந்த விநாயகர் `ஈச்சங்காட்டு விநாயகர்’ என அழைக்கப்பட்டார். இதுவே பின்னாளில் `ஈச்சனாரி விநாயகர்’ என்றானதாம்.

ஈச்சனாரி விநாயகர் ஆலயம்
ஈச்சனாரி விநாயகர் ஆலயம்

புதிதாக வாகனம் வாங்குவோர் இந்தக் கோயிலில் சாவியை வைத்துப் பூஜை செய்வது வழக்கம். மேலும் புதிதாக வாகனம் வாங்கும்போது, அதன் பதிவு எண்ணையும் விநாயகரிடம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். இதனால் சாலை விபத்து எதுவும் நேராது, ஈச்சனாரி விநாயகர் வழித்துணையாய் வந்து காப்பாற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

விநாயக சதுர்த்தி நாளில், ஈச்சனாரி பிள்ளையாரைத் தரிசிக்க, கோவை, ஈரோடு, பொள்ளாச்சி எனப் பல ஊர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து தரிசித்துச் செல்கின்றனர். அன்றைய நாளில், சர்வ அலங்காரத்தில் ஜொலிக்கும் விநாயகப் பெருமானைக் காணக் கண் கோடி வேண்டும் எனப் பூரிப்புடன் சொல்கிறார்கள் பக்தர்கள்!

மூன்று நிலைகளுடன் அமைந்திருக்கும் ராஜகோபுரத்தின் வழியாக ஆலயத்துக்குள் சென்றால் நேரெதிரில் விநாயகப் பெருமானின் சந்நிதி அமைந்திருக்கிறது. விநாயகர் உயரமான பீடத்தில் அமர்ந்திருப்பதால், சாலையில் செல்பவர்களும் தரிசிக்கமுடியும்.

தமிழகத்திலேயே முதன்முதலாக விநாயகருக்கென்று தங்கத் தேர் செய்தது, ஈச்சனாரி விநாயகருக்குத்தான். நாள்தோறும் இரவு ஏழு மணிக்கு, உபயதாரர்கள் மூலம் தங்கத் தேர் பவனி நடத்தப்படுகிறது.

இங்கு, விநாயகருக்கு ஒவ்வொரு நட்சத்திரத்தன்றும் ஒவ்வொருவிதமாக மலர் அலங்காரம் செய்கிறார்கள். இவ்வாறு அவரவர் அவரவர் நட்சத்திரத்துக்குரிய அலங்காரம் செய்து வழிபட்டால் வாழ்வில் தொடங்கும் காரியங்கள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

மேலும் மங்கல காரியங்களும் கூடிவரும். தொழிலில் தொடர் நஷ்டங்களைச் சந்திப்பவர்களுக்கும் இந்தப் பரிகாரம் நல்ல திருப்பத்தைத் தரும் என்கிறார்கள். அப்படி 27 நட்சத்திரங்களுக்கும் உரிய அலங்காரங்களைக் காண்போம்.

ஈச்சனாரி விநாயகர் ஆலயம்
ஈச்சனாரி விநாயகர் ஆலயம்

அசுவினி, பூசம், அவிட்டம்: இந்த நட்சத்திர நாள்களில் தங்கக் கிரீடம் மற்றும் அறுகம்புல் அலங்காரம் செயப்படுகிறது.

பரணி, சுவாதி: அறுகம்புல் மாலை அலங்காரம்

கிருத்திகை: வெள்ளிக்கவச அலங்காரம்

ரோகிணி, பூரட்டாதி, ரேவதி: அன்னம் அலங்காரம்

மிருகசீரிடம், பூரம், உத்திரம்,

அனுஷம்: கஸ்தூரி மஞ்சள் அலங்காரம்.

திருவாதிரை, அஸ்தம்: சந்தன அலங்காரம்.

புனர்பூசம்: தங்கக் கவச அலங்காரம்.

ஆயில்யம்: தங்க கிரீட அலங்காரம்.

மகம், கேட்டை, உத்திரட்டாதி: திருநீறு அலங்காரம்.

சித்திரை: தங்கக் கிரீடம் மற்றும் வெள்ளிக் கவச அலங்காரம்.

மூலம்: தங்கக் கிரீடம் மற்றும் ரோஜா மாலை அலங்காரம்.

பூராடம்: வெற்றிலை அலங்காரம்.

உத்திராடம்: வெள்ளிக் கவசம், அறுகம்புல் அலங்காரம்.

விசாகம், திருவோணம்: சுவர்ண அலங்காரம்.

சதயம்: குங்கும அலங்காரம்.

ஈச்சனாரி விநாயகரை வழிபடுவதன் மூலம் கல்வியில் மேன்மை, இனிய இல்லறம், குழந்தை பாக்கியம் போன்ற பலன்கள் கிடைக்கும் என்பதால் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் அவரை நாடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். வாய்ப்பிருக்கும் என்பர்கள் ஒருமுறை ஈச்சனாரி விநாயகரை வழிபட்டு வாருங்கள். வாழ்க்கை வளமாகும். நடப்பவை நலமாகும்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0