சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

Apr 24, 2026 - 19:32
 0
சென்னை: தோழியைக் கொலைசெய்து விட்டு, உயிரை மாய்த்த இளைஞர்; போலீஸ் விசாரணை!

சிவகங்கை மாவட்டம், பாரதி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரின் மகள் பவ்யா (21). இவரின் ஆண் நண்பர் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த பாரதி பெருமாள் (21). இவர்கள் இருவரும் சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினர். இன்று (24.4.2026) அறையை காலி செய்வதாகக் கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் அறையைக் காலி செய்யவில்லை. அதனால் விடுதி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அறை உள்பக்கமாகப் பூட்டியிருந்தது. கதவைத் தட்டியும் திறக்கவில்லை. அதனால் கதவிலிருந்த கண்ணாடி வழியாக ஊழியர்கள் உள்ளே எட்டிப் பார்த்தனர். அப்போது மின்விசிறியில் பாரதி பெருமாள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக ஊழியர்கள், பெரியமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

தற்கொலை
தற்கொலை

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாரதி பெருமாள், தூக்கிலும் படுக்கையில் ரத்த வெள்ளத்தில் பவ்யாவும் சடலமாக கிடந்தனர். உடனடியாக இருவரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இருவரின் குடும்பத்தினருக்கும் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது பவ்யாவும் பாரதி பெருமாளும் பழகி வந்தது தெரியவந்தது. மேலும் பவ்யாவை கொலை செய்து விட்டு பாரதி பெருமாள் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அவர்கள் இருவரின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

இதுகுறித்து பெரியமேடு போலீஸார் கூறுகையில், ``அறையில் தங்கியிருந்த பாரதி பெருமாளும் பவ்யாவும் கணவன் மனைவி என்றே விடுதியில் கூறியிருக்கிறார்கள். அதோடு பவ்யாவின் கழுத்திலும் கையிலும் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருந்தன. அதனால்தான் பவ்யாவை பாரதி பெருமாள் கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே முழு விவரங்கள் தெரியவரும்" என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0