Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Aug 08, 2026 - 07:31
0
Doctor Vikatan: ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி... மன அழுத்தமா, மனநல பாதிப்பா?

Doctor Vikatan: என் நெருங்கிய தோழிக்கு 28 வயதாகிறது. அவள் தனியார் நிறுவனமொன்றில் வேலை செய்கிறாள். அவளுக்கு எப்போதுமே சிந்தனைகள் அதிகம். ஒரு வாரம் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பாள். அடுத்த வாரமே சோகமாக மாறிவிடுவாள். இது சாதாரண மன அழுத்தத்தின் அறிகுறியா அல்லது அவளுக்கு மனநல பாதிப்பு இருக்க வாய்ப்பு உண்டா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

 மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்


மனது எப்போதும் ஒரே நேர்க்கோட்டில் போகாது. திடீரென உற்சாகம் கொள்ளும். அடுத்து அது மட்டுப்படும். தொடர்ந்து அதற்கு நேரெதிராக ஏதோ ஒரு கவலை வரும். 

மன அழுத்தத்தை ஆரம்பநிலை, மிதமானது, தீவிரமானது என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

ஆரம்பநிலை மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர், தானாகவே சரிசெய்து கொள்வார்கள். இது கவலைக்குரியதல்ல. மிதமான மன அழுத்தத்தில் கவனமின்மை அதிகரிக்கும். தற்கொலை எண்ணம் வந்தாலும், அதைச் செயல்படுத்தத் தோன்றாது. நாளைக்குச் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை இருக்கும். கவுன்சிலிங் கொடுத்தாலே அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.

மூன்றாவது நிலை தீவிர மன அழுத்தம். இதில் கவலை வரும். அதிலிருந்து விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப்போய் கிடப்பார்கள். தற்கொலை எண்ணம் துரத்தும். என்னால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை எனத் தோன்றும். எந்த விஷயத்திலும் நம்பிக்கை இருக்காது. இது சில நாள்கள் முதல் சில வருடங்கள் வரை நீடிக்கலாம். இதை மருந்து, மாத்திரைகளால் மட்டும்தான் சரிப்படுத்த முடியும்.

கவலை வரும். அதிலிருந்து விடுபடத் தெரியாமல் அதிலேயே மூழ்கிப்போய் கிடப்பது தீவிர மன அழுத்தம். தற்கொலை எண்ணம் துரத்தும்.

இந்த மூன்றுநிலைகள் தவிர, யூனிபோலார் டிப்ரெஷன் (Unipolar Depression), பைபோலார் டிப்ரெஷன் (Bipolar depression) என மேலும் இரண்டு வகையான மன அழுத்தம் உள்ளன.

வருத்தமோ, கவலையோ இருக்கும். அடுத்தடுத்த நாள்களில் அவற்றைக் கடந்து சாதாரண மனநிலைக்கு வருவார்கள். மீண்டும் மன அழுத்தத்துக்குள் போவார்கள். மறுபடி மீள்வார்கள். இது சில நாள்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் என நீடிக்கலாம். இதுதான் யூனிபோலார் டிப்ரெஷன்.

இன்னொருவகை... பைபோலார் டிப்ரெஷன். இந்த வகை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கவலை அதீதமாக இருக்கும். அதிலிருந்து மீண்டு சகஜ நிலைக்கு வருவார்கள். உடனடியாக சந்தோஷ மனநிலைக்குப் போவார்கள். அதற்குக் காரணமே இருக்காது. அதுவும் உச்சத்தில் இருக்கும். கவலையோ, மகிழ்ச்சியோ, இரண்டுமே இவர்களுக்கு அதீதமாக இருக்கும். ஒருவாரம் கவலை, ஒரு வாரம் மகிழ்ச்சி அல்லது 15 நாள்கள் கவலை, அடுத்த 15 நாள்கள் மகிழ்ச்சி என இருப்பார்கள். எனவே, உங்களுடைய மேலோட்டமான கேள்வியை வைத்து இதற்கான முழுமையான தீர்வைச் சொல்வது கடினம். உங்கள் தோழியை மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்லுங்கள். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User