வாடகை பாக்கியால் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்திய கால்பந்துக்கு மீண்டும் ஒரு அவமானம்!

Mar 27, 2026 - 13:02
 0
வாடகை பாக்கியால் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுப்பு; இந்திய கால்பந்துக்கு மீண்டும் ஒரு அவமானம்!

இந்தியா - ஹாங்காங் இடையேயான கால்பந்து போட்டி மார்ச் 31-ம் தேதி கொச்சியில் உள்ள ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது. 2016-க்குப் பிறகு இந்திய அணி கொச்சியில் விளையாடும் முதல் சர்வதேசப் போட்டி இதுவாகும்.

இந்தியா மற்றும் ஹாங்காங் ஆகிய இரு அணிகளுமே ஏற்கனவே ஆசியக் கோப்பைக்கான தகுதி வாய்ப்பை இழந்துவிட்டன. எனவே, இது ஒரு சம்பிரதாயப் போட்டியாக இருந்தாலும், ஃபிஃபா தரவரிசைப் புள்ளிகளை உயர்த்துவதற்கு இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானது என்பதால் கால்பந்து விளையாட்டு ரசிகர்களிடம் கூடுதல் கவனம் பெற்றுவருகிறது.

கால்பந்து அணி
கால்பந்து அணி

இந்தப் போட்டியில் பயிற்சியாளர் காலித் ஜமீல் தலைமையில் 23 வீரர்கள் கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது. இதில் சஹால் அப்துல் சமத், ஆஷிக் குருனியன் போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், போட்டிக்கு முன்னதாக கொச்சி ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தில் செய்தியாளர் சந்திப்புக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க பயிற்சியாளர் காலித் ஜமீல், இந்திய வீரர்களான ஆஷிக் குருனியன், சஹால் அப்துல் சமத் மற்றும் பிஜாய் வர்கீஸ் ஆகியோர் மைதானத்திற்கு வந்தனர்.

ஆனால், மைதானத்தின் உரிமையாளரான 'கிரேட்டர் கொச்சின் மேம்பாட்டு ஆணையத்தின்' (GCDA) பாதுகாப்பு ஊழியர்கள், அவர்களை வாசலிலேயே, ``மைதானத்துக்கு வாடகைபாக்கி இருக்கிறது. அதனால் உள்ளே அனுமதிக்கமாட்டோம்" எனத் தடுத்து நிறுத்தினர்.

செய்தியாளர் சந்திப்புக்கு வந்த பத்திரிகையாளர்களும் உள்ளே அனுமதிக்கப்படாததால், காலித் ஜமீல் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய கேரள கால்பந்து சங்கத்தின் (KFA) தலைவர் நவாஸ் மீரான், ``இது ஒரு சிறிய தொழில்நுட்பக் கோளாறு பிரச்னை. ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று திட்டமிட்டபடி நடக்கும். விரைவில் சிக்கல்கள் சரிசெய்யப்படும்" என்றார்.

காலித் ஜமீல்
காலித் ஜமீல்

இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. கடந்த பிப்ரவரி மாதம் இதே மைதானத்தில் கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்கும் இதே போன்ற வாடகைப் பிரச்சனையால் அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மைதானத்தின் உரிமையாளரான GCDA மற்றும் போட்டிகளை நடத்தும் KFA ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாததே இதுபோன்ற குளறுபடிகளுக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய கால்பந்தில் இது போன்ற கசப்பான சம்பவங்கள் தொடர்வது விளையாட்டு ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0