மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10

Mar 19, 2026 - 14:01
 0
மேட்டூர் அணைக்கு பக்கபலமாக நின்ற காவிரிப் பாலம்; ஐரோப்பிய கர்டர்கள்.. வரலாற்றுச் சின்னம்| அணை ஓசை 10
பரிசல் பயன்பாடு

1927 வரை மேட்டூர் கிராமத்திலிருந்து காவிரியின் இடக்கரைக்கு செல்ல ஒரே வழி பரிசல் மட்டுமே. பரிசல் ஓட்டுபவர்கள் ஆற்றின் கடினமான நீரோட்டத்தையும் திறமையாகக் கடந்து சென்றனர். இந்த பரிசல்களை இயக்குபவர்கள் அந்த வேலையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர் என்று பதிவு செய்துள்ளனர், பிரிட்டிஷ் பொறியாளர்கள்.

இந்தத் திறமை, ஆற்றின் மிக கடினமான நீரோட்டத்தை கடந்து சரியாக இயக்கி குறிப்பிட்ட இடத்தை அடைவதற்கு மிகுந்த தேவையாக இருந்தது. அதேசமயம் விபத்துக்கள் நடப்பதென்பது அநேகமாக இல்லை எனலாம்! ஏனெனில், அவ்வளவு திறமை வாய்ந்தவர்களாக பரிசில் ஓட்டுபவர்கள் திறன் பெற்று இருந்தனர். ஆற்றை கடக்கவும், மீன்களைப் பிடிக்கவும் இந்த வகை பரிசல்களே பயன்படுத்தப் பட்டன!

ஆற்றில் அதிக அளவு நீர் செல்லும் போது இக்கரையில் இருந்து பரிசலில் புறப்பட்டால் அக்கரையைச் சென்றடைவதற்கு முன்பாக, ஆற்றின் வேகத்தில் நீரோட்டத்தால் மெல்ல இழுக்கப்பட்டு, அநேகமாக சுமார் ஒருமைல் தூரம் தள்ளி அக்கரையில் இறங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்! பிறகு, அங்கிருந்து பரிசலை தோளில் சுமந்தபடி, அக்கரையின் ஓரமாகவே பொடி நடையாக நடந்து வந்து சென்றடைய வேண்டிய இடத்தை அடைய நேரிடும்.

கனரக கட்டுமான கருவிகள் அல்லது பொருட்களை இந்த பரிசல்கள் மூலம் அணையின் இடது புறத்திற்கு கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். ஓரளவு சிறிய இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அவசரத் தேவைக்காக மேட்டூர் கிராமத்திலிருந்து இடது புறக்கரைக்கு கொண்டு செல்ல, நான்கு பரிசல்களை ஒன்றாக நிறுத்தி, ஒன்றுடன் ஒன்று கட்டி அதற்கு மேல் மரக்கட்டைகளை வைத்து சமதளம் போல் ஏற்படுத்தி, மூங்கில் வார்களைக் கொண்டு கட்டி, பொருட்களை அதில் வைத்து மிக கவனமாக அக்கரைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் வரை இந்த நிலையே நீடித்தது.

கனரக கருவிகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றை ஆற்றின் இடக்கரைக்கு பரிசல் வழியாகக் கொண்டு செல்ல முடியாததால், பாலம் கட்டும் அவசியம் உருவானது. இதற்கான முதற்கட்ட ஒதுக்கீடு ரூ.1.5 லட்சம்.

முதலில், ஈரோடு காவிரிப் பாலத்தில் மீதமாக இருந்த 19 இரும்புக் கர்டர்களை வாங்கி இங்கு பயன்படுத்தி, மேலே 7 அங்குல அளவில் கான்கிரீட் போட்டு, 18 அடி அகலச் சாலை (நடைபாதையுடன் சேர்த்து 20 அடி) அமைக்கப்பட்டது. 10 டன் எடையுள்ள டிராக்டர், வண்டிகள் கூட செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து +666 MSL அளவில் பாலம் அமைக்கப்பட்டது.

காவிரி பாலம் கட்டுமானம்

1926 ஆம் ஆண்டு முதலில் “SITE-D” அடிப்படையில் வேலை தொடங்கினாலும், அணை “SITE-Y” என்ற இடத்துக்கு மாற்றப்பட்டதால் பாலம் அங்கு மாற்றி அமைக்கப்பட்டது. புதிய இடத்தில் பாறைகள் அடர்த்தியானவை; பெருவெள்ளத்தின் போதும் தேய்மானமில்லாமல் இருந்தன. எனவே, பாலம் கட்ட பொருத்தமாக அந்த இடம் அமைந்தது.1926 ஜூலை மாதம் மதிப்பீடு ரூ.2,68,000 ஆக அனுப்பப்பட்டு, 1927 மார்ச் மாதம் ஒப்புதல் கிடைத்தது. ஒப்பந்ததாரர் வேலை சரியாக செய்யாததால் 1927 ஆகஸ்டில் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது; பின்னர் கர்டர் பொருத்தும் பணி துறை மூலமே நடந்தது.

அதிக கர்டர்கள் இந்தியாவில் கிடைக்காததால் ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாகி, அனுமதி பெற்று 1927 அக்டோபர் முதல் 1928 மார்ச் வரை பொருத்தப்பட்டது. 1928 ஜூனில் பாலம் திறந்து விடப்பட்டது. ஆரம்பத்தில் சில வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப் பட்டது. 1930 முதல் டிராம்வே மூலம் அணை கட்டுமானப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. பாதசாரிகளுக்கான நடைபாதையும் அமைக்கப்பட்டது.

மொத்தச் செலவு ரூ.2,63,129 மட்டுமே. பின்னாளில் இந்தப் பாலம் முக்கிய சாலையாக பயன்பட்டு, 1980களில் மேட்டூர் அனல் மின் நிலையம் உருவானபின், கூடுதலாக புதிய பாலங்கள் கட்டப்பட்டன.

காவிரி பாலம் கல்வெட்டு

1928-ல் பாலம் கட்டப்பட்டதும் சேலம்–கோயம்புத்தூர் இடையே இணைப்பு ஏற்பட்டது. தொப்பூரிலிருந்து பவானிக்கு மேட்டூர் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டதால், மெட்ராஸிலிருந்து கோயம்புத்தூருக்கு 14 மைல் தூரம் குறைந்தது. ஆனால் சேலம், கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகங்கள் இந்தப் பாலத்தால் வியாபார பலன் இல்லை என்று கூறி நிதி பங்களிப்பை மறுத்தன. எனவே முழுச் செலவும் மேட்டூர் திட்டத்திலிருந்தே ஒதுக்கப்பட்டது. பின்னாளில் இந்த சாலை, பாலம் ஆகியவை அதிக பயன்பாட்டை பெற்று இன்றளவும் பெரும் பயன் நல்கி வருகிறது.

இவ்வாறு, 1928 இல் முடிக்கப்பட்ட காவிரிப் பாலம் மேட்டூர் அணை கட்டுமானத்திற்கும், தமிழ்நாட்டின் போக்குவரத்து வரலாற்றிற்கும் ஒரு சின்னமாக திகழ்கிறது. இந்தப்பாலத்தில் நின்று கொண்டு வடக்கு திசையில் பிரம்மாண்டமாக எழும்பி நிற்கும் அணையை கண்டு மகிழலாம். இதில் உழைத்த ஒவ்வொரு தொழிலாளர்களின் வேர்வைத் துளிகள் அணையிலிருந்து வெளியேறும் காவிரி நீரில் கலந்திருப்பதை உளமாற உணரலாம்.

ஒட்டுமொத்த மேட்டூரின் கட்டமைப்பை இதை வாசித்து விட்டு ஒருமுறை நேரில் சென்று கண்டு வந்தீர்கள் என்றால் கூட்டு முயற்சியின் சின்னமாக, பொறியாளர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு அத்தாட்சியாக ஒவ்வொருவரின் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பூத்து மலரும் என்பது உறுதி!

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவிரிப் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த பிறகுதான், அணையின் இடது புறக்கரையில் ஓரளவு கூறிக் கொள்ளும்படியான வேலைகள் நடக்க ஆரம்பித்தது.

மிக முக்கியத் தேவையாக போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட நீர்த் தேவை இருந்தது. இது பெரிய அளவில் தேவைப்படுவதாகவும் அமைந்தது. அணையின் வலது புறக்கரையில் நிரந்தரமான வடிகட்டியுடன் கூடிய ஆலை மற்றும் நீர் கொள்கலன் அமைப்பதில் சில வசதி குறைபாடுகள் உணரப்பட்டன. மிகப் பொருத்தமான இடம் அணையின் இடது புறத்தில், காவிரிப் பாலத்துக்கு சற்று கீழே இயற்கையாகவே குளம் போன்று நீர் தேங்கி நிற்கும் ஒரு இடம் அமைந்தது.

அந்த இடத்தில் வடிகட்டியுடன் கூடிய கொள்கலனும் மலைப்பகுதியில் (இடதுபுறம் உள்ள சீத்தாமலை) அணையின் பக்கவாட்டில் அமைந்த நீர்த் தொட்டியும், முகாம்களுக்கு மட்டுமின்றி அணையின் அதிகபட்ச உயரச்சுவர் கட்டி முடிக்கப்பட்டு அதன் மேல் புறம் பணி முடியும் வரை இந்த நீர் பயன்படுத்த வழங்கப்பட்டது.

குடிநீர் நீரேற்று நிலையம்

மனித உடலில் ஓடும் ரத்தக்குழாய்களைப் போல, அணை கட்டுமானத்தின் போது குறுக்கும் நெடுக்குமாக, அணை நீளம் முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டு, மேட்டூர் முகாமுக்கு முக்கியக் குழாயும், பிரித்தளிக்கும் குழாய்கள் அதிலிருந்து அணைக்கட்டுமானம் தொடர்புடைய அனைத்து பகுதிகளுக்கும் அதாவது பணிமனை, பவர் ஹவுஸ், மற்றும் வலதுபுற பக்கவாட்டு கரை வரையிலும் ஆற்றை கடந்து கொண்டு சென்று தேவையான அளவு தண்ணீர் அளிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் ஆற்று நீரை நேரிடையாக அணை கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்துவது என்ற முடிவை எடுத்திருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்து அங்கு வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக அந்த நீரை தங்கள் தாகம் தீர்த்துக்கொள்ள அப்படியே அருந்தி விடலாம் என்ற அச்சமும், அதனால் காலரா போன்ற பெருந்தொற்று பரவும் அபாயமும் இதில் இருப்பதால் எல்லாவிதமான பயன்பாடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குளோரின் கலந்த சுத்தமான நீரை பயன்படுத்துவது என்ற முடிவு செயல்படுத்தப்பட்டது!

இந்த முடிவு நன்கு யோசித்து அனைவரது உடல் நலனையும் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட சிறப்பான முடிவு என்ற எண்ணத்தை இப்போது நமக்கு தோற்றுவிக்கிறது. இதனால் சுத்தமான தண்ணீர் சொந்த உபயோகம் முதல் அணை கட்டி முடிக்கப்படும் வரை அனைத்து கட்டுமான பணிகளுக்கும் அளிக்கப்பட்டு கவனத்துடன் பணிகளை முடிக்க எச்சரிக்கை நடவடிக்கையாக எடுக்கப்பட்டது பாராட்டுக்குரியது! இதனால் உடனடியாக பலன் கிடைத்தது எனலாம். நீரின் மூலமாக பரவும் வியாதிகள் உடனே அறவே இல்லாமல் போனது. சுத்தமான தண்ணீர் பொது பயன்பாட்டுக்கு வந்ததினால் காலரா மறைந்தது.

இந்த ஏற்பாடுகள் குறித்து அந்த சமயத்தில் மெட்ராஸ் மாகாண சட்டமன்ற கவுன்சிலில் பெரும் விவாதம் நடந்தது. புயல் கிளப்பிய விவாதம் அது! தொடரின் பிற்பகுதியில் அதை காண்போம்.

தொடர்ந்து பயணிப்போம்...

காவிரி நன்னீர் சிறப்பு

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0