Bharathiraja: "16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா" - கவுண்டமணி| Live Updates

Jun 10, 2026 - 10:01
0
Bharathiraja: "16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா" - கவுண்டமணி| Live Updates

கவுண்டமணி இரங்கல்

"16 வயதினிலே படம் தொடங்கி பாரதிராஜா இயக்கிய பல படங்களில் நான் நடித்துள்ளேன். 16 வயதினிலே படத்தில் எனக்கு முகவரி கொடுத்தவர் பாரதிராஜா. அவர் மாபெரும் கலைஞர்; அவர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்".

கவுண்டமணி
கவுண்டமணி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ:

திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது!

திரை உலகின் ஈடிலா பேரொளி அணைந்துவிட்டது. ஆனால், அந்த ஒளி வெள்ளத்தின் பிரகாசம் இருளையும், இரவுகளையும் கடந்து இன்னும் பன்னூறு ஆண்டுகளுக்கு ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

தென்பாண்டி மண்டலத்தின் உயிர் நாதமான கிராமங்களை வெட்டரிவாளும், வேலும் தாங்கிய வீர தமிழ்க் குலத்தின் மகத்தான மாண்பினை தலை கவிழாத தன்மானத்தை, ஓடும் சிற்றாறுகளின் சல சலப்பை பண்டுதொட்டு திகழ்ந்த தமிழனின் கலாச்சாரத்தை இமயத்தின் உச்சியில் நட்டு வைத்த கலை உலகின் முடிசூடா வேந்தன், நான் உயிராக நேசித்த பாரதிராஜா எனும் உன்னதப் படைப்பாளி ஐயோ போய்விட்டாரே! அந்த இடத்தை நிரப்புவதற்கு எக்காலத்திலும் எவராலும் இயலாது!

16 வயதினிலே என்ற திரைப்படம் வாலிப நெஞ்சங்களை காதல் எனும் மயிலிறகால் வருடியது.

வைகோ
வைகோ

அத்திரைப்படம் முடியும்போது கண்கள் கோர்த்த நீருடன் கனத்துப் போன இதயத்துடன் கொட்டகையை விட்டு வெளியேறினோம்.

கிழக்கே போகும் ரயிலில், காதல் உலகத்தை வலம் வந்தோம். புதிய வார்ப்புக்களில் நெஞ்சம் சிலிர்த்தோம். மண் வாசனையில் அரிவாளின் கூர்மையைத் தடவிப் பார்த்தோம். சிகப்பு ரோஜாக்களில் மர்ம பட மன்னன் ஹிட்ச்காக்கின் ஆளுமையை மீறல் கண்டோம்.

உலகிலேயே ஈடிலா நடிப்புலகின் விரிவானம் சிவாஜி கணேசனை மறு உயிர்ப்பாக முதல் மரியாதையாக சந்தித்தோம்.

பட்டிக்காடுகள் வெள்ளித் திரையில் பட்டணப் பிரவேசம் செய்வதைக் கண்டு பூரித்தோம்.

கடலோர கவிதைகளின் காதல் உணர்வில் உருகிப் போனோம். புதுமைப் பெண் படைப்பில் தமிழ்ப் பெண் புதுமை கண்ணகியாக சீறி எழுந்ததைக் கண்டு வியந்தோம்.

தமிழ்த் திரை உலகத்தின் போக்கை தலைகீழாகப் புரட்டிப் போட்ட புதிய கலை உலகை தரிசித்தோம்.

கைரேகை சட்டத்தால் வெள்ளையர் ஆட்சியில் கொடுமை சங்கிலிகளால் பூட்டப்பட்ட பிரமலைக் கள்ளர் சமூகம் கலை உலக பிரம்மாவை தமிழனுக்குத் தந்தது. என் உயிரினும் இனிய தமிழ் மக்களே! என்ற காந்தக் குரல் ஓசையை பாரதிராஜாவின் திரைப்படத்தின் முதல் நிமிடத்திலேயே செவிகளில் கேட்டு சிலிர்ப்படைந்தோம்!

பாரதிராஜா
பாரதிராஜா

அக்காவிய நாயகன் மேனியால் மறைந்தாலும், தன் படைப்புக்களால் காலனை வென்றுவிட்டான்; மரணத்தையும் சாய்த்துவிட்டான்! எனினும் நம்மை விட்டு அவர் பிரிந்தார் என நினைக்கையில் கண்கள் குளமாகின்றன! நெஞ்சம் துடிக்கிறது. காவிய நாயகனே! கலை உலகத்தின் கோகினூர் வைரமே! உன்னை எண்ணி இதயம் வெம்முகிறது, நெஞ்சம் கலங்குகிறது.

எந்த மலர்களால் நீ உன் காவியத் தலைவன் தலைவியை போற்றி எங்களை பூரிக்கச் செய்தாயோ அதே பூக்களை உன் மேனியில் தூவி புகழ் வணக்கம் செலுத்துகிறோம்!

என் பாரதிராஜாவே, கலை உலகின் உயிர்க் காவியமே உன் கீர்த்தி, காலங்களை வென்று ஒளிர்ந்துகொண்டே இருக்கும்! உன் புகழை உச்சரித்தால் எங்கள் உதடுகள் உயிர்க்கின்றன!

நின் பெயர் வாழிய! காலத்தை வென்று வாழிய!

உன் பரம ரசிகனின் நெஞ்சம் வடித்த இரங்கல் வணக்கம்!"

நடிகை ரேவதி பதிவு

"ஆன்மா சாந்தியடையட்டும் பாரதிராஜா சார். இன்று நான் ஒரு நடிகையாக இந்த இடத்தில் இருப்பதறதற்கும், நான் நடித்த படங்களுக்கும் நீங்கள் மட்டும்தான் மிக முக்கியமான காரணம்".

ரேவதி
ரேவதி

விஜய் நேரில் அஞ்சலி

சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கிறது.

அங்கே நேரில் சென்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நடிகை குஷ்பு:

"நாம் எல்லாரும் அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருந்த லெஜண்டரி இயக்குநர், நம்முடைய அன்பிற்குரிய பாரதிராஜா அவர்கள் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

அவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கு ஒரு கருமேகம் சூழ்ந்தது போன்ற பேரிழப்பாகும். அவர் எடுத்த படங்கள் என்றும் அழியாத மைல்கற்கள். இன்னும் சொல்லப்போனால் அவைதாம் சினிமா உலகிற்கான நிஜமான பாடம்.

ஒவ்வொரு சினிமா ரசிகனுக்கும் ஒரு மாபெரும் பாரம்பர்யத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

அவர் எப்போதும் என்னிடம், 'நாம ரெண்டு சடை பின்னல் போட்ட மாதிரி உன்னை வச்சு ஒரு படம் பண்ணலாம்' என்று கூறுவார். அது இனி நிறைவேறாத ஒரு கனவாகவே எஞ்சியிருக்கும். உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் சார்.

அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்.

ஓம் சாந்தி".

 குஷ்பு
குஷ்பு

சென்னையில் இன்று 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா தனது 84 வயதில் காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த இரங்கல்களின் பதிவுகள் இதோ...

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User