"வழிமுறை தெரியாது..": நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

Jun 13, 2026 - 15:01
0
"வழிமுறை தெரியாது..":  நழுவும் தலைமை மருத்துவர் : மரங்களை வெட்டிய தேவகோட்டை அரசு மருத்துவமனை

" பிள்ளைகளைப்போல வளர்த்தோம்..!"

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பி.எஸ்.எஸ். சாத்தப்ப செட்டியார் அரசு மருத்துவமனை வளாகத்தில் பல ஆண்டுகளாக நிழல் தந்து வந்த மரங்கள் திடீரென வெட்டிச் சாய்க்கப்பட்ட சம்பவம், தேவகோட்டை பகுதி சமூக ஆர்வலர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து நம்மிடம் வேதனையோடு பேசினார், இந்த மரங்களை நட்டுப் பராமரித்தவர்களில் ஒருவரான தேவகோட்டை நண்பர்கள் நடையாளர் சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளரும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எஸ். குமரப்பன்:

"சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் சங்கத்தின் மூலமாக இந்த மருத்துவமனை வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டோம். ஆடு, மாடுகள் மேய்ந்துவிடக் கூடாது என்று வேலி அமைத்து, தினமும் தண்ணீர் ஊற்றி, பிள்ளைகளைப் போலக் கஷ்டப்பட்டு வளர்த்தோம். இதில் மறைந்த 'பசுமை நாயகன்' மாரிமுத்துவின் பங்கு அளப்பரியது.

அந்த 100 கன்றுகளில் சுமார் 50 கன்றுகள் வளர்ந்து பெரிய மரங்களாகி, இன்றைக்கு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல நிழலையும் குளிர்ச்சியான காற்றையும் தந்து கொண்டிருந்தன. மருத்துவமனையின் மையப்பகுதியில் பலா, வேம்பு,வாகை,நெல்லி எனப் பல மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்கின.

ஆனால், சமீபத்தில் நான் மருத்துவமனைக்குச் சென்றபோது, அந்த மரங்களையெல்லாம் வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துவிட்டேன். சொல்லப்போனால் எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. 'மரத்தின் இலைகள் கட்டிடத்தின் மேல் விழுந்து பாதிக்கிறதா?' என்று அங்கிருந்த மருத்துவரிடம் கேட்டதற்கு 'ஆம்' என்றார்கள். அப்படியென்றால் கட்டிடத்திற்கு மேல் செல்லும் கிளைகளை மட்டும் வெட்டியிருக்கலாமே? நடுவில் இருக்கக்கூடிய முழு மரங்களையும் ஏன் வேரோடு வெட்ட வேண்டும்? வருங்காலத்திலாவது மருத்துவமனை நிர்வாகம் பாதிப்பு ஏற்படுத்தும் கிளைகளை மட்டும் வெட்ட வேண்டுமே தவிர, மரங்களை வெட்டக் கூடாது. உடனடியாக புதிய மரக்கன்றுகளை நட்டு மீண்டும் இங்குப் பசுமையை உருவாக்க வேண்டும்.இனிமேலும் இதுபோன்ற தவறுகளை பொதுமக்கள் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள்..." என்றார்.

"தெரியாமல் நடந்த தவறு'" - தலைமை மருத்துவர் விளக்கம்

மரம் வெட்டப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தேவகோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செங்கதிரோனைத் தொடர்புகொண்டு பேசினோம்.

"நான் கடந்த 20 வருடங்களாக இதே மருத்துவமனையில்தான் வேலை பார்க்கிறேன். கட்டிடத்தோட நிலைப்புத் தன்மைக்காகவும் ,பாதுகாப்பிற்காகவும், நோயாளிகளை நாம் சரியாகப் பராமரிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

சிலர் சொல்வது போல அதிக மரங்கள் எல்லாம் வெட்டப்படவில்லை; கட்டிடத்தைப் பாதித்த சுமார் இரண்டு அல்லது இரண்டரை மரங்கள் மட்டும்தான் வெட்டப்பட்டிருக்கின்றன. அந்த இடத்தில் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் அமர்வதற்கு நல்லதொரு 'ஷெட்' (Shed) அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் எனக்கு இருந்தது.

இந்த மரங்களை வெட்டுவதற்கு முன்னர் பொதுப்பணித்துறையிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதினோம்; ஆனால், அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. மரங்களை வெட்டுவதற்குப் பொதுப்பணித்துறை அனுமதி மட்டும் போதாது, வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற வேண்டும் என்ற அரசு வழிமுறை எனக்கு இப்போதுதான் தெரிந்தது. தெரியாத சூழ்நிலையில் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன்.

தற்போது வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து விசாரித்துச் சென்றுள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரசு வழிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

எங்கள் மருத்துவமனை வளாகத்தில் 200 வகைகளைக் கொண்ட 'மியாவாக்கி' குறுங்காடு ஒன்றை வைத்து இன்னமும் பசுமையாகத்தான் பராமரித்து வருகிறோம். தற்போது தெரியாமல் வெட்டிய மரங்களுக்குப் பிராயச்சித்தமாக, இன்னும் நிறைய புதிய மரக்கன்றுகளை மருத்துவமனை வளாகத்திற்குள் நட்டுப் பசுமையாக வளர்ப்போம்."

"சட்ட விவரம் தெரியாது என்பது ஏற்புடையதல்ல!" -

மருத்துவமனை நிர்வாகத்தின் இந்தச் செயலையும், விளக்கத்தையும் கடுமையாக மறுத்து, நகரின் பல்வேறு சமூக மற்றும் அரசியல் அமைப்புகள் தங்களின் கண்டனங்களை வலுவாகப் பதிவு செய்து வருகின்றன. இதுகுறித்து மருத்துவமனை வளாகத்திற்கு நேரடியாகச் சென்று

நகர இந்து முன்னணி அமைப்பினர் பார்வையிட்டுள்ளனர். அதன் நகரத் தலைவர் பி.டி. சுரேஷ்.ஜி நம்மிடம்,

"இங்கே இருந்த பத்துக்கும் குறையாத பெரிய மரங்களை கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் இப்போது வேரோடு வெட்டிச் சாய்த்திருக்கிறார்கள். கூரைப் பகுதிக்குப் பாதிப்பு என்றால் கிளைகளை மட்டும் வெட்டியிருக்கலாம்; ஒட்டுமொத்த மரங்களையும் வேரோடு வெட்டிச் சாய்க்க வேண்டிய அவசியம் என்ன?

இப்படி மரங்களை வெட்டிச் சாய்ப்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. மூன்று மாதங்களுக்கு முன்புதான் 60 - 70 வயது கடந்த 4 பெரிய சைஸ் வேப்ப மரங்களை வெட்டி விற்பனை செய்துள்ளனர். அதன் மதிப்பும் பல லட்ச ரூபாய் ஆகும். அப்போதும் வருவாய்த்துறைக்கு புகார் அளித்தோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இப்போதும் துணிச்சலோடு இந்த மரங்களை வெட்டி வீழ்த்தி உள்ளனர்.

பேரா.எஸ்.குமரப்பன், எஸ்.பி.டி.சுரேஷ்

இப்போது வேம்பு, பலா, மா, அசோகா, நெல்லி,வாகை போன்ற 10 மரங்களுக்குக் குறையாத பெரிய பெரிய மரங்களை வெட்டி துண்டுகள் போட்டு வைத்துள்ளனர். வெட்டுக் கூலி மட்டுமே பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது. அப்படியென்றால் இந்த மரங்களின் மதிப்பு எப்படியும் பல லட்ச ரூபாய் மதிப்புக்குக் குறையாது. அங்கு வெட்டிக் கிடக்கும் மரங்களைப் போய்ப் பார்த்தாலே வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையும், அதன் தற்போதைய சந்தை மதிப்பும் நன்றாகத் தெரியும்.

20 வருடங்களாக இதே மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் ஒருவர், மரம் வெட்ட அனுமதி கோரும் சட்ட விவரம் தனக்குத் தெரியாது என்று கூறுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. மரங்களை வெட்டிய நிர்வாகத்தின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நட வேண்டும். இதுதொடர்பாக அரசு உடனே உரிய விசாரணை செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் .

அரசு நடவடிக்கை என்ன?

இதுதொடர்பாக தேவகோட்டை தாலுகா வட்டாட்சியர் தங்கமணியிடம் பேசியபோது, "நாங்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டோம். மரங்கள் வெட்டப்பட்டிருப்பது உண்மைதான். இது குறித்து உரிய அரசு விதிமுறைகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

மனிதர்களின் உயிரைக் காப்பாற்றப் போராடும் மருத்துவமனைகள், தங்களுக்கு நிழலையும் தூய்மையான காற்றையும் தந்து நோயாளிகளின் பாதிப் பிணியைக் குணப்படுத்தும் மரங்கள் மீதும் சற்று கருணை காட்டலாம். தவறு நடந்துவிட்டது என்று கடந்து போகாமல், இழந்த பசுமையை மீட்க மருத்துவமனை வளாகத்தில் உடனடியாகப் புதிய மரக்கன்றுகள் நடப்பட்டு அவை முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!

மனிதர்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் மரங்களை, ஒரு அரசு மருத்துவமனை நிர்வாகமே வெட்டி வீழ்த்தியிருப்பது பெருங்கொடுமைதான்..!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User