இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

Jun 09, 2026 - 17:00
0
இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்; காரணம் என்ன?

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்' (Smithsonian's National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்' (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்.

புடவை
புடவை

2013 டிசம்பரில், விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து விலக்கி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய 300 நாள் பயணத்திற்கு மிக முக்கியமான பணி நடைபெற்றது. அந்தச் சவாலான நாளில், நந்தினி அவர்கள் சிவப்பு, நீல நிறம் கலந்த பட்டுப்புடவையை அணிந்திருந்தார். செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தை அடைந்து சரித்திரம் படைத்தது.

மங்கள்யான் வெற்றி பெற்ற போது, இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையில் பாரம்பர்யப் புடவை அணிந்த இந்தியப் பெண் விஞ்ஞானிகள் (நந்தினி ஹரிநாத், ரிது கரிதால், அனுராதா டி.கே போன்றோர்) ஆரத்தழுவித் தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடிய புகைப்படம் உலகெங்கும் வைரலானது.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் விண்வெளி வரலாற்று காப்பாளர் மாட் ஷிண்டெல் மிகவும் ஈர்க்கப்பட்டார். இந்தியாவின் இந்த 'ராக்கெட் பெண்களின்' (Rocket Women) கதையை உலகிற்குச் சொல்ல வேண்டும் என அவர் ஆசைப்பட்டார்.

நந்தினி ஹரிநாத்
நந்தினி ஹரிநாத்

2020ம் ஆண்டில், நந்தினி ஹரிநாத்தை மாட் ஷிண்டெல் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். இந்தியாவின் மங்கள்யான் வெற்றியையும், அதில் பெண்களின் பங்களிப்பையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் ஏதாவது ஒரு பொருளை அருங்காட்சியகத்திற்கு வழங்க முடியுமா என அவர் கேட்டார். அப்போதுதான், விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு விலகிய அந்த மிக முக்கியமான நாளில் தான் அணிந்திருந்த அந்தச் சிவப்பு-நீல நிறப் பட்டுப் புடவையை வழங்க நந்தினி சம்மதித்தார்.

புடவையும் அதற்குப் பொருத்தமான மேலாடையும் வாஷிங்டனில் உள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றடைந்தது. ஆனால், அமெரிக்கர்களுக்கு அதைக் கட்டத் தெரியவில்லை. எனவே அங்குள்ள ஆடை பராமரிப்பாளரான பெத் நைட் என்பவர், ஒரு பொம்மைக்கு அந்தப் புடவையை எப்படிச் சரியாகக் கட்டுவது என்பதை யூடியூப் வீடியோக்களைப் பார்த்துக் கற்றுக்கொண்டு நேர்த்தியாக அணிவித்துள்ளார்.

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் `கோள்களுக்கிடையேயான அறிவியல் சேகரிப்பில்' இடம்பெற்றுள்ள முதல் இந்தியப் பொருள் இந்தப் புடவைதான். அதேபோல அந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள முதல் புடவையும் இதுவே.

நந்தினி ஹரிநாத்
நந்தினி ஹரிநாத்

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்ணான சாலி ரைடு (Sally Ride) 1983-ல் அணிந்திருந்த புகழ் பெற்ற நீல நிற டி-ஷர்ட்டுக்கு அருகிலேயே நந்தினியின் இந்தப் புடவை பெருமையுடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பப் பெருமையையும், நம் பெண்களின் முன்னேற்றத்தையும் பறைசாற்றும் ஒரு தேசிய அடையாளமாக இந்தப் பட்டுப் புடவை இன்று அமெரிக்காவில் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ஒரு பெண் தனது தனித்துவமான அடையாளத்தை இழக்காமலேயே உலகத்தரம் வாய்ந்த சாதனைகளைப் படைக்க முடியும் என்பதற்கு இதுவே ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User