Nooru Saami: "பசியோட இருக்காத, பண உதவி பண்றேன்னு..." - ஏ.ஆர். முருகதாஸ்
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் முருகதாஸ் பேசுகையில், "இது நான் பிறந்த ஊரில் நடந்த ஒரு நிஜக் கதை. ஒரு உண்மைச் சம்பவத்தை என் நண்பர் சசி படமாக எடுத்திருக்கிறார். இந்த இடத்தில் நான் விஜய் ஆண்டனிக்கு என் வாழ்த்துகளையும் நன்றியையும் சொல்லியே ஆக வேண்டும்.
இங்குள்ள பலர் சசி சார் நிறைய இசை அமைப்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகம் செய்ததால், சசி சார் தன் படத்தில் ஒரு பெரிய ஹீரோவை இழக்க நேரிட்டது என்ற உண்மை பலருக்குத் தெரியாது.
அந்த ஹீரோவை வைத்து அவர் அந்தப் படத்தை எடுத்திருந்தால், அவருடைய பாதையே வேறு மாதிரி இருந்திருக்கும். தான் ஒரு இசை அமைப்பாளரையோ அல்லது ஒரு தொழில்நுட்பக் கலைஞரையோ அறிமுகப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அவருக்கு எதிராக யார் இருந்தாலும் அவர் சம்மதிக்க மாட்டார். சசி சார் எனக்கு முன்பே இயக்குநர் ஆகிவிட்டார்.
ஒருநாள் நான் ஏ.வி.எம்-ல் சசி சாரிடம், "நான் புதுசாகப் படம் இயக்க முயற்சிக்கப் போகிறேன்" என்று சொன்னேன். அப்போது நான் அசிஸ்டன்ட் டைரக்டர்.

அவர் என்னை வாழ்த்திவிட்டு. ஆனால், கொஞ்ச தூரம் சென்றதும் வண்டியை நிறுத்திவிட்டு என்னை அருகில் அழைத்தார்.
அவர் என்னிடம், "வேலையை விட்டுவிட்டு டைரக்ஷன் சான்ஸ் தேடுற. பணத்திற்காகக் கஷ்டப்படாத. முக்கியமாகப் பசியோடு மட்டும் இருந்துவிடாத. எப்போது உனக்கு எந்தப் பிரச்னை என்றாலும் எனக்கு ஒரு போன் பண்ணு. நான் பண உதவி செய்கிறேன்" என்றார்.
அந்தச் சூழ்நிலையில் அது எனக்கு அவ்வளவு பெரிய சந்தோஷத்தையும் நம்பிக்கையையும் தந்தது. நமக்கு ஒருவர் உதவி செய்கிறாரோ இல்லையோ, நம்மைப் பசியோடு விட்டுவிட மாட்டார் என்று ஒரு மனிதர் இருக்கிறார் என்று நினைக்கும் போதே ஒரு தனி தைரியம் வந்துவிடும்.
அதேபோல் இன்னொரு சம்பவமும் நடந்தது. என்னுடைய முதல் படமான 'தீனா' தொடங்கிய போது, முதல் படம் என்பதால் எனக்குள் சில குழப்பங்களும், படம் சரியாக வருமா என்ற பயமும் இருந்தது.
அந்த பயத்தின் காரணமாக, இரண்டு நாட்கள் ஷூட்டிங் முடிந்த பிறகு, இந்தப் படத்தையே கைவிட்டுவிடலாம் என்று கூட நான் ஒரு கட்டத்தில் முடிவு செய்திருந்தேன்.
மனம் முழுக்கக் குழப்பத்தோடு ஒரு ரிசப்ஷனில் அமர்ந்திருந்த போது, தற்செயலாகச் சசி சாரைப் பார்த்தேன். அவர் எனக்கு வாழ்த்துகள் சொன்னார்.

நான் அவரைத் தனியாக அழைத்து, "இல்லைங்க, படம் சரியாக வராது போலிருக்கிறது. நிறுத்தலாம் என்று இருக்கிறேன்" என்றேன்.
அவர் பதற்றமாகி, என்னைத் தனியாக கூட்டிச் சென்று, "இங்க பாரு, படத்தை வேண்டாம் என்று சொல்லி பாதியிலேயே வெளியில் வந்துவிட்டால், அதுவே அந்தப் படத்தின் தோல்விக்குச் சமம். போராடு.
நாம் நினைத்தபடி நூறு சதவீதம் வராவிட்டாலும், ஒரு எழுபது சதவீதம் வந்துவிட்டாலே அது ஆடியன்ஸுக்கு நூறு சதவீதத் திருப்தியைக் கொடுத்துவிடும்" என்று நம்பிக்கை தந்தார். நான் மறுநாளே அந்தப் படத்தை மீண்டும் தொடர்ந்து செய்ததற்கு காரணம் என் நண்பன் சசிதான்."என்றார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)