பாரதிராஜா : திரையில் கிராமங்களைக் கொண்டாடிய மகா கலைஞன்!
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
தமிழ்ச் சினிமாவின் இலக்கணத்தை, ஸ்டுடியோக்களின் நான்கு சுவர்களுக்குள் இருந்து மீட்டெடுத்து வயல்வெளிகளிலும்,பொட்டல்காடுகளிலும் புடம் போட்டு திரைச்சீலைகளில் சேற்றையும்,சகதிகளையும் பூசி சினிமாவை,கிராமத்து மண்வாசனைக்கு மாற்றிய மாயாஜாலத்திற்கு சொந்தக்காரர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
பாரதிராஜா வெறும் இயக்குனர் மட்டும் அல்ல.அவர் கேமராவால் கிராமத்தின் கவிதைகளை எழுதியவர்.80 -களில் தமிழ் சினிமா நகர்ப்புறத்து வன்முறைகளிலும், செயற்கையான நாடகத் தனங்களிலும் மூழ்கியிருந்தபோது, திரையரங்கிற்குள் கிராமத்து மண்ணின் வாசனையையும், ஈரப்பதத்தையும் கொண்டு வந்த மாயாஜாலக்காரர்.
மரம்,செடி,கொடி,ஓடும் ஆறு, பெய்யும் மழை என அனைத்தையும் வெறும் பின்னணியாகப் பயன்படுத்தாமல்,கதையின் முக்கியக் கதாபாத்திரங்களாகவே மாற்றியவர்.பாரதிராஜாவின் படங்களில் 'சிவப்பு' நிறத்திற்கு எப்போதும் ஒரு முக்கியத்துவம் இருக்கும். அது காதலின் தீவிரத்தையோ அல்லது ஆபத்தின் அறிகுறியையோ காட்டும் ஒரு மாயாஜாலக் குறியீடாக அவரின் படங்களில் இருக்கும்.

திரையுலகிற்கு அவர் அறிமுகப்படுத்திய ராதிகா, ராதா,ரேவதி,ரஞ்சனி என "ஆர்" எழுத்து நாயகிகள் மற்றும் கார்த்திக்,நிழல்கள் ரவி போன்ற நடிகர்கள் இன்று வரை தமிழ்த் திரையுலகின் அடையாளங்களாக விளங்குவதற்கு பாரதிராஜாவின் அவதானிப்புத் திறமையும்,அந்த மந்திரப் பார்வைதான் காரணம்.
பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த பல காட்சிகள் ரசிகர்களின் நெஞ்சில் கல்வெட்டாய் பதிந்தவை.'16 வயதினிலே' - படத்தின் இறுதிக் காட்சியில், பரட்டை மயிலை வன்புணர்வு செய்ய முயலும்போது, அதுவரை கோழையாக இருந்த சப்பாணி ஒரு பெரிய கல்லைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் காட்சியும், இறுதியில் "என் மயிலு கைல ஒருத்தன் கை வச்சுட்டான்ல..." என்று உருகும் இடமும் தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட உணர்ச்சிப் பிழம்பு.
நடோடித் தென்றல் படத்தில் தன் முறைப்பெண்ணான ரஞ்சிதாவை மூக்குக் குத்த கூட்டி வரும் பாண்டியனிடம் நெப்போலியனும்,ரஞ்சிதாவிடம் கார்த்திக் செய்யும் பயமுறுத்தும் சேட்டைகளும் நிறைந்த காட்சிகளில் தியேட்டர் கரவொலியிலும்,சிரிப்பொலியிலும் அதிரும்.
'முதல் மரியாதை' படத்தில் சிவாஜி,ராதா வயது வித்தியாசத்தைக் கடந்து, இரு ஆன்மாக்களுக்கு இடையே உள்ள புனிதமான நட்பையும் காதலையும் சொல்லிய விதமும். குறிப்பாக,ஆற்றங்கரையில் சிவாஜியும் ராதாவும் பேசிக்கொள்ளும் ஒவ்வொரு காட்சியும்,பின்னணியில் இளையராஜாவின் இசையும் சேர்ந்து பார்ப்பவர்களைக் கண் கலங்க வைக்கும்.
'கருத்தம்மா' திரைப்படம் பெண் சிசுக்கொலைக்கு எதிராக சாட்டை சொடுக்கியது.நெஞ்சை உலுக்கும் அந்தப் படத்தின் இறுதிக் காட்சிகள் மற்றும் கிராமத்து எதார்த்தங்கள் பார்வையாளர்களின் மனசாட்சியை உலுக்கியெடுத்தன.அன்றைய தமிழகத்தின் முக்கிய பேச்சாளராக அறியப்பட்ட பேராசிரியர் பெரியார்தாசனை இப்படத்தில் அறிமுகப்படுத்தி,முதல் படத்திலேயே நடிப்பில் ஸ்கோர் செய்ய வைத்தார் பாரதிராஜா.

பாரதிராஜாவின் வெற்றிக்கு பின்னால் இருந்த உறவுகள் சாதாரணமானவை அல்ல.அவை உணர்வுப்பூர்வமான பிணைப்புகள்.பாரதிராஜா - இளையராஜாவின் கூட்டணி தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த வரம்.ஒரு கிராமத்து ஆற்றின் ஓட்டத்தை பாரதிராஜா காட்சியாக்கினால், அதற்கு தன் இசையால் உயிர் கொடுப்பார் இளையராஜா.இருவருக்கும் இடையே சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்தபோதும், அவர்களின் நட்பு காலத்தைக் கடந்தது. "என் பாட்டுக்கு இவன்தான் காட்சி வடிவம் கொடுக்க முடியும்" என்று இளையராஜாவே உருகிப் பேசிய தருணங்கள் உண்டு.
ரஜினி,கமல் இருவரையும் முற்றிலும் புதிய கோணத்தில் கையாண்டவர்.ரஜினிக்கு 'பரட்டை' என்ற வில்லத்தனமான பாத்திரத்தையும்,கமலுக்கு 'சப்பாணி' என்ற அப்பாவிப் பாத்திரத்தையும் கொடுத்து, அவர்களின் திரை வாழ்க்கையையே மாற்றியமைத்த பெருமைக்குச் சொந்தக்காரர்.
திரையில் எத்தனையோ சோகக் கதைகளை,உணர்ச்சிக் குவியல்களை கையாண்ட பாரதிராஜா என்ற மகா கலைஞனை,அவரது நிஜ வாழ்க்கை மிகக் கொடூரமாக உலுக்கிய தருணம் அவரது மகன் மனோஜின் மறைவு.உலகிற்கே உணர்ச்சிகளைச் சொல்லிக் கொடுத்த ஒரு தந்தையால், தன் சொந்த மகனின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை.
பாரதிராஜா தன் மகன் மனோஜை தாஜ்மஹால் படத்தின் நாயகனாக அறிமுகப்படுத்தினார்.ஒரு பெரிய நடிகராகவும் இயக்குனராகவும் மகனைப் பார்க்க ஆசைப்பட்டார்.ஆனால், எதிர்பாராத அந்தப் பிரிவு பாரதிராஜாவை முற்றிலும் உடைத்துப் போட்டது.திரையில் 'இமயம்' போல் கம்பீரமாக நின்ற மனிதர், ஒரு சாதாரணத் தந்தையாகக் கூனிக் குறுகிப் போனார்.மகனின் மறைவுக்குப் பின், அவர் கடுமையான மன அழுத்தத்திற்கும், ஒருவித தனிமைக்கும் ஆளானார். எப்போதும் சுறுசுறுப்பாக, படப்பிடிப்புத் தளத்தில் சிங்கம் போல் கர்ஜிக்கும் பாரதிராஜா, அதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் பேசும்போதே தழுதழுத்து, கண்கள் கலங்குவதை உலகம் கண்டது.
ஒரு படைப்பாளியாக அவரது கற்பனைத் திறன், இந்தத் தனிப்பட்ட சோகத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது. "நான் எத்தனையோ பேருக்கு வாழ்வளித்தேன், ஆனால் என் மகனை என்னால் தக்கவைக்க முடியவில்லையே" என்ற குற்ற உணர்ச்சியும்,பேரழிவும் அவரை உளவியல் ரீதியாகப் பெரிதும் பாதித்தது.

பாரதிராஜா என்பது வெறும் பெயரல்ல, அது தமிழ் சினிமாவின் ஒரு சகாப்தம். திரையில் அவர் நிகழ்த்திய மாயாஜாலங்கள் ஏராளம். வாழ்க்கையின் ஆகப்பெரும் சோகத்தையும் வலியையும் சுமந்து கொண்டு வாழ்ந்த அந்த இயக்குனர் இமயம் எனும் ஆத்மா இளைப்பாற வேண்டும் என்பதே இயற்கையைக் கொண்டாடிய அவருக்கு இயற்கை தந்த வரம், தமிழ் நெஞ்சங்களின் என்றும் அழியாத இயக்குனர் இமயமாகவே அவர் நிமிர்ந்து நிற்பார் என்பதில் பிரிதோர் கருத்தில்லை!
- க.தங்கபாபு
முத்துப்பேட்டை.

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)