1.5 ஏக்கர் நிலத்திற்காக நடந்த கொடூரம்; மருமகளை கழுத்தை அறுத்துக் கொன்ற மாமனார்; தெலங்கானாவில் பகீர்
தெலங்கானா மாநிலத்தில் உள்ள மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள ஓபுலயபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனிதா(28), இவர் 12 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்தல் தண்டா என்ற கிராமத்தைச் சேர்ந்த பல்ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
பல்ராமுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஓராண்டுக்கு முன், கிராமப் பெரியவர்கள் தலையிட்டு, பல்ராமின் 1.5 ஏக்கர் நிலத்தை, சுனிதா பெயரில் பதிவு செய்து, பிரச்னையைத் தீர்த்து வைத்தனர்.
இந்த முடிவு பல்ராமின் மூத்த சகோதரர்களான பாண்டு நாயக் மற்றும் மான்யா நாயக் ஆகியோரை கோபப்படுத்தியது. நிலைமை மோசமானதால் சுனிதா தனது குழந்தைகளோடு தனது பெற்றோரின் கிராமத்தில் சென்று வசித்து வந்தார். ஆனால் சுனிதாவின் பெற்றோர் சிந்தல் தண்டாவிற்குச் சென்று சொந்தமாக வீடு கட்டி அங்கேயே வாழும்படி கேட்டுக்கொண்டனர்.

அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது இரண்டு மகள்களுடன் சிந்தல் தண்டாவிற்கு வந்து சுனிதா வசிக்க ஆரம்பித்தார்.
நேற்று சுனிதா தனது தோட்டத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்நேரம் அவரது மாமனார் மாணிக்ய நாயக், மைத்துனர்கள் மான்ய நாயக் மற்றும் பாண்டு நாயக் மற்றும் பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் அவரை வழிமறித்தனர். அவர்கள் சுனிதாவைத் தங்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்றனர்,
அங்கு அவர்கள் அவரை கத்தியால் தாக்கினர். அவரை கழுத்தை அறுத்து தலையைத் துண்டித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சுனிதாவின் தந்தை விரைந்து வந்தார். அவர் கொடுத்த தகவலின் பேரில் போலீஸார் சுனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் நாகராஜு கூறுகையில், "சுனிதாவின் தந்தை வல்யா நாயக் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்துள்ளோம். சுனிதாவின் மாமனார் மாணிக்ய நாயக், மைத்துனர்கள் மான்ய நாயக், பாண்டு நாயக், பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களைக் கண்டுபிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)