418 Review: காலேஜ் ஹாஸ்டல் அறைக்குள் குடியிருக்கும் பேய்! - திக் திக் காட்டுகிறதா?

Oct 25, 2026 - 22:30
0
418 Review: காலேஜ் ஹாஸ்டல் அறைக்குள் குடியிருக்கும் பேய்! - திக் திக் காட்டுகிறதா?

விவேக்கை (சூர்யா ராஜ் வீரபதினி) மருத்துவராக்க வேண்டும் என்கிற ஆசையோடு அவரின் பெற்றோர், சொத்தை மொத்தமாக விற்று, அவரை VIMS மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறார்கள். அந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகமாவதால் நீண்ட வருடங்களாக பூட்டப்பட்டிருந்த கல்லூரியின் மனநல மருத்துவமனை பகுதியை கல்லூரி நிர்வாகம் திறந்து, அதனை விடுதியாக மாற்ற முடிவு செய்கிறது.

418 Review
418 Review

அங்கு நிகழ்ந்த அமானுஷ்யமான கொலை சம்பவமே அந்தப் பகுதி பூட்டி வைக்கப்பட்டதற்குக் காரணம். மருத்துவக் கல்லூரியில் சேரும் விவேக்கிற்கு, கொலை சம்பவம் நிகழ்ந்த பக்கத்து அறை வழங்கப்படுகிறது. இதன் பிறகு நடக்கும் திகில் விஷயங்கள் என்னென்ன, அதன் பிளாஷ்பேக் என்ன என்பதை வழக்கமான பேய் பட இலக்கணத்தோடு சொல்கிறது இயக்குநர் கீர்த்தன் நடகவுடாவின் இந்த '418'.

அச்சம், படபடப்பு, தடுமாற்றம் நிறைந்த உடல்மொழி என இந்த '418' கதவைத் திறந்து நம்மையும் உள்ளே கூட்டிப் போகிறார் சூர்யா ராஜ் வீரபதினி. பதின்வயது இளைஞர்களுக்கான சேட்டையும், ஆபத்து நிறைந்த விஷயங்களை ஆராய நினைக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தி டிஸ்டிங்ஷன் வாங்குகிறார்கள் சரண் லக்கராஜூ மற்றும் பிரீத்தி பகடாலா.

418 Review
418 Review

சமூகம் தரும் அழுத்தம், அதனால் ஏற்படும் உளவியல் ரீதியான பாதிப்பு என தேவிகா கதாபாத்திரத்திற்கு அழுத்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் சைத்ரா ஜே.ஆச்சார். மிகை நடிப்பை வெளிப்படுத்தும் திகில் எபிசோடுகளிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையைக் குறையில்லாமல் செய்து முடித்திருக்கிறார். இந்த பிரதான கதாபாத்திரங்களைத் தாண்டி ரமேஷ் இந்திரா, ஷஷாங்க் படில், ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் சிரிப்பு, பயம், பதற்றம் என அந்தந்த காட்சிகள் கோரும் டிரீட்மென்ட்டைத் தந்திருக்கிறார்கள்.

காட்டுக்குள் அமைந்திருக்கும் மருத்துவக் கல்லூரி, குறுகிய விடுதி அறைகள் போன்றவற்றைத் திகில் உணர்வு உண்டாகும் வகையில் இருள் லைட்டிங்கில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் திவாகரன். பிளாஷ்பேக், அதன் பிறகு நடக்கும் பேயின் ஆட்டங்கள் என இரண்டாம் பாதியை துடிப்போடு கொண்டு போயிருக்கும் படத்தொகுப்பாளர் அகுல் அவினாஷ், முதல் பாதியை சுற்றவிடாமல் இன்னும் 'ஷார்ப்' ஆக்கியிருக்கலாம்.

418 Review
418 Review

வெங்கி ஜிஜி இசையில் வரும் தமிழ் டப்பிங் பாடல்கள் பெரியளவில் ஈர்க்கவில்லை என்றாலும் பின்னணி இசையில் திக் திக் உணர்வை பற்ற வைக்கிறார். இதற்கு ஒலி வடிவமைப்பாளர் அனுபம்.சி-யின் நேர்த்தியான வேலையும் பக்கபலமாக இருந்திருக்கிறது.

அறையில் குடியிருக்கும் பேய், அங்கு ஏற்படும் திகில் விஷயங்கள் என வழக்கமான பேய் பட ஃபார்முலாவுக்குள்ளாகவே இதனைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். முதன்மை கதாபாத்திரங்கள் மற்றும் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்ட பில்டிங்கின் பின்னணிக் கதை என்பதாகவே முதல் பாதியின் பெரும்பான்மையாக கதை நகர்கிறது. இவற்றில் சுவாரஸ்யத்தையும், திகில் விஷயங்களையும் இருள் மூடிக்கொள்கிறது. வழக்கம்போல ஒருவர் பேய் இருக்கிறது என நம்ப, மற்றவர் அதை நம்பாமல் முரண்டு பிடிக்க... என இந்த எபிசோடில் எந்த புதுமையும் இல்லை. இப்படியாக நகரும் படம் இடைவேளையில் ட்விஸ்ட்டோடு ஒரு வழியாக சுவாரஸ்யத்தைக் கண்டடைகிறது.

418 Review
418 Review

சம்பிரதாய பேய் பட பிளாஷ்பேக்கோடு தொடங்கும் இரண்டாம் பாதியில் முக்கியமான உரையாடல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. குழந்தையின்மையை சுட்டிக்காட்டி பெண்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம், அது அப்பெண்களுக்குள் ஏற்படுத்தும் உளவியல் ரீதியான பாதிப்புகள் என்பதை எடுத்துரைத்ததற்குப் பாராட்டுகள். இதன் பிறகான காட்சிகளுக்கு நாம் ஏற்கெனவே பார்த்த பல பேய் பட டென்ஷன்களையே கடன் வாங்கினாலும், சின்ன சின்ன புது ஐடியாக்கள் திரைக்கதையைத் தள்ளாடாமல் கூட்டிப் போகின்றன. சில வழக்கமான அறிகுறிகள் தென்பட்டாலும் ட்விஸ்ட்கள், அதனுடன் திகில் விஷயங்கள் அமைக்கப்பட்ட விதம் க்ளைமாக்ஸின் உயிரைக் காப்பாற்றுகின்றன. ஆனால், லாஜிக்கை பேய் ஓட்டுவது போல் ஓட்ட முடியாது இயக்குநரே!

முக்கியமான உரையாடல், நேர்த்தியான தொழில்நுட்பக் குழுவின் உழைப்பு படத்தை பளிச்சிட வைக்கிறது. ஆனால், ஃபார்முலா வகையறாவுக்குள் இந்த பேய் படத்தின் பெரும்பகுதி சிக்கிக் கொள்வதால் `418' குறுகிய அறையாகவே சுருங்கிப் போகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User