"15 நாள் ஷூட், பவதாரிணி பாடல்" - பாரதிராஜாவின் கடைசிப் படமான 'தாய் மெய்' குறித்து வசனகர்த்தா சிவாஜி

Jun 10, 2026 - 13:02
0
"15 நாள் ஷூட், பவதாரிணி பாடல்" - பாரதிராஜாவின் கடைசிப் படமான 'தாய் மெய்' குறித்து வசனகர்த்தா சிவாஜி

திரையில் இரு கரங்களைக் கூப்பியபடி கரகர குரலில் பேசிய நம் பாசத்துக்குரிய பாரதிராஜா நம்மிடமிருந்து விடை பெற்று விட்டார்.

தமிழ்த் திரையுலகம் மீளாத் துயரில் விழுந்து கிடக்கிற சூழலில் கடைசியாக அவர் நடித்து இயக்கிய படம் குறித்து அந்தப் படத்தின் வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜியிடம் பேசினோம்.

''நான் வீதி நாடங்கள்ல நடிச்சிட்டிருந்தவன், திண்டுக்கல்ல ஒரு நாடக மேடையில அவரை முதன் முதலா சந்தித்தேன். முதல் சந்திப்புலயே ‘இவன் என் அப்பன் பெரியகருப்புத் தேவரை நினைவு படுத்திட்டாண்டா’னு என்னைக் கட்டிப் பிடிச்சார்.

அந்த நாள்ல இருந்து அவருடன் பயணிக்கத் தொடங்கினேன். பிறகு டிவியில தெக்கத்திப் பொண்ணு உள்ளிட்ட சில சீரியல்களை அவர் இயக்கினப்ப வசனம் எழுதற வாய்ப்பைத் தந்தார்.

அவருடன் கதை விவாதம், ஷூட்டிங் லொகேஷன் பார்க்கன்னு பல நாள்கள் ராத்திரி பகலா உட்கார்ந்திருந்திருக்கேன். எனக்கு அவர்தான் குரு.

சுருளிபட்டி சிவாஜி பாரதிராஜாவுடன்
சுருளிபட்டி சிவாஜி பாரதிராஜாவுடன்

கடைசியா ’தாய் மெய்’ங்கிற படத்தைத் தொடங்கினார். இயக்கி அவரே முக்கியமான கேரக்டரில் நடித்தார். நான் கதை வசனம், பவதாரிணி நான்கு பாடல்களைப் பாடியிருந்த வேளையில அவங்களும் இறந்துட்டாங்க. தேனி பக்கம் ஷூட்டிங் போனோம்.

பதினைஞ்சு நாள் ஷூட் பண்ணியிருப்போம். ஷூட் போயிட்டிருக்கும் போதே தேனியிலயே குளிக்கிறபோது வழுக்கி விழுந்துட்டார். அதனால சிகிச்சைக்கு சென்னை வந்துட்டதால ஷூட்டிங்கை நிறுத்திட்டோம்’’ என்றவரிடம் தாய்மெய் கதை குறித்துக் கேட்டோம்.

‘’பையன் வளர்ந்து கல்யாணம்லாம் பண்ணின பிறகு அம்மா கர்ப்பமாகுறாங்க என்ற கோணத்துல போன ஒரு கதை. கடைசியில பையனுக்கு அவரே கொல்லி வைக்கிற மாதிரி கதை முடியும். இப்படியொரு கதையை அவர் தயார் செய்து படத்தைத் தொடங்கின கொஞ்ச நாள்லயே அவர் பையன் மனோஜ் இறந்துட்டார்.

மனோஜ் மறைவுக்குப் பிறகு ஆள் மனசளவுலயும் உடைஞ்சு போனதால அந்தப் படமும் அப்படியே நின்னுடுச்சு.

அந்தப் பதினைந்து நாள் ஷூட்டிங் நினைவுதான் இப்ப கண்முன் வந்து போகுது’’ எனக் கண் கலங்குகிறார் சிவாஜி.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User