'காங்கிரஸ் MLAக்களுடன் மட்டும் 45 நிமிட ஆலோசனை!- விஜய்யின் எம்.எல்.ஏக்கள் மீட்டிங்கில் என்ன நடந்தது?
தவெக அரசு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் நடந்த சுவாரஸ்யங்கள் இங்கே.

சமீபத்தில்தான் தவெக எம்.எல்.ஏக்களை முதல்வர் விஜய் சந்தித்திருந்தார். அவர்களின் தொகுதி பிரச்னைகளை கேட்டறிந்து மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கி அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்துதான் கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களையும் முதல்வர் விஜய் இன்று சந்திக்க திட்டமிட்டார்.
வெளிப்படையாக ஆட்சி குறித்து அரசியல் எதுவும் பேசாமல் மரியாதை நிமித்தமான சந்திப்பாகவே இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற பெரும்பான்மை சம்பந்தப்பட்டு ஆதரவு, எதிர்ப்பு விவகாரங்களெல்லாம் பேசப்படாது என தவெக முகாம் கொடுத்த உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்களும் அவர்களின் தலைமையால் கூட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் எம்.எல்.ஏக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் வந்திருந்தனர்.

ஆதரவுக் கட்சிகளில் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 14 எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இவர்களை மொத்தமாக சந்திக்காமல் கட்சிவாரியாக குழுக்குழுவாக தனித்தனியாக அழைத்துப் பேசியிருக்கிறார் விஜய். கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் நால்வருமே டெல்டா மாவட்டங்களில் நிலவும் வறட்சி பற்றி பேசியிருக்கின்றனர். முதல்வரே நேரில் வந்து டெல்டா மாவட்டங்களை பார்வையிட வேண்டும் எனக் கோரியிருக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன் வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டது, அந்த நிலை இப்போது வந்துவிடக்கூடாது, அதற்குள் விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்கிவிட வேண்டுமன உருக்கமாக கூறியிருக்கின்றனர். கவனமாக கேட்டுக் கொண்ட விஜய், 'விவசாயிகள் பிரச்னையை நானும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் அச்சப்படும் விஷயங்கள் நடக்காது. என்ன நடவடிக்கையை தேவையோ அதை சரியாக செய்ய சொல்கிறேன்' எனக் கூறியவர், டெல்டா மாவட்டங்களை பார்வையிட வருவதாகவும் கூறியிருக்கிறார். கன்னியாகுமரியில் உற்பத்தியாகும் ரப்பருக்கு 1% செஸ் வரி விதிக்கப்படுவதை நீக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளையும் எடுத்து வைத்திருக்கின்றனர். அவற்றை கவனமாக கேட்டதோடு 'உரிய நடவடிக்கை எடுக்கிறேன்' என தனது டைரியிலும் முதல்வர் குறித்து வைத்திருக்கிறார்.
காலில் அடிபட்டிருந்தாலும் முதல்வரின் கூட்டத்திற்கு தவறாமல் வந்திருக்கிறார் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் தாரகை. காங்கிரஸின் 5 எம்.எல்.ஏக்களுடன் மட்டும் 45 நிமிடங்களுக்கு முதல்வர் பேசியிருக்கிறார். மயிலாடுதுறை அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேடு, குப்பைக்கிடங்கு பிரச்னை, மருத்துவக் கல்லூரி கோரிக்கை, சர்க்கரை ஆலை கோரிக்கை என மயிலாடுதுறை எம்.எல்.ஏ யூனுஸ் முதல்வரிடம் வரிசையாக அடுக்க, ஒவ்வொரு விவகாரம் குறித்தும் கேட்டுக் கொண்டு அதிகாரியிடம் பேசுவதாக உறுதியளித்திருக்கிறார் விஜய். மலையாள நெடியுடன் பேசும் விளவங்கோடு எம்.எல்.ஏ பிரவீண், 'செங்கல் சூளை பிரச்னை, ரப்பர் அரசுக் கழகம் விவகாரம், தொகுதியின் அடிப்படை வசதிகள்' என சில கோரிக்கைகளை அடுக்கியிருக்கிறார். காங்கிரஸின் சட்டமன்றக் குழுத்தலைவரான தாரகை, 'கடந்த ஆண்டில் மட்டும் குமரியில் 15 மீனவர்கள் கடலில் தத்தளித்து இறந்திருக்கின்றனர்' எனக் கூற அதிர்ச்சியடைந்த முதல்வர், 'உயிரிழப்புகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டிருக்கிறார். அதற்கு, 'மீனவர்கள் கடலில் சிக்கினால் உடனே காப்பாற்ற கடல் ஆம்புலன்ஸ் சேவையை கொண்டு வர வேண்டும்' எனக் கூறியிருக்கிறார். உடனடியாக நடவடிக்கை எடுக்கிறேன் என முதல்வர் கூறியிருக்கிறார். காங்கிரஸ் அமைச்சர்கள் இருவரும் அரசு சிறப்பாக நடப்பதாக மெச்ச முதல்வரும் நன்றி கூறி வாழ்த்து சொல்லியிருக்கிறார்.
வன்னி அரசுவின் துறைசார்ந்த பணிகளை முதல்வர் பாராட்ட, பதிலுக்கு கொள்கை சார்ந்த விவகாரங்களில் அரசு இன்னும் தீவிரமாக இருக்க வேண்டுமென அவர் கோரிக்கை வைத்ததாகத் தகவல்.
பல எம்.எல்.ஏக்கள், 'இதேமாதிரியான கூட்டத்தை 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்த வேண்டும்' எனக் கேட்டிருக்கின்றனர். 'நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செயலாளரிடம் நேரம் கேட்டுவிட்டு சேம்பரில் வந்தே என்னை சந்தித்துப் பேசலாம். உங்களை சந்தித்து பேச நானும் ஆர்வமாக இருக்கிறேன்' என முதல்வர் கூறி எம்.எல்.ஏக்களை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)