ஆயுதபூஜை: 'அரிசி விலை உயர்வால், உயர்ந்த பொரி விலை!' - கரூரில் பொரி வியாபாரம் மும்முரம்
நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான ஆயுதபூஜையின்போது, தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்து, அவற்றுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கம். அதேபோல், வீடுகளில் குழந்தைகளின் நோட்டுப் புத்தகங்களை வைத்து சரஸ்வதி தேவியை வழிபடுகின்றனர். இந்நிலையில், இந்த வழிபாட்டின்போது பொரி, அவல், நிலக்கடலை மற்றும் பழ வகைகள் படையலாக வைக்கப்படுகின்றன. இதில் பொரி முக்கிய இடம் பிடிப்பதால், ஆயுதபூஜையை முன்னிட்டு கரூரில் பொரி தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வகை அரிசிகளிலும் பொரி தயாரிக்க முடியாது.

இதற்காக ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஐ.ஆர்.50, ஐ.ஆர்.64 ரக அரிசிகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த அரிசியை தண்ணீரில் ஊறவைத்து, உப்பு, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களைச் சேர்த்து உலர்த்துகின்றனர். பின்னர், உரிய பக்குவத்துக்கு ஏற்ப பதப்படுத்தப்பட்ட அரிசியை, விறகுகளைக் கொண்டு சூடாக்கப்படும் பிரத்யேக உலையில் இட்டு பொரியாகத் தயாரிக்கின்றனர்.
கடந்த ஆண்டு 60 பக்கா அளவு கொண்ட ஒரு மூட்டை பொரி ரூ.600-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு அதன் விலை ரூ.700 ஆக உயர்ந்துள்ளது. சில்லறை விற்பனையில் கடந்த ஆண்டு ஒரு பக்கா பொரி ரூ.15-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது அரிசி விலை உயர்வு காரணமாக ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜையை ஒட்டிய காலகட்டத்தில் மட்டும் ஆண்டுதோறும் சுமார் 10,000 -க்கும் மேற்பட்ட மூட்டைகள் பொரி தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கரூர் மட்டுமன்றி வெள்ளியணை, க.பரமத்தி, உப்பிடமங்கலம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கரூருக்கு நேரில் வந்து பொரியை மொத்தமாகக் கொள்முதல் செய்து செல்கின்றனர். ஆயுதபூஜைக்கு இன்னும் இரண்டே நாட்கள் இருப்பதால், பொரிக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அரிசி விலை உயர்வு காரணமாக பொரியின் விலையும் உயர்ந்துள்ளதாக கரூரில் மும்முரமாக பொரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பொரி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)