'காலநிலை மாற்றம்; எல் நினோ ஆய்வு!' - கரூரிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 'மிஷன் வானம்-01’

Oct 17, 2026 - 19:00
0
'காலநிலை மாற்றம்; எல் நினோ ஆய்வு!' - கரூரிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 'மிஷன் வானம்-01’

முன்னாள் குடியரசுத் தலைவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான மறைந்த பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு, மாணவர்களிடையே அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கரூர் மாவட்டம், தான்தோன்றிமலையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, UNIZS பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் விக்னேஷ் தலைமையிலான குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

vignesh

சிறுவயது முதலே செயற்கைக்கோள் உருவாக்க வேண்டும் என்ற கனவுடன் செயல்பட்டு வந்த விக்னேஷ், தனது முயற்சியின் ஒரு பகுதியாக, 2.5 கிராம் எடை கொண்ட மினி செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள கரூரில் நிலவும் காலநிலை மாற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கம் தொடர்பான தரவுகளைச் சேகரித்து ஆய்வு செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதோடு, உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கியூப்சாட் வகை பேலோடுடன் கூடிய மினி செயற்கைக்கோள், பிரத்யேக வானிலை பலூன் மூலம் உயர்வளிமண்டலத்தை நோக்கி அனுப்பப்பட்டது.

‘மிஷன் வானம்-01’

அந்த பலூனுடன் இணைக்கப்பட்டுள்ள சென்சார்கள் மூலம் வளிமண்டலக் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் புற ஊதாக் கதிர்வீச்சு தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படுகின்றன. இந்தத் தரவுகள் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பப்பட்டு, அறிவியல் ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

மேலும், ஆய்வுப் பணிகள் நிறைவடைந்த பின்னர், பாராசூட் உதவியுடன் பேலோடைப் பாதுகாப்பாகத் தரையிறக்கி, ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் அதன் இருப்பிடத்தைக் கண்டறிந்து மீட்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், வெற்றிகரமாக விண்ணில் பறக்கவிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் விண்ணில் பறக்கவிடப்பட்ட காட்சியையும், அதிலிருந்து பெறப்படும் நேரலைத் தகவல்களையும் நேரில் கண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உற்சாகமடைந்தனர்.

‘மிஷன் வானம்-01’

மாணவர்கள் மத்தியில் அறிவியல் சிந்தனையையும், விண்வெளி ஆராய்ச்சி மீதான ஆர்வத்தையும் வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற இந்த முயற்சி, கல்வியாளர்கள், அறிவியலாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User