'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' - ஒன்றிய - மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

Nov 07, 2026 - 12:30
0
'ஆட்குறைப்பு, நோ ரெஸ்பான்ஸ், கள்ள மௌனம்!' - ஒன்றிய - மாநில உறவு கமிட்டியை தவெக அரசு எப்படி கலைத்தது?

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவு குறித்து ஆராய திமுக ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை தவெக அரசு கலைத்திருக்கிறது. இந்தக் குழு பார்த்து வந்த வேலைகளை மாநில சட்ட ஆணையம் பார்த்துக் கொள்ளும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. குரியன் ஜோசப் குழு இன்று கலைக்கப்பட்டிருந்தாலும், இந்தக் குழுவை செயலிழக்க செய்வதற்கான வேலையை தவெக அரசு கடந்த சில மாதங்களாகவே செய்து வந்ததாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

குரியன் ஜோசப் கமிட்டி
குரியன் ஜோசப் கமிட்டி

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய கோட்டை வட்டாரத்தினர் சிலர், 'ஒன்றிய - மாநில அரசின் உறவு குறித்து ஆராய முன்னாள் முதல்வர் கருணாநிதி ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் ஸ்டாலின் ஒரு குழுவை அமைத்தார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக்வர்தன் ஷெட்டி, திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் நாகநாதன் ஆகியோர் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர். குழுவின் இடைக்காலை அறிக்கை கடந்த பிப்ரவரியில் வெளியிடப்பட்டு சட்டமன்றத்திலும் வைக்கப்பட்டது. நிதி, தேர்தல், தொகுதி மறுவரையறை, கல்வி, சட்டத்திட்டங்கள் என முக்கியமான தலைப்புகளில் தீவிரமாக ஆய்ந்து ஒன்றிய - மாநில உறவில் இருக்கும் சமகால சிக்கல்களை வகைப்படுத்தியிருந்தனர். மிகக்குறிப்பாக இந்த அறிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இந்தியாவின் ஏனைய மாநிலங்களும் பயன்பெறும் வகையில் இருந்தது. குழுவின் இரண்டாம் கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய 2027 மே மாதம் வரை நேரம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஸ்டாலின் - தி.மு.க

குழுவின் செயல்பாடுகள் ஆழமாக தீவிரமானதாக இருந்ததால் மே 2027 க்குப் பிறகு இன்னும் விரிவாக மூன்றாம் கட்ட அறிக்கைக் கூட தயார் செய்ய வைக்கலாம் எனும் திட்டமும் இருந்தது. ஆனால், தவெக அரசு அமைந்தவுடன் நிலைமை மாறிவிட்டது. ஆரம்பத்தில் இவர்களும் இந்தக் கமிட்டியின் செயல்பாடுகள் அப்படியே தொடரட்டும் என்றனர். ஆனால், ஆட்சியமைந்த இரண்டு மூன்று மாதங்களிலேயே கமிட்டிக்கு வழங்க வேண்டிய ஒத்துழைப்பை அரசு வழங்கவில்லை. கமிட்டியில் பணியாற்ற ஒரு குழு இருந்தால்தானே பணியாற்ற முடியும்? இந்த அரசு பணியாட்களையே குறைத்தது.

சில வாரங்களுக்கு முன்பு இந்த குழுவை சேர்ந்த மூன்று அலுவலக உதவியாளர்களின் பணி ஒப்பந்தக்காலம் முடிந்தது. அவர்களை பணி நீட்டிப்பு செய்ய குரியன் ஜோசப்பும் அசோக்வர்தன் ஷெட்டியும் அரசுக்கு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதத்தை அரசு கண்டுகொள்ளவே இல்லை. அலுவலக உதவியாளர்கள் கூட இல்லாமல் சமாளித்து விடலாம். ஆனால், இந்தக் குழுவில் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் இருந்தார். குழுவின் ஆய்வறிக்கை எல்லாம் ஆங்கிலத்தில்தான் தயாராகும். அந்த மொழிப்பெயர்ப்பாளர்தான் தமிழில் மொழியாக்கம் செய்வார். அவரின் பணி ஒப்பந்தம் அக்டோபர் இரண்டாம் வாரத்தில் முடிந்தது.

CM Vijay
CM Vijay

அவருக்கும் குழுவின் தலைமைகள் பணி நீட்டிப்பு கேட்டு அரசு கொடுக்கவில்லை. ஒரு மொழிப்பெயர்ப்பாளர் இல்லாமல் அறிக்கையை எப்படி தயார் செய்ய முடியும்? அரசின் கள்ள மௌனத்தை கடந்து குழுவினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டுதான் இருந்தனர். குரியன் ஜோசப், அசோக்வர்தன் ஷெட்டி இவர்களுக்கு கீழ் Research Officers என்ற பொறுப்பில் 5 பேர் வேலை செய்தனர். இவர்கள்தான் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்து அறிக்கையை தயாரிப்பார்கள். இவர்களில் 3 பேரின் பணி ஒப்பந்தம் இந்த வாரத்தில் முடிகிறது. அதற்கும் குழு சார்பில் பணி நீட்டிப்பு கேட்கப்பட்டது. அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது அந்தக் குழுவையே கலைத்துவிட்டார்கள். மாநில சட்ட ஆணையம் அந்த வேலையை பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள். மத்திய அரசோடு முட்டிக்கொள்ள இப்போதைய தவெக அரசு விரும்பவில்லை. அதனால்தான் மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை ஆய்வுப்பூர்வமாக கேள்வி கேட்கும் கமிட்டியை தொடர்வதில் தவெக அரசு அக்கறை காட்டவில்லை. அதிலும் குறிப்பாக தென்மாவட்டை சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர்தான் குழுவை கலைப்பதில் தீவிரமும் காட்டினார்' என்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User