60 நாள்கள் தூக்கப் போட்டி... ரூ.9.6 லட்சம் பரிசு வென்ற மும்பை இளம்பெண்!
தூங்குவதற்காகவே லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியுமா? ஆம்! இந்தியாவின் பிரபல மெத்தை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான Wakefit நடத்திய வித்தியாசமான 'Sleep Internship' போட்டியில் மும்பையைச் சேர்ந்த ஜினியா சட்டர்ஜி (Jiniya Chatterjee) ரூ.9.6 லட்சம் பரிசை வென்றுள்ளார். இதனுடன் நிறுவனத்தின் சார்பில் சுற்றுலா பேக்கேஜும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
Wakefit நிறுவனம் 2019-ம் ஆண்டு தொடங்கிய இந்த முயற்சியின் ஐந்தாவது சீசனில், நாடு முழுவதிலுமிருந்து இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு கட்டத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களுக்குப் பிறகு 10 பேர் இறுதிப் போட்டியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

சுமார் 60 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில், தினமும் ஒன்பது மணி நேரம் தூங்குவது முக்கிய இலக்காக இருந்தது. பங்கேற்பாளர்களுக்கு மெத்தை மற்றும் தூக்கத்தைக் கண்காணிக்கும் கருவி வழங்கப்பட்டது. அவர்கள் தூங்கும் நேரம், தூக்கத்தின் தரம் மற்றும் தினசரி செயல்திறன் ஆகியவை கண்காணிக்கப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
ஆனால், போட்டி வெறும் தூக்கத்துடன் முடிந்துவிடவில்லை. வாரந்தோறும் சுவாரஸ்யமான சவால்களும் நடத்தப்பட்டன. திரைப்படக் காட்சிகளைத் தூக்கம் சார்ந்த நகைச்சுவையுடன் மீண்டும் நடிப்பது, தங்களது தூக்கப் பழக்கங்களைப் பதிவு செய்வது, உரையாடலின்போது 'Pillow' அல்லது 'Blanket' என்ற வார்த்தைகளை மற்றவர்களுக்குத் தெரியாமல் பத்து முறை பயன்படுத்துவது எனப் பல வித்தியாசமான சவால்கள் இடம்பெற்றன.

இறுதிச் சுற்றில் நான்கு போட்டியாளர்கள் பங்கேற்றனர். படுக்கையறையை நினைவிலிருந்து மீண்டும் அமைக்கும் சவால், தங்களுக்குத் தேவையான தலையணை, போர்வை, விளக்கு உள்ளிட்டவற்றை ஏலம் எடுக்கும் சவால் எனப் பல கட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில் தூக்க மதிப்பெண்கள் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன் அடிப்படையில் ஜினியா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
தூக்கத்தின் முக்கியத்துவத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த முயற்சி, ஒரு சாதாரணமான அன்றாடச் செயலையும் வித்தியாசமான போட்டியாக மாற்றியிருக்கிறது!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)