குமரி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இன்ஜினீயரிங் மாணவர்; போக்சோ வழக்கில் சிறையில் அடைப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவியின் தாயார், மகளைக் கேரள மாநிலம் நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் மாணவியைப் பரிசோதித்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், மகளிடம் இது குறித்துக் கேட்டார். கொல்லங்கோடு அருகே உள்ள சின்னதுறைப் பகுதியைச் சேர்ந்த பிஜோ எஸ் தியோ (வயது 22) கர்ப்பத்துக்குக் காரணம் என மாணவி தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் நடந்த கோயில் திருவிழாவின்போது மாணவிக்கும் பிஜோ எஸ் தியோவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மாணவியின் செல்போன் எண்ணைக் கேட்டுப் பெற்ற பிஜோ எஸ் தியோ நீண்ட நாட்களாகப் பேசி வந்துள்ளார். பிஜோ எஸ் தியோ கோயம்புத்தூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த பிஜோ எஸ் தியோ மாணவியிடம் நேரில் பார்க்க வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் மாணவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்ட பிஜோ எஸ் தியோ அவரது வீட்டுக்குச் சென்றார். வீட்டின் மேல்மாடிப் பகுதிக்குச் சென்று மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பிஜோ எஸ் தியோ விடுமுறை முடிந்து கல்லூரி செல்லும் வரை மாணவியைத் தனிமையில் சந்தித்துப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதில் அவர் கர்ப்பமாக இருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்து மாணவியின் தாய் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.ஐ மீனாகுமாரி விசாரணை நடத்திப் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறிப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய பிஜோ எஸ் தியோ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். இதையடுத்து இன்ஜினீயரிங் மாணவரைக் கைது செய்து நாகர்கோவிலில் உள்ள போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரைச் சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)