நீ என் ஸ்பெஷல் சைல்டு! - உலகத்தின் பார்வைகளை உடைத்த பாரதிராஜா | ஒரு மகளின் கண்ணீர் மடல்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
சில மனிதர்களை நாம் ஒரு தொழிலின் மூலம் அறிந்துக் கொள்கிறோம். சிலரை அவர்கள் படைத்த படைப்புகளின் வழியே நேசிக்கிறோம். ஆனால், மிகச் சிலர் மட்டும் நம் வாழ்க்கைக்குள் நுழைந்து, நம் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறார்கள். எனக்கு அப்படிப்பட்டவர் தான் இயக்குநர் பாரதிராஜா சார். “பாரதிராஜா” என்ற பெயரை நான் முதன்முதலாகக் கேட்டது, நான் எல்.கே.ஜி படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான். அந்த வயதில் சினிமா என்றால் என்ன, இயக்குநர் என்றால் யார், ஒரு படைப்பாளியின் பெருமை என்ன என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனால், இன்று திரும்பிப் பார்க்கும்போது, வாழ்க்கை எனக்குக் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷங்களில் ஒன்று, அவரை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இருந்தது என்றுப் பெருமையுடன் சொல்ல முடிகிறது. என் வாழ்க்கையில் சினிமாவையும், கலை உணர்வையும் அறிமுகப்படுத்தியவர் எங்கள் குடும்ப நண்பர், தமிழ் எழுத்தாளரும் சிறந்த பேச்சாளருமான திரு. பாரதி கிருஷ்ணகுமார்.

நான் சிறுவயதில் பேச மாட்டேன். Simply நான் ஒரு Special Child. ஒருநாள் அவர் என் தந்தையிடம் தொலைபேசியில் அழைத்து, “பாரதிராஜா சார் அலுவலகத்திற்கு வா தம்பி “ என்றுக் கூறினார். பிறகு,அவர் என்னைக் காட்டி, “சார்,இந்தப் பாப்பா யாரிடமும் பேச மாட்டாள். உங்களிடம் பேசுகிறாளா என்றுப் பார்ப்போம்” என்றார். பாரதிராஜா சார் என்னை தன் கரங்களால் தூக்கி மடியில் அமர வைத்தார். என் நெற்றியில் முத்தமிட்டார். அன்போடு அணைத்துக்கொண்டார். நிறையப் பேசினார். ஆனால் நான் பேசவில்லை.
சில மாதங்களுக்குப் பிறகு, ‘தாஜ்மஹால்’ திரைப்படம் வெளியாகியிருந்தது. அப்போது மீண்டும் அவரைச் சந்தித்தேன். “இப்போதாவது பேசுவாயா பாப்பா?” என்று சிரித்தபடி கேட்டார். அப்போது நான் முதன்முறையாக அவரிடம் . ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தின் இறுதியில் அவர் கூறிய வசனத்தை அப்படியே தவறில்லாமல் சொன்னேன்.அவர் கண்களில் ஆச்சரியம் தெரிந்தது. பிறகு, அவர் மகனிடம், “டேய் மனோ! இவளை கடந்த முறை நாம் பேச வைக்க முயற்சி பண்ணோம். இப்போ பாரு... நம்ம படத்துல நான் பேசிய வசனத்தை அப்படியே சொல்றா!” என்று மகிழ்ச்சியோடு மனோஜ் சாரிடம் கூறினார். அந்த நொடியிலேயே அவர் என்னைப் பார்த்து, “இந்தப் பாப்பா ஒருநாள் பெரிய படைப்பாளியாக வருவாள்” என்றுக் கூறினார்.

அந்த வார்த்தைகள் அப்போது ஒரு குழந்தைக்கு புரியாமல் போயிருக்கலாம். ஆனால், இன்று நான் எழுதும் ஒவ்வொரு வரியிலும், நான் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படத்திலும், நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு பயணத்திலும் அந்த வார்த்தைகளின் எதிரொலி ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அது என் கலைப் பயணத்தின் முதல் அத்தியாயம். அதன் பின்னர் பல ஆண்டுகள் கடந்தன. எழுதத் தொடங்கினேன்.
பயணம் செய்தேன். புகைப்படங்கள் எடுத்தேன். உலகத்தை வேறு கோணத்தில் பார்க்கக் கற்றுக்கொண்டேன். ஒருநாள் எனக்கு திடீரென்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. “நீங்கள் காயத்ரி தானே? நான் தான் நீங்கள் சிறிய வயதில் பார்த்த மனோஜ் பேசுறேன்” என்றார். அந்த ஒரு அழைப்பே என் வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான அத்தியாயத்தைத் தொடங்கியது. என் எழுத்துக்கள், என் பயணங்கள், என் புகைப்படங்கள், என் வாசிப்பு…. இவற்றையெல்லாம் அவர் கவனித்துக் கொண்டிருந்தார். “அப்பா அன்றே சொன்னார்.
நீ இன்று அதை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறாய்” என்று மிகுந்த உணர்ச்சியுடன் கூறினார். அதற்குப் பிறகு, ஒரு நாள் பாரதிராஜா சாரை சந்தித்தேன். அன்று நான் பார்த்த பாரதிராஜா சார் ஒரு புகழ்பெற்ற இயக்குநர் இல்லை. தன் குழந்தை காயமடைந்ததைப் பார்த்து வருந்தும் ஒரு தந்தை. அவர் அமைதியாக என்னையேப் பார்த்தார்.
சில நிமிடங்கள் கழித்து அவர் மெதுவாக சொன்னார்: “இந்த உலகம் உன்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ,நீ உனது பாதைகளை நோக்கிச் செல்” என்றார். ஏனெனில் அந்த வார்த்தைகள் வெறும் ஆறுதல் வார்த்தைகள் அல்ல. அவை ஒரு வாழ்வியல் பாடம். அதனால்தான் இன்று அவரை நினைக்கும்போது, என் மனதில் முதலில் தோன்றுவது அவருடைய புகழோ சாதனைகளோ அல்ல.
ஒரு உடைந்த குழந்தையைத் தங்கள் அன்பால் மீண்டும் உயிர்ப்பித்த நல்ல மனிதரின் முகம் தான். சினிமா, இலக்கியம், காதல், வாழ்க்கை, மனிதர்கள், பயணம், கலை, என்று உலகின் எண்ணற்ற விஷயங்களைப் பற்றி நாங்கள் மூவரும் பேசியிருக்கிறோம். அந்த உரையாடல்களில் நான் ஒரு கேட்பவளாக மட்டும் இருக்கவில்லை. அவர்கள் என்னை ஒரு குழந்தையாகவும், ஒரு நண்பராகவும், ஒரு படைப்பாளியாகவும் மதித்து உரையாடினார்கள்.

என் வாழ்க்கையில் நான் மனதளவில் வலிமை பெறுவதற்கு காரணமானவர்களை எண்ணிப் பார்த்தால், அந்தப் பட்டியலின் முதல் வரிசையில் நிற்பவர்கள் பாரதிராஜா சாரும் மனோஜ் சாரும் தான். அதனால்தான், உலகம் என்ன சொன்னாலும், பாரதிராஜா சாரின் வார்த்தைகள் எனக்கு எப்போதும் ஒரு பாதுகாப்புக் கவசமாக இருந்தன. என் வாழ்க்கையில் பலரை சந்தித்திருக்கிறேன். பல முகங்களைப் பார்த்திருக்கிறேன். பல உறவுகளைக் கடந்திருக்கிறேன். ஆனால் பாரதிராஜா சார் மற்றும் மனோஜ் சாரை போன்ற தூய மனங்களை நான் என் வாழ்வில் மீண்டும் சந்திப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் சில மனிதர்கள் நம் வாழ்க்கைக்குள் வருவதில்லை. அவர்கள் நம் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிடுகிறார்கள். அவர்கள் நம்மை வழிநடத்தும் விளக்குகளாக மாறிவிடுகிறார்கள்.
என் வாழ்க்கையில் பாரதிராஜா சாரும் மனோஜ் சாரும் அப்படிப்பட்டவர்கள். பாரதிராஜா சாரைப் பற்றி நான் அதிகம் பிடித்த விஷயம் அவரது படைப்பாற்றல் மட்டுமல்ல. வாழ்க்கையை எதிர்கொண்ட விதம். எப்போதும் தைரியமாகவும், கம்பீரமாகவும் ,சந்தோஷமாகவும் வாழ வேண்டும். மேலும், புகழின் உச்சியைத் தொட்டாலும், மனிதன் இறுதியில் ஒரு சாதாரண மனிதன்தான் என்பதை அவர் தனது வாழ்வின் மூலம் உணர்த்தினார்.
அவரது சாதனைகள் இமயமலை அளவுக்கு உயர்ந்திருந்தாலும், அவரது மனம் எப்போதும் எளிமையாகவே இருந்தது. பாரதிராஜா என்ற பெயரை வெறும் ஒரு திரைப்பட இயக்குநரின் பெயராக மட்டும் சொல்லிவிட முடியாது. அது தமிழ்ச் சினிமாவின் ஒரு காலம். ஒரு பண்பாடு. ஒரு வாழ்வியல். அவருடைய 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய மொழியை அறிமுகப்படுத்தியது. மயிலும் சப்பாணியும் பரட்டையும் வெறும் கதாபாத்திரங்கள் அல்ல.

கிராமத்தின் உயிரோட்டமாய் வாழ்ந்த மனிதர்கள். "செவ்வந்திப் பூ முடிச்ச சின்னக்கா..." போன்ற பல பாடல்கள் இன்னும் காலத்தைத் தாண்டி ஒலித்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சினிமாவிற்கு பாரதிராஜா சார் செய்த மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்றால், கிராமத்து மக்களின் வாழ்க்கையை அதன் இயல்பான அழகோடு திரைக்கு கொண்டு வந்தது. பாரதிராஜா தன் மகன் மனோஜை அறிமுகப்படுத்திய திரைப்படம் “தாஜ்மஹால்”.
காதல் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல. வாழ்க்கையை மாற்றும் ஒரு பயணம் என்பதைக் கூறிய திரைப்படமாக தாஜ்மஹால் என்றும் நினைவில் நிற்கும். கிராமம் என்பது வெறும் வயல்வெளிகளும், மண் வீடுகளும், தென்றல் காற்றும் மட்டுமல்ல. அங்கே வாழும் மனிதர்களின் கனவுகள், காதல்கள், கண்ணீர்கள், ஏமாற்றங்கள், தியாகங்கள், மரபுகள், உறவுகள் ஆகிய அனைத்தையும் உயிரோட்டத்துடன் காட்சிப்படுத்தியவர்.
அவரது திரைப்படங்களில் தோன்றிய கதாபாத்திரங்கள் வெறும் திரைக்கதை மனிதர்கள் அல்ல. நம்முடன் வாழ்ந்தவர்கள் போல மனதில் பதிந்தவர்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் வாழ்க்கையின் அனுபவங்கள் ஒலித்தன. அவர்கள் சிரிப்பில் ஒரு மண்ணின் மகிழ்ச்சி இருந்தது. அவர்கள் கண்ணீரில் ஒரு சமூகத்தின் வலி இருந்தது.
தான் வாழ்ந்த மண்ணையும், தான் கண்ட மனிதர்களையும், தான் அனுபவித்த வாழ்க்கையையும் திரைப்பட மொழியாக மாற்றி, உலகம் முழுவதும் உள்ள மக்களின் இதயங்களுக்குள் கொண்டு சென்ற மகா கலைஞர் அவர். தமிழ்ச் சினிமாவில் இன்று ஒளிர்ந்து கொண்டிருக்கும் எண்ணற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படைப்பாளிகள் ஆகியோரின் பயணத்தின் தொடக்கத்தில் எங்கோ ஒரு இடத்தில் பாரதிராஜா சாரின் கைரேகை இருக்கும். ஒரு ரசிகையாக மட்டுமல்லாமல், அவரது படைப்புகளுக்குள் வாழ்ந்த ஒருவரைப் போலவே நான் அந்த வசனங்களைச் சொல்லியிருக்கிறேன்.
சில பாடல்களைப் பாடிக் காட்டியிருக்கிறேன். சில காட்சிகள் என்னை எவ்வாறு பாதித்தன என்பதை உணர்ச்சியோடு விவரித்திருக்கிறேன். அந்த தருணங்களில் அவரும் மனோஜ் சாரும் என் வார்த்தைகளைக் கவனமாகக் கேட்ட விதம், என் உணர்வுகளுக்கு அளித்த மதிப்பு. அதையெல்லாம் இன்று நினைத்தால்கூட என் மனதை நெகிழச் செய்கின்றன. எனவே, பாரதிராஜா சாரைப் பற்றி நான் நினைக்கும் ஒவ்வொரு முறையும், ஒரு தலைமுறையின் கனவுகளுக்கு வடிவம் கொடுத்த கலைஞரை நினைக்கிறேன். அந்த வரிசையில், அவரால் ஊக்கமளிக்கப்பட்ட ஒரு சிறிய படைப்பாளியாக என்னையும் நினைத்துக்கொள்ளும் போது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய பெருமைகளில் ஒன்றாகவே தோன்றுகிறது. இன்று ஒரு மாபெரும் கலைஞனை இந்த உலகம் இழந்திருக்கிறது. இந்த இழப்பை ஏற்றுக்கொள்வது எனக்கு இன்னும் கடினமாகவே இருக்கிறது. இன்று அவரை உயிரற்ற உடலாகக் காணும் இந்த நிமிடத்தை என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

கடந்த வருடம் மனோஜ் சாரின் இறப்பை ஒரு பேரிழப்பாக நான் சந்தித்திருந்தேன். அந்த வலியிலிருந்து முழுமையாக மீளாத என் மனம், இன்று மீண்டும் ஒரு பெரும் துயரத்தின் முன் நின்றிருக்கிறது. வாழ்க்கையில் சில இழப்புகள் காலத்தால் கூட நிரப்ப முடியாத வெற்றிடங்களை உருவாக்கிவிடுகின்றன. பாரதிராஜா சாரின் மறைவும் அப்படிப்பட்ட ஒரு வெற்றிடம்தான். அவர் சொன்ன வார்த்தைகள், அவர் கொடுத்த அன்பு, அவர் காட்டிய நம்பிக்கை, அவர் என் கன்னத்தில் பதித்த அன்பு முத்தம், அவர் என் எழுத்துக்களையும், புகைப்படங்களையும் பாராட்டிய அந்த கண்கள், இவை அனைத்தும் என்னுள் எப்போதும் வாழும். அதனால்தான் இன்று கண்ணீருடன் நான் அவரின் பூத உடலைப் பார்த்து சொன்னது: “அப்பா... நீங்கள் எங்கே இருந்தாலும், என் எழுத்துக்களிலும், என் புகைப்படங்களிலும், என் பயணங்களிலும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியிலும் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள்.”

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)