'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

Jul 31, 2026 - 11:32
0
'எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள், அப்போது கண்ணதாசன்.!' - வைரமுத்து

கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டு விழா நேற்று (ஜூலை.30) சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு வளாகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து, "தொழில்நுட்ப புரட்சி, தொலைபேசி கலாசாரம், சமூக ஊடகங்கள் வந்த பிறகு தமிழர்கள் தங்களது முன்னோடிகளை அதிகமாக மறக்கின்றனர். மறக்கடிக்கப்படுகின்றனர்.

உள்ளூர் கலாசாரத்தை அழிப்பதற்கு பல சர்வதேச நிறுவனங்கள் திட்டமிடுகின்றன. நமது முன்னோர்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் வரையில்தான் மொழி, கலாசாரம் இருக்கும். பாரம்பரியம் நிலைக்கும்.

கண்ணதாசன்
கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசனின் கவிதைகளை பள்ளி, கல்லூரி பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும். சிவாஜி சிலை திறப்பு விழாவில் சொன்னேன். தமிழ்நாட்டில் 50-களில் பிறந்தவர்கள் நிச்சயம் 4 பேர்களால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர், கண்ணதாசன் இந்த நான்கு பேரில் ஒருவரின் பாதிப்புக்கூட இல்லாமல் ஒருவர் இருந்தால் அவர் தமிழ்நாட்டில் இல்லை என்று பொருள். இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது.

இதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கலைஞர் ஆகிய மூவருடனும் பணியாற்றியவர் கண்ணதாசன்.

எம்.ஜி.ஆருக்கு யார் செய்த உதவியை விடவும், கவிஞர் கண்ணதாசன் செய்த உதவி மிகப்பெரியது.

எம்.ஜி.ஆரை இன ரீதியாக தமிழ்நாட்டில் தனிமைப்படுத்த பார்த்தார்கள். 'எங்க ஊரிலேயே எம்.ஜி.ஆர் என்ன ஆளுங்க...அவர் மலையாளியாமே' என்று கூட சொல்லி இருக்கிறார்கள்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

கலைஞர்களைக் கூட சாதி வைத்து பார்க்கும் அவலம் தமிழ்நாட்டில் இருந்தது, இருக்கிறது என்று சொல்வதற்கும் நான் தயங்க மாட்டேன். எம்.ஜி.ஆரும் தமிழர் தான் என்று கண்ணதாசன் எழுதியிருக்கிறார்.

மலையாளிகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சேரன் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதிக்குடியில் இருந்து வந்தவர்கள் சேரன் இனத்தவர்கள். அதனால் நீங்கள் தமிழர் தான் என்று கூறி எம்.ஜி.ஆரை காப்பாற்றியவர் கண்ணதாசன்" என்று பேசியிருக்கிறார் வைரமுத்து.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User