சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

May 12, 2026 - 18:32
0
சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளிகைக்குள் எழுந்திருக்கும் புகைச்சல் வரை தேர்தலுக்குப் பிறகும் அரசியல் களம் பரபரப்பாகவே இருக்கிறது.

இதற்கிடையில் சர்பிரைஸாக தமிழ்நாட்டின் புதிய முதல்வர் விஜய், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் இல்லம் தேடிச் சென்று சந்தித்தது, வைகோவை சந்தித்தது, இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைமை அலுவலகம் சத்யமூர்த்தி பவன் என தொடர்ந்து எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

அதன் அடிப்படையில், இன்று அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ சி.வி சண்முகத்தின் அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார் முதல்வர் விஜய். அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல், முதல்வர் விஜய் சி.வி சண்முகத்தின் அலுவலகம் சென்றிருப்பது தமிழ்நாடு அரசியலில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான திருப்பமாகவே பார்க்கப்படுகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சந்தித்த தோல்விக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் உச்சத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், முதல்வர் விஜய் எடப்பாடி பழனிசாமியைத் தவிர்த்துவிட்டு சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணியைச் சந்தித்தது, அ.தி.மு.க-வில் சி.வி. சண்முகம் தலைமையிலான 'அதிருப்தி கோஷ்டியை' ஆதரித்து, அதை உறுதிப்படுத்துவதாக அமைகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள் சிலர்.

மேலும், தற்போது முதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணிக்கு சட்டமன்றத்தில் போதிய மெஜாரிட்டி இருந்தாலும், த.வெ.க தனித்துப் பெரும்பான்மை பெறவில்லை. வரும் மே 13-ம் தேதி நடைபெறவிருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கான பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் முதல்வர் விஜய்க்கு இருக்கிறது.

சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ
சி.வி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏ

சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் விஜய பாஸ்கர், லீமா ரோஸ் உள்ளிட்ட சுமார் 30 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் விஜய்யின் த.வெ.க அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்தச் சந்திப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்குள் தனிமைப்படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. சி.வி. சண்முகத்தின் ஆதரவாளர்கள் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பது என்பது, அவர்கள் த.வெ.க-வுடன் ஒரு சுமுகமான உறவை பேண விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இது அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்குக் கடுமையான அரசியல் சவாலாக அமையும்.

இந்தச் சந்திப்பு வெறும் 'மரியாதை நிமித்தமான சந்திப்பு' மட்டுமல்ல. இது எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கேள்விக்குள்ளாக்குவதோடு, விஜய்யின் ஆட்சி நீண்ட காலம் நிலைத்திருப்பதற்கான ஒரு அரசியல் காப்பீடு போன்றது. இதன் எதிரொலியாக அ.தி.மு.க-வில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படவோ அல்லது தலைமை மாற்றம் கோரப்படவோ வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

அதிமுகவை தொடர்ந்து விசிக தலைவர் தொல்.திருமாவளவனை சந்தித்தார் விஜய். அப்போது விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமியையும் சந்திக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User