`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

May 12, 2026 - 20:32
0
`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' -  தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வை காணவில்லை" என டி.டி.வி.தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்தார். அடுத்த சில மணி நேரங்களில் தினகரனுடன் ஆளுநர் மாளிகை வந்த காமராஜ், "நான் தவெக-வுக்கு ஆதரவு தரவில்லை, அது போலி கடிதம்" என மறுப்பு தெரிவித்தார். த.வெ.க ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவைப்பட்டபோது, அமைச்சர் பதவி நிபந்தனையுடன் காமராஜ் ஆதரவு கடிதம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுக் கொண்ட கையோடு, இன்று சட்டமன்றத்தில் த.வெ.க-வுக்கு தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் காமராஜ்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

இதனைத் தொடர்ந்து அவரை கட்சியிலிருந்து டி.டி.வி.தினகரன் அதிரடியாக நீக்கினார். எம்.எல்.ஏ பதவிக்கு ஆபத்து வராது என்பதை உறுதி செய்துகொண்டே காமராஜ் இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அமுமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில்,``குதிரை பேரத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் - தூய சக்தி என தங்களை தம்பட்டம் அடித்துக்கொள்பவர்கள் தமிழக அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றம் அல்ல சகிக்கவே முடியாத துர்நாற்றம்.

கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்த ஒரே காரணத்திற்காக மட்டுமே மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு S. காமராஜ் அவர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டாரே தவிர, சட்டமன்றத்தில் யாரையோ புகழ் பாடியதற்காக நீக்கப்பட்டார் என திசை திருப்ப முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

கடந்த 8 ஆம் தேதியன்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுடன் புதுச்சேரி தனியார் விடுதியில் தங்கியிருந்த திரு S.காமராஜ் அவர்களை தொடர்பு கொள்ள முடியாத அதே நேரத்தில், தவெகவுக்கு ஆதரவாக திரு காமராஜ் அவர்கள் கையெழுத்திட்டதாக இன்றைய முதல்வர் திரு விஜய் அவர்கள் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களிடம் கடிதம் சமர்பித்ததாக தகவல் வெளியானது.

எஸ்.காமராஜ், டிடிவி தினகரன்
எஸ்.காமராஜ், டிடிவி தினகரன்

அதனையடுத்து மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களுடனான சந்திப்பின் போது திரு S.காமராஜ் அவர்கள் தவெகவினர் கொடுத்த கடிதம் போலி என கடிதம் மூலம் ஆளுநர் அவர்களிடமே தெரிவித்திருந்தாலும், என்னுடைய செய்தியாளர் சந்திப்பின் போது நான் எழுப்பிய குதிரை பேர சந்தேகம், இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தான் சார்ந்திருக்கும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் அயராத உழைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை குதிரை பேர அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மக்கள் தீர்ப்பையும், ஜனநாயக மாண்பையும் அவமதிப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை வாங்க முடியும் என்ற எண்ணத்தை அடிப்படையாக கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கும் தூய சக்திகள், அரசியலுக்குள் கொண்டு வந்திருப்பது மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User