`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

Jul 29, 2026 - 18:01
0
`மேட்டூர் திறக்காததால் கடும் வறட்சி; ஏக்கருக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்!' - ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் த.மா.க-வின் டெல்டா மண்டல செயல்வீரர்கள் கூட்டம், அதன் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நடைபெற்றது. இதில் என்.ஆர்.ரெங்கராஜன், சுரேஷ் மூப்பனார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ``மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில், தமிழகம், தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் உறுதியாக இருக்கிறார்கள். மத்திய ஜல்சக்தி துறையின் இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் மேகதாது குறித்துப் பேசியது விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

த.மா.கா ஆலோசனைக் கூட்டத்தில் ஜி.கே.வாசன்

அவர், பொறுப்பற்ற முறையில் தமிழகத்தின் நியாயமான உரிமைகளை புறக்கணிக்கும் வகையில் தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது. நியாயமான நடுநிலையான செயலாக இல்லை. அந்தக் கருத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேகதாது அணை திட்டம் தொடர்பாக எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும், தமிழகத்தின் உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக கருத்தில் கொண்டு மத்திய அரசும், ஆணையங்களும் உணர்ந்து செயல்பட வேண்டும்.

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பெயரில், 15 நாள்களுக்கு, 3,500 கன அடி நீர் விதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக அரசு தாமதமின்றி இந்த நீரை உடனடியாகத் திறந்து விட வேண்டும். தேர்தல் வாக்குறுதியின் படி, புதிய அரசு விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ம் தேதி, மேட்டூர் திறக்கப்படாததால் கடும் வறட்சி நிலவுகிறது. கால்நடைகளுக்கு குடிநீர் இல்லை. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நெல் சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ.25,000 வழங்க வேண்டும்.

ஜி.கே.வாசன்

உழவு மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகளிடம் இடுபொருள்கள் மற்றும் நுண்ணுாட்ட சத்து பொருள்களை வாங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகளவில் மலர் சாகுபடி செய்யப்படுவதால் குளிர்சாதன கிடங்கு, நறுமண பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியம் முழு திறனுடன் செயல்பட வேண்டும். அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம், தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். கோயில் நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கண்காணிக்கப்பட வேண்டும். தவறுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாக்கப் மரண விவகாரங்களில், போலீஸார் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும். ஆகஸ்ட் முதல் வாரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும். தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்துக்குத்தான் முதலிடம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருப்பினும் தேசிய பாடல் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்திலும் அவரவர் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். நீட் தேர்வு தொடர்பாகப் பல நேரங்களில் நடக்கும் பிரச்னைகளைப் பார்க்கும்போது நீட் தேர்வு வேண்டும் என்று நினைப்பவர்கள்கூட, அது தேவையில்லை என்ற வகையில் மாணவர்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

பட்டுக்கோட்டையில் ஜி.கே.வாசன்

மாணவர்களின் எண்ணங்களை பிரதிபலிக்க வேண்டியது அரசியல் கட்சியினுடைய கடமையாக இருக்கிறது. தேர்வு எழுதும் மாணவர்கள், பெற்றோர்கள் எல்லாம் நம்பிக்கை இழந்து சோர்ந்து போகின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியில் த.மா.க இனிமேல் இடம் பெற போவதில்லை. தனித்தன்மையோடு இயக்கத்தை நடத்த இருக்கிறோம். உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எங்களின் இயக்கத்தை பலப்படுத்தக்கூடிய பணியிலே நாங்கள் இறங்கியுள்ளோம். உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும்போதோ அல்லது முன்கூட்டியோ தேர்தல் கூட்டணி குறித்து உறுதியாக அறிவிக்கப்படும்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User