'FIR மீது விசாரணை நடத்தலாம்' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு; மீண்டும் போராட்டத்தைத் தொடங்குகிறதா CJP?

Jul 29, 2026 - 09:33
0
'FIR மீது விசாரணை நடத்தலாம்' - உச்ச நீதிமன்றத் தீர்ப்பு; மீண்டும் போராட்டத்தைத் தொடங்குகிறதா CJP?

கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேலாக டெல்லி ஜந்தர் மந்தரில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவைக் கோரி போராட்டம் நடத்தியது காக்ரோச் ஜனதா கட்சி.

சூர்ய காந்த்தின் தீர்ப்பு

காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம் குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அளித்த தீர்ப்பின் சாராம்சம்...

> குற்றப் பின்னணி உள்ளவர்களைத் தவிர, மற்ற போராட்டக்காரர்கள் மீது எவ்விதக் கடுமையான அல்லது கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இருப்பினும், எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணைக்கு எவ்விதத் தடையும் இல்லை.

சூர்ய காந்த் - தலைமை நீதிபதி
சூர்ய காந்த் - தலைமை நீதிபதி

> போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.

> போராட்டக்காரர்களின் டிஜிட்டல் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

> அனைத்து சிசிடிவி (CCTV) காட்சிகள், ட்ரோன் பதிவுகள், பாடி கேமரா பதிவுகள், வயர்லெஸ் உரையாடல்கள், பிசிஆர் (PCR) அழைப்புப் பதிவுகள் ஆகியவைப் பாதுகாப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

இந்தத் தீர்ப்பில் உள்ள 'எஃப்.ஐ.ஆர் மீதான விசாரணைக்கு எவ்விதத் தடையும் இல்லை' என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது காக்ரோச் ஜனதா கட்சி.

இதை விமர்சித்து காக்ரோச் ஜனதா கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது...

''உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் நிலுவையில் உள்ள எஃப்.ஐ.ஆர்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவும், விசாரணைகளை நடத்தவும் அரசுக்கு அனுமதி அளிக்கும் 'உத்தரவு எண். 4' மிகப்பெரிய கவலைகளை எழுப்புகிறது.

சௌரவ் தாஸ்
சௌரவ் தாஸ்

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதி

2026 ஜூலை 25 அன்று இந்த நாட்டின் இளைஞர்களுக்கு இந்திய அரசு அளித்த உறுதியான வாக்குறுதி மற்றும் உத்தரவாதத்திற்கு - அதாவது எஃப்.ஐ.ஆர்கள் திரும்பப் பெறப்படும் மற்றும் இந்த அமைதி வழிப் போராட்டத்தில் பங்கேற்ற எந்தவொரு போராட்டக்காரரும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குறிவைக்கப்பட மாட்டார்கள் என்ற வாக்குறுதிக்கு - இந்த உத்தரவு நேர் எதிரானதாக உள்ளது.

மீண்டும் போராட்டம்?

இந்திய தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வின் இந்த உத்தரவைப் பயன்படுத்தி, தனிப்பட்ட போராட்டக்காரர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்களைத் தொடரவும், அவர்களைப் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கவும் இந்திய அரசும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் முயலக்கூடும் என்ற நம்பத்தகுந்த அச்சம் தற்போது நமக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசு தனது உத்தரவாதங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு இன்றோடு முடிகிறது. அரசு அளித்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்ற வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

இது தவறினால், ஏற்கெனவே அறிவித்தபடி, தங்களின் நலனுக்காக மட்டுமின்றி இந்த நாட்டின் எதிர்காலத்திற்காகவும் வீதியில் இறங்கிப் போராடிய மாணவர்களையும் இளம் போராட்டக்காரர்களையும் பாதுகாக்க, காக்ரோச் ஜனதா கட்சி தனது நாடு தழுவிய போராட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை".

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User