'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' - விஜய் சொன்ன குட்டி வரலாறு

May 12, 2026 - 13:02
0
'சபாநாயகரை ஏன் அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவர் அமர வைக்கிறார்கள்?' - விஜய் சொன்ன குட்டி வரலாறு

தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடியுள்ளது. சபாநாயகராக தவெக சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி.பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டு, சபாநாயகர் இருக்கையில் அமர வைக்கப்பட்டார்.

அதன் பின், ஒவ்வொரு கட்சிக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. தவெக சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பேசியதாவது...

"மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்றார் அமெரிக்க முன்னாள் குடியரசு தலைவர் ஆபிரகாம் லிங்கன்.

ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன்

இன்று அமைந்துள்ள... மக்களாட்சி மலர்வதற்கு மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்பு இந்தப் பேரவைக்கு இருக்கிறது. அதிக மக்கள் இந்த ஆட்சிகாலத்தில் நன்மை பெற்றுள்ளார்கள் என்கிற வகையில் நம்முடைய செயல்பாடுகள் அமைய வேண்டும்.

அனைவரும் சமம். ஓர் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளுக்கும், பெரும்பாலான இடங்களைப் பெற்றிருக்கும் தவெகவிற்கும் சமமாகவே வாய்ப்பளிக்கப்படும். நல்லவை ஏற்கப்பட்டு, அல்லவை நிராகரிக்கப்பட்டு ஜனநாயகத்தின் இதயமாகவும், மூளையாகவும் இந்தப் பேரவை செயல்பட வேண்டும்.

அப்படி இந்தப் பேரவையை நடத்திச் செல்லும் பண்பை கொண்டவரையே தவெக சபாநாயகராக முன்மொழிந்துள்ளது.

சபாநாயகரை அவை முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் கைப்பிடித்து அழைத்து சென்று அமர வைத்தனர். இந்தச் சம்பிரதாயம் எப்படி வந்தது என்பது சுவாரசியமானது.

இங்கிலாந்து பாராளுமன்ற நடைமுறை போலவே, நம்முடைய பாராளுமன்ற வழக்கமும். மன்னராட்சி காலத்திலேயே அங்கே பாராளுமன்றம் இருந்துள்ளது. அதில் அனைத்து அதிகாரங்களும் கொண்ட மன்னரும் இருந்தார்... பாராளுமன்றமும் இயங்கியது.

மன்னர் ஒரு விஷயத்தை செய்ய விரும்புவார். அதை பாராளுமன்ற பெரும்பாலும் நிராகரிக்கும். மன்னர் விரும்பிய காரணத்தைப் பாராளுமன்றம் நிராகரித்துவிட்டது என்பதை மன்னருக்கு செல்ல வேண்டியவர் பாராளுமன்ற தலைவர் 'ஸ்பீக்கர்' எனப்படுபவர். அதற்கு துணிவு வேண்டும்.

ஜே.சி.டி பிரபாகர்
ஜே.சி.டி பிரபாகர்

பணிகளை செய்வதற்கு தான் பாராளுமன்றத்தின் அனுமதி தேவையே தவிர, நாட்டில் உள்ள எந்தப் பிரஜைக்கும் மன்னரால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.

தான் விரும்பியதை செய்ய முடியாது என்று கூறிய ஸ்பீக்கருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிடுவார் மன்னர். தலையை வெட்டிவிடுங்கள் என்று ஆணையிடுவார்.

இது பலமுறை நடந்தால், யாரும் இந்த ஸ்பீக்கர் பதவிக்கு வர விரும்பமாட்டார்கள். அதனால், புதிதாக பாராளுமன்றம் அமைந்த உடன், ஸ்பீக்கர் பதவிக்கு ஒருவர் அறிவிக்கப்பட்ட உடன், 'தலை தப்பித்தால் போதும்' என்று ஓட்டம் பிடிப்பார்.

அதனால் அவரை அவையின் முன்னவரும், எதிர்க்கட்சி தலைவரும் தடுத்து நிறுத்தி இழுத்து வந்து ஆசனத்தில் அமர வைப்பார். இது தான் அந்தக் காலத்தில் இருந்து வந்த மரபு.

ஜனநாயகம் மலர்ந்த பிறகும், இந்த மரபு கடைபிடிக்கப்படுகிறது.

தவெக உறுப்பினர்கள் உங்களுக்கு உதவிக்கரமாகவே இருப்பார்கள் என்கிற வாக்குறுதியை உங்களுக்கு வழங்குகிறேன். பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் காக்க வேண்டும் என்கிற பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்திக்க நேற்று சென்றிருந்தேன். அங்கே முன்னாள் பேரவை தலைவர்களின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்களைப் பற்றி அறியும் போது உண்மையில் எனக்கு பெருமிதத்தைத் தந்தது.

எடுத்துக்காட்டாக, ஜே. சிவ சண்முகம் பிள்ளை, டாக்டர் யு.கிருஷ்ண ராவ், செல்லபாண்டியன் வரிசையில் மிக சரியான ஒருவரையே முன்மொழிந்துள்ளோம் என்று பெருமைகொள்கிறேன். அதுபோலவே துணை தலைவர் அவர்களும்.

ஜே.சி.டி. பிரபாகர் - விஜய்
ஜே.சி.டி. பிரபாகர் - விஜய்

நீங்கள் இருவருமே சாதாரண குடும்பத்தில் பிறந்து, 'மக்கள் பணி ஆற்ற வேண்டும்' என்கிற அவாவில் செயல்பட்டு வந்தவர்கள்.

"குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

மிகைநாடி மிக்க கொளல்'

என்னும் வள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப சட்டமன்ற நடவடிக்கைகள் சீராக, செம்மையாக நடைபெறும் வகையில் இந்த அவைக்கு பேரவை தலைவர், பேரவை துணைத் தலைவரும் பெருமை சேர்ப்பீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.

அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதர்களை மதிக்கும் பண்புகள் நிலைநாட்டப்பட வேண்டும்... பண்பாடு போற்றப்பட வேண்டும்". என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User