கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

May 14, 2026 - 14:31
0
கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் தேர்வு; 10 நாள்கள் இழுபறி முடிவுக்கு வந்தது!

கேரள மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 102 இடங்களிலும், சி.பி.எம் கூட்டணி 35 இடங்களிலும், பா.ஜ.க 3 இடங்களிலும் வெற்றிபெற்றது. ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் போதும் என்ற நிலையில் காங்கிரஸ் கூட்டணி கூடுதல் இடங்களை வென்று பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் முதல்வராக யாரை நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடைபெற்றது. கட்சியில் சீனியரான கேரள சட்டசபை எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சென்னிதலா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகிய மூவரும் முதல்வர் ரேசில் இருந்தனர். கேரளத்தின் தற்போதைய சட்டசபை மே 23-ம் தேதிதான் முடிவடைகிறது என்பதால் முதல்வர் வேட்பாளரை தேர்வுசெய்ய காங்கிரஸுக்கு கால அவகாசம் நிறைய இருந்தது. ஆனால், கே.சி.வேணுகோபால் ஆதரவாளர்கள், வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் மற்றும் ரமேஷ் சென்னிதலா ஆதரவாளர்களும் பிளக்ஸ் போர்டுகள் வைப்பது, ரோட்டில் இறங்கி போராட்டங்கள் நடத்துவது என கேரளத்தை அதகளப்படுத்திவிட்டனர்.

ரமேஷ் சென்னிதலா, வி.டி.சதீசன், கே.சி.வேணுகோபால்

கே.சி.வேணுகோபால் முதல்வர் ஆகவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வைத்த போர்டுகளை, வி.டி.சதீசன் ஆதரவாளர்கள் கிழித்தெறிந்தனர். கடுதுருத்தி பகுதியில் வி.டி.சதீசன் ஆதரவாளர் ஒருவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றது அரசியலை பரபரப்பாக்கியது. தலைவர்கள் டெல்லிக்கு சென்றுவருவதும், டெல்லி தலைவர்கள் கேரளத்துக்கு வந்து ஆலோசனை நடத்துவதும் தொடர்ந்தது. 10 நாள்கள் விவாதத்துக்குப் பின் இன்று கேரள முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன் பெயரை கட்சி தலைமை அறிவித்துள்ளது.

கேரள முதல்வர் பதவிக்கு அறிவிக்கப்பட்ட வி.டி சதீசன்

புதிய முதல்வர் வி.டி.சதீசனுக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து கே.சி.வேணுகோபால் கூறுகையில், "கேரள முதல்வர் குறித்து கட்சியின் ஹை கமாண்ட் தீர்மானம் எடுக்கும் என நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஹை கமாண்ட் முடிவை ஏற்றுக்கொண்டு வி.டி.சதீசனுக்கு எல்லாவிதத்திலும் ஆதரவாக இருப்போம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User