Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

Apr 2, 2026 - 11:32
 0
Vote Vibes: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! - சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கதைகள்!

தவெக தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்திருக்கிறார்.

சட்டப்படி, ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியும். ஒரு வேளை இரண்டிலும் வெற்றி பெற்றால் ஏதாவது ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

இப்படி இதற்கு முன் பல அரசியல் தலைவர்கள் ஒரே நேரத்தில் இரு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்கள். ஒரு தொகுதியில் வெற்றி வாய்ப்பு சவாலாக இருக்கும் பட்சத்தில், பாதுகாப்பிற்காக இன்னொரு தொகுதியைத் தேர்வு செய்து போட்டியிடுவார்கள்.

கட்சியின் முக்கிய முகம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும்போது, அதன் அருகிலிருக்கும் தொகுதிகளுக்கு அது வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் எனக் கருத்தில் கொண்டு இத்தகைய விஷயங்களை அரசியல் தலைவர்கள் செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் யார் யார் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டிருக்கிறார்கள் என்கிற விவரத்தை இங்கு பார்ப்போமா...

எம்.ஜி.ஆர்:

1980-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

இதே சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரனும் ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

எம்.ஜி.ஆர் ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்ற பிறகு, எஸ்.எஸ். ராஜேந்திரன் மதுரை மேற்கு தொகுதியிலிருந்து வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஜெயலலிதா:

1991-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், காங்கேயம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றியை ருசித்தார் ஜெயலலிதா.

பிறகு காங்கேயம் தொகுதியை ராஜினாமா செய்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் பர்கூர், புவனகிரி, ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி என நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருந்த காரணத்தாலும் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தாலும் அனைத்து தொகுதிகளிலும் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

டாக்டர் கிருஷ்ணசாமி:

2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி சார்பாக, அதன் தலைவர் கிருஷ்ணசாமி ஓட்டப்பிடாரம் மற்றும் வால்பாறை என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால், இரண்டு தொகுதிகளிலும் தோல்வியையே இவர் சந்தித்தார்.

ஏ.எஸ்.பொன்னம்மாள்:

1977-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஏ.எஸ். பொன்னம்மாள் நிலக்கோட்டை மற்றும் பழனி என இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து, பின் இரண்டிலும் வாபஸ் பெற்றார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

வருகிற சட்டமன்றத் தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிடவிருக்கிறார். கடந்த திங்கட்கிழமை பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார். பின் அந்தத் தொகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் இன்று விஜய் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

மேலும் இந்த தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக போட்டியிடும் கிருஷ்ணசாமியின் மகன், ஷ்யாம் கிருஷ்ணசாமி நெல்லை, ஶ்ரீவில்லிபுத்தூர் என இரண்டு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0