எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த விஜயபாஸ்கர்; தவெகவில் இணைகிறாரா?
தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் விஜயபாஸ்கர்
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் இரண்டு அணிகள் உருவாகின.
இதனைத்தொடர்ந்து அதிமுகவிலிருந்து சில எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். தவிர அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எனப் பலர் தொடர்ந்து தவெகவில் இணைந்து வருகின்றனர்.

இதனிடையே அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி சண்முகமும், விஜயபாஸ்கரும் தவெகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் விஜயபாஸ்கர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் சற்று நேரத்திற்கு முன்பு பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
அதாவது, "தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’ உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்? உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகரை நேரில் சந்தித்து தனது விராலிமலை எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதிமுகவின் முக்கிய முகமாக இருந்த விஜயபாஸ்கர் இதுவரை 4 முறை எம்எல்ஏ- வாக இருந்திருக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவியபோது, சுகாதாரத்துறை அமைச்சராக தினசரி செய்தியாளர்களைச் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலமும், களப்பணிகள் மூலமும் தமிழகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டார். தற்போது கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததையடுத்து திருச்சி கிழக்கையும் சேர்த்து மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருக்கும் விஜயபாஸ்கர், தவெக-வில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)