Spotify: முதல் முயற்சி; ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம்! - பிஜாய் நம்பியார் மனைவி பேட்டி
ஆடியோ வடிவத்திற்கு என பிரத்யேகமாக இயங்கி வந்த 'ஸ்பாட்டிஃபை' தளத்தில், இப்போது குறும்படங்களும் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. 'டுயட்' என்ற குறும்படத்தை ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த ஷார்ட் ஃபிலிமை இயக்குநர் பிஜாய் நம்பியாரின் மனைவியும், நடிகையுமான ஷீத்தல் மேனன் இயக்கியிருக்கிறார். நடிகையாகப் படங்கள், விளம்பரப் படங்கள் என இயங்கி வந்தவர் இப்போது டைரக்ஷனில் கவனம் செலுத்துகிறார்.

மற்றொரு பக்கம் டைரக்ஷனில் அடுத்தடுத்த படங்களுக்கான வேலைகளில் பிஜாய் நம்பியார் இயங்கி வந்தாலும், இந்த 'டுயட்' குறும்படத்தை அவரே தயாரித்திருக்கிறார். ஷீத்தல் மேனனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.
இந்தக் குறும்படத்திற்கான ஐடியா, ஸ்பாட்டிஃபை தளத்தில் வெளியிடக் காரணம் என்ன, இன்றைய குறும்படங்களை வெளியிடுவதற்கு எப்படியான தளங்கள் இருக்கின்றன என உரையாடல் நீண்டது.
பேசத் தொடங்கியவர், "கொரோனா சமயத்தில்தான் இத்திரைப்படத்திற்கான ஐடியா எனக்குள் தோன்றியது. அது வெறும் யோசனையாக மட்டுமே இருந்தது. பின்னர், அதனை ஒரு கதை வடிவமாக்க எனக்குச் சிறிது காலம் ஆனது. பிறகு அதை ஏன் ஒரு குறும்படமாக உருவாக்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. பிறகுதான் அதற்கான வேலைகளைக் கவனித்து நான் இந்தக் குறும்படத்தைத் தொடங்கினேன்.
தன்னுடைய வீட்டில் தனிமையில் வாழும் ஒரு பியானோ இசைக்கலைஞனைப் பற்றியதுதான் இந்தக் குறும்படத்தின் கதை. அவர் வாழ்வில் மிக முக்கியமென நினைத்த ஒருவரை இழந்த மீளா சோகத்தில் இருக்கிறார்.
வலி, குற்றவுணர்ச்சி, மன அழுத்தம் என கொரோனா காலத்தில் பெரும் மனப்போராட்டத்தில் சிக்கித் தவிப்பவருக்கு இசை மட்டுமே நம்பிக்கை தருகிறது. இதனை மையமாக வைத்துதான் இந்தக் குறும்படத்தை எடுத்து, இப்போது வெளியிட்டிருக்கிறேன்.

நான் சில படங்களில் நடித்து வந்தேன். ஆனால், எனது நடிப்பு வாழ்க்கையில் நான் நினைத்தது போன்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் நான் தடுமாறிய போது, எனக்குள் இருந்த இயக்குநரை நான் கண்டறிந்தேன்.
அடுத்தது என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட காலம் கடந்துபோனது. எனவே, நடிப்பிலிருந்து விலகி வேறேதேனும் துறையில் கவனத்தைச் செலுத்த முடிவெடுத்தேன். ஆயினும், திரையுலகை விட்டு முழுமையாக விலக என்னால் முடியவில்லை. 'நாம் ஏதேனும் படைப்பை உருவாக்க வேண்டும்' என்று தோன்றியது.
அந்த ஆசைதான் என்னை அடுத்தடுத்து நகர வைத்தது. முதலில் சிறிய கதையைக் கையிலெடுத்து, 'சிப்ளிங்க்ஸ்' (Siblings) என்கிற குறும்படத்தை எடுத்தேன். எழுதி, ஒரு படத்தை இயக்கும் அனுபவமும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.
அது எனக்குத் தன்னம்பிக்கையை அளித்ததால், தொடர்ந்து டைரக்ஷன் செய்ய வேண்டும் என இறங்கிவிட்டேன். ஆனால், இது எனக்கு எளிதாக அமையவில்லை. பல சவால்கள் நிறைந்த பயணமாகத்தான் இருந்தன.
வழக்கமாக, ஒருவர் இயக்குநராக விரும்பினால், திரைப்படத் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வார்கள். பல திரைப்படங்களைப் பார்த்துத் திரைமொழிக்குத் தேவையான நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வார்கள்.

ஆனால், எவ்விதத் திட்டமும் இன்றித் திடீரென ஒரு வாய்ப்பு அமையும்போது, நாம் பல விஷயங்களுக்குத் தயாராக இருக்க வேண்டியிருந்தது. அது பல சவால்களைத் தந்தாலும், அந்தப் பயணத்தை நான் பெரிதும் ரசித்தேன்." என்றவர், அவருடைய கணவர் இயக்குநர் பிஜாய் நம்பியார் பற்றி, "தொடக்கத்தில் இருந்து என் கணவர் மட்டும்தான் எனக்கு நம்பிக்கை ஊட்டினார். "நடிப்பு, டைரக்ஷன் என இரண்டையுமே செய்ய வேண்டும். அனைத்தையும் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.
இந்த 'டுயட்' குறும்படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர். ஒரு தயாரிப்பாளராக அவருடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. நான் யோசிப்பதை எடுப்பதற்கான சுதந்திரத்தைத் தந்தார். எந்த நேரத்திலும் என்னுடைய கதையில் அவர் தலையிடவே இல்லை. படப்பிடிப்புத் தளத்திற்கு வந்து என்ன நடக்கிறது என்று கூடப் பார்வையிடவில்லை.
அதுபோல, எனக்கு வழிகாட்டலும் ஆலோசனைகளும் தேவைப்பட்டபோது கணவராக அவர் உடனிருந்தார். டைரக்ஷனைப் பொறுத்தவரையிலும் நான் அனைத்தையும் அவரிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன்.
ஒரு படப்பிடிப்புத் தளத்தை எப்படி வழிநடத்துவது, படப்பிடிப்பிற்கு முன் எத்தனை கவனமாகவும், அனைத்திற்கும் தயாரான சூழலிலும் இருக்க வேண்டும் என அனைத்தையும் அவரிடமிருந்தே கற்றுக் கொண்டேன்." என மகிழ்வோடு பகிர்ந்தவரிடம் அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்டோம்.

மியூசிக் பிளாட்ஃபார்மான ஸ்பாட்டிஃபையில் வெளியாகும் முதல் குறும்படம் இதுதான். பாடல்களைக் கேட்டு வந்த தளத்தில் இப்போது விஷுவல் வடிவங்கள் வரவிருக்கின்றன. அதற்கு ஷீத்தல் மேனனின் குறும்படம்தான் தொடக்கம். இது குறித்துப் பேசியவர், "குறும்படங்களை வெளியிடுவதற்குச் சரியான தளங்கள் இல்லை என்பதே உண்மை.
இந்தியாவைப் பொறுத்தவரை யூடியூப் தவிர்த்து, குறும்படங்களை வெளியிடுவதற்குச் சரியான தளங்கள் எதுவும் இல்லை. என்னுடைய குறும்படத்தை வெளியிடுவதற்கு ஒரு சரியான இடத்தைத் தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அதற்கான சூழலும் இங்குக் குறைவாகவே உள்ளன. என்னுடைய இந்தக் குறும்படத்தில் இசைக்கு முக்கியப் பங்கு உண்டு.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் இதில் பணியாற்றியுள்ளனர். எனவே, ஸ்பாட்டிஃபை வழியாக இத்திரைப்படத்தை வெளியிடுவது ஒரு சுவாரஸ்யமான முயற்சியாக இருக்கும் என்று அனைவரும் உணர்ந்தோம்.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள இந்தக் குறும்படத்திற்கு ஸ்பாட்டிஃபை ஒப்பந்தம் சரியாக அமைந்தது. ஸ்பாட்டிஃபை இதற்குமுன் இதுபோன்றதொரு முயற்சியை மேற்கொண்டதில்லை. இதுவே அவர்கள் வெளியிடும் முதல் குறும்படம். இந்த வித்தியாசமான முயற்சி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

'ஸ்பாட்டிஃபை தளத்தில் குறும்படமா?' என்று பலரும் வியப்பாகக் கேட்டனர். அது ஒரு புதிய அனுபவமாக அமைந்தது." என்றவர், "இத்திரைத்துறையில் நடிகராக இருந்தாலும், இயக்குநராக இருந்தாலும், வாய்ப்புகளைத் தேடுவது மிகவும் கடினமானது. அப்படி ஒவ்வொருவரும் பல போராட்டங்களைச் சந்தித்து வருகிறார்கள்.
பிறகு நான் யோசிக்கும் கதைக்கேற்ற நடிகர்கள் கிடைக்க வேண்டும், தயாரிப்பிற்கு பட்ஜெட் கிடைக்க வேண்டும். இவை அனைத்துமே பெரிய பிராசஸ். நிச்சயமாக எனக்கு அடுத்ததாக ஒரு முழுநீளத் திரைப்படத்தை இயக்க வேண்டும் எனும் விருப்பம் உள்ளது. தற்போது அதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். பார்ப்போம்!" என முடித்தார் நம்பிக்கையுடன்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)