உதயநிதி விவகாரம்: 'கைது, விசாரணை, ஆர்ப்பாட்டம், தள்ளுமுள்ளு, கல்வீச்சு' - தஞ்சையில் என்ன நடந்தது?

Aug 05, 2026 - 09:00
0
உதயநிதி விவகாரம்: 'கைது, விசாரணை, ஆர்ப்பாட்டம், தள்ளுமுள்ளு, கல்வீச்சு' - தஞ்சையில் என்ன நடந்தது?

தஞ்சையில் நடைபெற்ற தி.மு.க ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழக முதல்வர் விஜய் குறித்து ஆபசமாகப் பேசியதாக, த.வெ.க மகளிர் அணி நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினை சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையல், உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் தஞ்சையில் தி.மு.க-வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, காலை தி.மு.க-வினர் தஞ்சை ரயில் நிலையம் அருகில் நூற்றுக்கணக்கானோர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து, அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

udhayanithi stalin
udhayanithi stalin

தி.மு.க மத்திய மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான துரை.சந்திரசேகரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் டி.கே.ஜி நீலமேகம், ராமச்சந்திரன், இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜா, மாநகர செயலாளர் சண். ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

அப்போது, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், த.வெ.க அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியபடி பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தனர்.

ஒருபுறம் த.வெ.க மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம், மறுபுறம் தி.மு.க-வினர் பேரணியாக வந்ததால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் பெரும் பதற்றம் உருவானது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீஸார் அண்ணா சிலை ரவுண்டானா பகுதியில் குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், பழைய பேருந்து நிலையம் அருகே வந்த தி.மு.க-வினர் அங்கு வைக்கப்பட்டிருந்த த.வெ.க கொடிகளைப் பிடுங்கி எறிந்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் உருவானது. தொடர்ந்து, சாலையில் அமர்ந்தும், சாலையில் படுத்தும் தி.மு.க-வினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

tvk protest
tvk protest

இதையடுத்து, தி.மு.க-வினர் முதல்வர் விஜய்யின் உருவபொம்மையை தீ வைத்து எரித்தனர். மேலும், அவரது உருவப்படத்தை காலணியால் அடித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதுகுறித்து, தகவல் அறிந்ததும் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் இருந்து த.வெ.க-வினரும் அண்ணா சிலை பகுதியை நோக்கி வந்தனர். இப்படி, தி.மு.க-வினரும், த.வெ.க ஆதரவாளர்களும் ஒரே இடத்தில் திரண்டதால் பதற்றம் மேலும் அதிகரித்தது. இதனால், போலீஸார் இரு தரப்பினருக்கும் இடையே தடுப்புகளை அமைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.

ஆனால், தடுப்புகளை மீறியும் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் செருப்பு, கற்களை மாறி மாறி வீசிக் கொண்டனர்.

இதனால், தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவியது. இரு கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து போலீஸார் உடனடியாகத் தலையிட்டு இருதரப்பினரையும் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், பேரிக்கார்டுகள் அமைத்து பாதுகாப்பைப் பலப்படுத்தினர்.

உருவ பொம்மை எரிப்பு
உருவ பொம்மை எரிப்பு

தொடர்ந்து, தஞ்சை மாநகரம் முழுவதும் முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டனர். குறிப்பாக, பழைய பேருந்து நிலையம், பனகல் கட்டிடம் மற்றும் அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இப்படி, உதயநிதி ஸ்டாலினை தஞ்சை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னையிலிருந்து போலீசார் அழைத்து வந்ததால் அவரது ஆதரவாளர்கள் மேலும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாகக் கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

இதற்காக, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், டி.எஸ்.பி அழகேசன் தலைமையில் சென்னைக்குச் சென்றனர். பின்னர், சென்னையில் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்து அழைத்துக்கொண்டு காலை 11 மணியளவில், தஞ்சாவூருக்கு வேனின் புறப்பட்டனர்.

இந்நிலையில், அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையம் போதிய இடமில்லாத நெருக்கடியான இடத்தில் இருப்பதால், விசாரணைக்கு தி.மு.க-வினர் இடையூறு ஏற்படுத்துவார்கள் என்று கருதி, தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

police force
police force

இதையடுத்து தெற்கு காவல் நிலையம் அமைந்துள்ள சச்சிதானந்த மூப்பனார் சாலை முற்றிலுமாக மாலை காவல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இருபுறமும் தடுப்பு அரண்கள் வைத்து தடுக்கப்பட்டது.

தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை நடத்த, தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம், அரியலூர் எஸ்.பி செல்வகுமார், திருவாரூர் எஸ்.பி சதீஷ்குமார் உள்பட 5 எஸ்.பி-க்கள் காத்திருந்தனர். 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பாதுகாப்பு பணிகளை தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியா வுல்ஹக் தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில் இருந்தவாறு கண்காணித்து வந்தார். இன்னொருபக்கம், மணிமண்டபம் ரவுண்டானா அருகே ஏராளமான தி.மு.க-வினர் குவிந்திருந்தனர்.

அவர்கள் அவ்வப்போது காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும், தமிழக முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதன்பிறகு, தி.மு.க-வினர் அங்கிருந்த த.வெ.க பிளக்ஸ் பேனரைக் கிழித்து அதை தீ வைத்து எரித்து, விஜய்க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

dmk parties

அதே போல், தி.மு.க-வினர் கல் ஒன்றை எறிந்தனர். இந்தக் கல் தஞ்சாவூர் எஸ்.பி-யின் பின்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்தின் மீது விழுந்தது. மேலும், எஸ்.பி வாகனத்தை தி.மு.க-வினர் மறித்து போலீஸாருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். இதனால், அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் அவ்வப்போது ஏற்பட்டது.

இன்னொருபக்கம், மாலை 6.30 மணியளவில் திருச்சி வழியாக வந்த காவல்துறை வாகனம், பூண்டி பிரிவுசாலை வரை வந்துவிட்டு, மீண்டும் செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்துச் சென்றனர்.

தன்னுடைய வழக்கறிஞர்கள் வந்தால்தான் காவல் நிலையத்துக்குள் வருவேன் எனக் கூறி அங்கு உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை விட்டு இறங்காமல் சுமார் அரைமணி நேரம் காத்திருந்தார். பின்னர், தி.மு.க வழக்கறிஞர்கள் தஞ்சாவூரிலிருந்து செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குச் சென்றனர்.

அதன்பிறகு, உதயநிதி வாகனத்திலிருந்து இறங்கி காவல் நிலையத்துக்குள் சென்றார். அவரிடம் தஞ்சாவூர் எஸ்.பி சுந்தரவதனம் முன்னிலையில் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிகண்டன் விசாரணை நடத்தினார்.

investigation

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற விசாரணையின்போது, போலீஸாரின் கேள்விகளுக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார். செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த தகவல் தெரிந்ததும், அங்கு ஆயிரக்கணக்கான தி.மு.க-வினர் திரண்டு, போலீஸாருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

அப்போது, பிக்பாஸ் ஜூலியும் தி.மு.க-வினர் கூட்டத்தில் நின்றுகொண்டு, த.வெ.க அரசுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினார். ஏராளமான வாகனங்களில் தி.மு.க-வினர் வந்ததால் தஞ்சாவூர் - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால், பொதுமக்கள், வாகனங்களில் சென்ற பலரும் பாதிக்கப்பட்டனர். அதே போல், தி.மு.க-வினர் உதயநிதி ஸ்டாலினை வாழ்த்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User