திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி பணியிட மாற்றம் - பின்னணி என்ன?

Jun 05, 2026 - 12:31
0
திருச்செந்தூர் கோயில் இணை ஆணையர், உதவி ஆணையர் அதிரடி பணியிட மாற்றம் - பின்னணி என்ன?

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். ஆண்டுக்கு ரூ.50 கோடி வரை திருக்கோயிலுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வளாகப்பணிகள் தொடங்கப்பட்டது. அந்தப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிய நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திருச்செந்தூர்

அத்திட்டத்தின் அடுத்தக்கட்டமாக ஆன்லைன் முறையில் தரிசனத்தை நடைமுறைப்படுத்துவது இலக்காக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அந்த நடவடிக்கை தொடங்கப்படாததால், கோயிலுக்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அர்ச்சகர்கள் தரிசனத்திற்காக வரும் பக்தர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு கோயிலுக்குள் அனுப்புவதாக புகார் எழுந்தது. இது குறித்து சமூக வலைதளங்களிலும் புகார்கள் கிளம்பியது.

இந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், இக்கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நேர்வழியில் தரிசனம் செய்ய அமைச்சரிடமே நபர் ஒன்றுக்கு ரூ.1,000 என அர்ச்சகர் ஒருவர் பேரம் பேசி பணம் பெற்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வு மேற்கொண்டார். அன்றைய தினமே தரிசனத்திற்கு பணம் கேட்ட அர்ச்சகர், முடிக்காணிக்கை செலுத்துவதில் பக்தர்களிடம் பணம் கேட்ட 2 பணியாளர்கள், இரண்டு தனியார் பாதுகாப்பு அதிகாரிகள் என 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்தது. அதேபோல கடந்த 14-ம் தேதி, ரூ.100 கட்டண தரிசன வரிசையில் பக்தர்களுக்கு போலி டிக்கெட்டுகளை வழங்கி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக மேனகா என்ற பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்

அவர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ஒருவர் மட்டுமே இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருக்க முடியாது. கீழ்நிலை ஊழியர் முதல் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை பலருக்கும் தொடர்பு இருக்கும். அதனால், இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால், தரிசன டிக்கெட்டில் மோசடி மற்றும் முறையாக கண்காணிப்பு இல்லாதது போன்றவற்றால் பக்தர்கள் பலமணி நேரம் காத்திருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக திருக்கோயில் நிர்வாகம் மீது அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருக்கோயில் இணை ஆணையர் ராமு திருவேற்காடு, தேவி கருமாரியம்மன் திருக்கோயில் இணை ஆணையராகவும், உதவி ஆணையர் மெய்வேல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

திருச்செந்தூர்

அதே போல காலியாக இருந்த துணை ஆணையர் பணியிடத்திற்கு திருச்சி துணை ஆணையர் மற்றும் சரிபாப்பு அலுவலரான யக்ஞ நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே இக்கோயிலில் பணிபுரிந்தவர் ஆவார். திருச்செந்தூர் திருக்கோயிலில் தொடர் முறைகேடுகள் நடைபெற்று வருவதால் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும் இந்து முன்னணி அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User