திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

Nov 06, 2026 - 13:30
0
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா: பக்தர்களுக்கான தங்கும் கூரைகள், கடற்கரை சமன்படுத்தும் பணிகள் தீவிரம்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கந்த சஷ்டி திருவிழா.

ஆறு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா வரும் நவம்பர் 10-ம் தேதி  காலை யாகசாலை பூஜையுடன் தொடங்க உள்ளது.

தற்காலிக கொட்டகை அமைக்கும் பணி
தற்காலிக கொட்டகை அமைக்கும் பணி

தினமும் மாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி தங்கச்சப்பரத்தில் வீதியுலா வருதல் நடைபெறும். ஆறாவது நாள் திருக்கோயில் கடற்கரையில் மாலை 4 மணிக்கு கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும்.

இதில் கலந்து கொள்ள சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கந்த சஷ்டி விழாவின் 6 நாட்களில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.

இதற்காக குடும்பம் குடும்பமாக வரும் பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பறை மற்றும் தங்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, பக்தர்கள் தங்குவதற்கு 5 நிரந்தர தங்குமிடங்கள் மற்றும் 11 தற்காலிக தங்குமிடங்கள் என மொத்தம் 16 இடங்களில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, தற்காலிக கூரைகள் அமைக்கும் பணிகள் கோயில் வளாகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடற்கரையில் மணல் மேடுகள் சமன்படுத்தும் பணி
கடற்கரையில் மணல் மேடுகள் சமன்படுத்தும் பணி

அதே நேரத்தில் கடற்கரையில் உள்ள மணல் மேடுகளை ஜே.சி.பி இயந்திரம் மூலம் சமன்படுத்தும் பணியும் முழு வீச்சில் நடந்து வருகிறது. கடற்கரை தொடக்கம் முதல் அய்யா வைகுண்டபதி திருக்கோயில் வரை இந்தச் சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பக்தர்களின் வருகையை எதிர்கொள்ளும் வகையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணிகளில் கோவில் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User