`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' - தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

May 20, 2026 - 21:30
0
`மருத்துவமனைக்கு வெள்ளை கோட்டுடன் சென்றதற்கு காரணம் இதுதான்!' - தவெக நிர்வாகி வாசுதேவி விளக்கம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள அச்சம்பட்டி தனியார் குவாரியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி நிர்மல் (29) என்பவரின் கை இயந்திரத்தில் சிக்கித் துண்டானது. அதையடுத்து, உடனடியாக நிர்மல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து தவெக தென்காசி மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் வாசுதேவி என்பவர், மருத்துவமனைக்கு வெள்ளை நிறக் கோட்டுடன் ஆய்வு மேற்கொள்ளச் சென்றதாகச் சர்ச்சை வெடித்தது. அமமுக பொதுச் செயலாளர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பலரும் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுத் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

வாசுதேவி

இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக வாசுதேவியைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர், “நான் தென்காசி வடக்கு மாவட்ட தவெக மருத்துவ அணி அமைப்பாளராகச் செயல்பட்டு வருகிறேன். குவாரி விபத்தில் தொழிலாளியின் துண்டான கை, மேல் சிகிச்சைக்கு வெறும் மஞ்சள் பையில் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் பரவின. அது குறித்து அறிந்துகொள்ளவே, மாவட்டச் செயலாளர் மாரியப்பனின் அறிவுறுத்தலின் பேரில் கட்சியினருடன் மருத்துவமனைக்குச் சென்றேன்.

ஆய்வுக்காகச் செல்லவில்லை. நான் முதுநிலை செவிலியர் பட்டப்படிப்பு, MBA மருத்துவமனை மேலாண்மை மற்றும் 15 ஆண்டுகள் மருத்துவத் துறையில் அனுபவம் உள்ளவர் என்பதால், மருத்துவமனைக்கு வெள்ளை நிறக் கோட்டுடன் சென்றேன்” என்றார்.

வாசுதேவி

மேலும், இது குறித்துச் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செந்தில் சேகரிடம் கேட்டபோது, “இயந்திரத்தில் சிக்கி கை துண்டான தொழிலாளிக்கு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் துண்டான கை, முறையான மருத்துவப் பாதுகாப்பு நடைமுறைகளின்படி ஐஸ் பெட்டியில் பதப்படுத்தப்பட்டு, மஞ்சள் நிற மருத்துவ உயிரி கழிவுப் பையில் (Bio-medical waste bag) பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டது” எனக் கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User