மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

Mar 22, 2026 - 13:31
 0
மின்சாரத்தை துண்டித்து 2 டிரான்ஸ்பார்மர்கள் திருட்டு – திருடர்களை வலை வீசி தேடி வரும் போலீஸார்!

பொதுவாக தோட்டங்கள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து விட்டு மின் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச் செல்வதுண்டு. ஆனால், நெல்லை மாவட்டம், இட்டமொழியில் விவசாய நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் இலங்கையாகுடிகுளம், வேலாயுதபுரம் ஆகிய காட்டுப்பகுதியில் மின்கம்பங்களில் ‘டிரான்ஸ்பார்மர்கள்’ நிறுவப்பட்டிருந்தன.

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் மினிலாரியில் வந்த ஒரு கும்பல், மின் கம்பத்தில் ஏறி டிரான்ஸ்பார்மரில் மின் இணைப்பினை துண்டித்துள்ளனர். பின்னர், டிரான்ஸ்பார்மரில் கயிறு கட்டி கீழே இறக்கி வாகனத்தில் ஏற்றி அப்பகுதியில் இருந்த 2 டிரான்ஸ்பார்மர்களையும் திருடிச் சென்றுள்ளனர். மறுநாள் காலையில் விவசாயிகள் தங்களின் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்துள்ளனர்.

மோட்டார் ஓடவில்லை.  மின் இணைப்பு இல்லாததால் மின் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கூறியுள்ளனர். மின் வாரிய ஊழியர்களும் அப்பகுதியில் ஆய்வு செய்தபோது 2 இடங்களில் டிரான்ஸ்பார்மர்கள் திருடு போனது தெரிய வந்தது. இலங்கையாகுடிகுளம் அருகில் டிரான்பார்மர்களை கயிறு கட்டி இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச் சென்ற தடயங்களும் பதிவாகியிருந்தன.

திருடப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள்

இதுகுறித்து இட்டமொழி இளநிலை பொறியாளர் சங்கீதா திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து டிரான்ஸ்பார்மர்களை திருடியவர்களை தேடி வருகின்றனர். டிரான்ஸ்பார்மர்களையே திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0