குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

Jun 27, 2026 - 15:32
0
குரங்குகளுக்கு பழம் கொடுத்த புது மணப்பெண்; மலை உச்சியிலிருந்து உருண்டு விழுந்து உயிரிழந்த சோகம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள தெற்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். வெளிநாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சுரேஷ், தன் மனைவியுடன் கழுகுமலை கழுகாசல மூர்த்தி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அருகிலுள்ள மலை உச்சியிலுள்ள  உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு நடந்து சென்றார்.

கழுகுமலை உச்சிக்குச் செல்லும் பாதை

நடைபாதையில் இருந்த குரங்குகளுக்கு வாழைப் பழங்களை உணவாகக் கொடுத்தனர். அப்போது அனிதாவின் கையில் உள்ள பழங்களை வாங்கிய குரங்குகள் அவரது கையைப் பிடித்து இழுத்தன. அத்துடன் பிற குரங்குகள் பழத்திற்காக அவரைச் சுற்றின. இதனால் பதறி அடித்தவாறு ஓடினார். கால் இடறியதில் அவர் மலையில் இருந்து உருண்டு சுமார் 300 அடி பள்ளத்தில் விழுந்தார்.

இதைப்பார்த்து கூச்சலிட்டவாறே மலை அடிவாரம் நோக்கி ஓடினார் சுரேஷ். அவரது கூக்குரல் கேட்டவர்கள் கழுகுமலை காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கூறினர். மலை உச்சியில் இருந்து உருண்டு விழுந்த அனிதா பாறைச் சரிவில் சிக்கிக் கொண்டார். கயிறு கட்டி இறங்கி அனிதாவை மீட்டனர். ஆனால், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். கழுகுமலை காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ”தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் திருச்செந்தூர், மணப்பாடு ஆகிய கடற்கரைப் பகுதிகளைத் தாண்டி மலைப்பகுதி சுற்றுலாத்தலம் என்றால் அது கழுகுமலைதான்.  

கழுகுமலை காவல் நிலையம்

மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது இந்தக் கழுகுமலை. இங்கு தென்பழனி என அழைக்கப்படும் கழுகாசலமூர்த்தி முருகன் திருக்கோயில் உள்ளது. இது ஒரு குடைவரைக்கோயில். ஒருமுகமும் ஆறு கரங்களும் கொண்ட அம்சம் உள்ள முருகத்தலம் என்பதால் இந்தக் கோயில் சிறப்பு பெற்றது. இந்தக் கோயிலை ஒட்டி சுமார் 300 அடி உயரத்தில் உள்ள மலை உள்ளது.

இந்த மலையில் சமணர்கள் சிற்பப் படுக்கைகள், ஒரே பாறையில் குடையப்பட்ட அதிசயமான வெட்டுவான்கோயில், பேச்சியம்மன் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் மற்றும் மலையடிவாரத்தில் சிறுவர் பூங்கா ஆகியவை உள்ளன. கழுகுமலை கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலுள்ள மலைக்கும், பூங்காவிற்கும் சென்று வருவது வழக்கம். வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் இங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். மலையேறும் மற்றும் இறங்கும் பகுதிகளில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக காணப்படுகின்றன.

சமணர் படுக்கைகள்

இந்த மலைப்பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குரங்குகள் கூட்டமாகவே வந்து அச்சுறுத்துகின்றன. குரங்குகள் உணவின்றி தவிப்பதும் ஒரு காரணம். அதனால்தான் கழுகுமலை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள், கடைகளுக்குள் அத்துமீறி உணவுப் பொருள்களை எடுத்துச் செல்கின்றன. பகல், இரவு நேரவு நேரம் இல்லாமல் குரங்குகளின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பல முறை மனு அளித்தும் பலனில்லை.” என்கின்றனர் அப்பகுதியினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User