பொய்த்துப் போன பருவமழை; வறண்டு போன 1,420 குளங்கள்; வறட்சி பாதிப்பில் நெல்லை, தென்காசி விவசாயிகள்

Nov 25, 2026 - 15:31
0
பொய்த்துப் போன பருவமழை; வறண்டு போன 1,420 குளங்கள்; வறட்சி பாதிப்பில் நெல்லை, தென்காசி விவசாயிகள்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விவசாயமே முக்கியத் தொழிலாக விளங்குகிறது. இந்த இரண்டு மாவட்டங்களில் அணைகள் இருந்தாலும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள குளங்களின் பாசனத்தையே அதிகம் நம்பியுள்ளனர்.

நெல், வாழை, கரும்பு, நிலக்கடலை, மக்காச்சோளம், உளுந்து, காய்கறிகள், கிழங்கு வகைகள், பூக்கள் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த இரு மாவட்டங்கள், வடகிழக்குப் பருவமழை, தென்மேற்குப் பருவமழை ஆகிய இரண்டு மழைப்பொழிவையுமே பெறுகின்றன.

வறண்ட வரத்துக் கால்வாய்
வறண்ட வரத்துக் கால்வாய்

தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்து தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்யும் காலம் நடக்கிறது. ஆனாலும், மழைப்பொழிவு இல்லாததால் கோடைகாலத்தை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் குளங்கள் தண்ணீரின்றி வறண்டு மைதானம் போலக் காணப்படுகின்றன.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, வீரவநல்லூர், பத்தமடை, களக்காடு, நாங்குநேரி, திசையன்விளை ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் வறண்டுள்ளன.   

அதேபோல தென்காசி மாவட்டத்தில் கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை, சாம்பவர் வடகரை, வாசுதேவ நல்லூர், கொட்டாகுளம், பண்பொழி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களும், சிற்றாற்றுப் பாசனத்தின் கீழ் உள்ள கீழப்பாவூர், மேலப்பாவூர், நாகல்குளம், கடம்பன்குளம், ஆலங்குளம், பழைய குற்றாலம் மூலம் பாசனம் பெறும் திப்பண்ணங்குளம், ஆவுடையானூர்குளம் உள்ளிட்ட பல குளங்களும் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன.

தண்ணீரின்றி வறண்ட நிலையில் வரத்துக் கால்வாய்
தண்ணீரின்றி வறண்ட நிலையில் வரத்துக் கால்வாய்

இதுகுறித்து இரு மாவட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகளிடம் பேசினோம், “நெல்லை, தென்காசி மாவட்டங்களிலுள்ள குளம், வரத்துக் கால்வாய்களில் தண்ணீர் இல்லாததால் விவசாயப் பணிகளைத் தொடங்குவதில் நாளுக்கு நாள் தாமதமாகிக் கொண்டே செல்கிறது. வடகிழக்குப் பருவமழை பெய்திருந்தால் தற்போது விவசாயிகள் நெல் நாற்று நடும் பணிகளைத் தொடங்கியிருப்பார்கள். ஆனால், தற்போது நாற்றாங்கால்கூட அமைக்கப்படவில்லை.

கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் பாசனத்தை நம்பியுள்ள குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டும் நாற்றாங்கால் அமைக்கும் பணியையும் வாழைக்கன்றுகள் நடும் பணியையும் தொடங்கியுள்ளனர். வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதால் நெல்லை, தென்காசி மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகையும் வழங்க வேண்டும். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்கின்றனர்.  

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினோம், “நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு, கொடுமுடியாறு, கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு, நம்பியாறு, பச்சையாறு என 11 அணைகள் உள்ளன. இந்த அணைகளில் 13 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 41 முதல் 52 சதவீதம் தண்ணீர் இருப்பு இருந்தது. 727 குளங்கள் நிரம்பி மறுகால் சென்றன. இரு மாவட்டங்களிலும் மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. இதில் 1,221 கால் வரத்துக் குளங்களும், 1,297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். இதில், 1,420 குளங்கள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன. தாமிரபரணி மற்றும் சிற்றாற்றுப் பாசனங்களில் உள்ள 958 கால் வரத்துக் குளங்களில் ஒரு மாத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளது.

நீர்மட்டம் குறைந்த பாபநாசம் அணை
நீர்மட்டம் குறைந்த பாபநாசம் அணை

156 குளங்களில் இரண்டு மாத அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்த வரையில் வைப்பாற்றுப் பாசனத்தில் 29 குளங்களும், கீழ் தாமிரபரணி பாசனத்தில் 107 குளங்களும், 408 ஊராட்சிக் குளங்களும் உள்ளன. இதில், 25 முதல் 75 சதவீதம் வரை பெரும்பாலான குளங்களில் தண்ணீர் இருப்பு உள்ளது. 16 குளங்கள் மட்டும் முழுமையாக வறண்டுள்ளது. விரைவில்  வடகிழக்குப் பருவமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User