`அதான் கை, கால் நல்லா இருக்கே!' - வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

Jul 22, 2026 - 13:01
0
`அதான் கை, கால் நல்லா இருக்கே!' - வயர் பின்னும் விழிச் சவால் மாற்றுத் திறனாளி ராஜா வைக்கும் கோரிக்கை

திருநெல்வேலி ராமையம்பட்டியைச் சேர்ந்த எஸ். ராஜா பிறவியிலேயே பார்வை சவாலுடைய மாற்றுத் திறனாளி.

"கண் பார்வை சரியா இல்லன்னா என்ன, அதான் கை, கால் நல்லாதான இருக்கே. 10-ஆம் வகுப்பு வரை மதுரை `மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில்' படிச்சிருக்கேன். பாட்டி அம்மா செஞ்ச வயர் பின்னும் தொழிலை 9 வயதிலேயே கத்துக்கிட்டேன்.

பார்வை சவால் மாற்றுத்திறனாளி எஸ்.ராஜா
பார்வை சவால் மாற்றுத்திறனாளி எஸ்.ராஜா

அதுல இருந்து வயர் சம்பந்தப்பட்ட கட்டில், சேர், சோபா, லாரி ஆட்டோக்களின் டிரைவர் சீட் எல்லாத்தையும் கையாலயே பின்னி கொடுக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச தொழிலைச் சில பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்குச் சொல்லியும் கொடுப்பேன். அந்தப் பணத்தை வைத்து கஞ்சி குடிப்பேன்" என்று நம்பிக்கையாக பேசுகிறார் வயர் பின்னும் தொழிலாளி ராஜா.

வயது 45, மனைவியும் பார்வை சவால் மாற்றுத்திறனாளி. தம்பியின் ஆதரவில் இருக்கும் நிலையில், தம்பிக்கு கூடுதல் உதவி செய்ய வேண்டும் என்று 2015ல் சுய முயற்சியில் தச்சநல்லூர் பகுதியில் 'இரு கண் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி சிறு தொழில் செய்யும் வயர்ப்பின்னும் பெட்டிக்கடை'யை ஆரம்பித்தார்.

"தொழில் போட்டி அதிகமா இருக்கு, பெருசா வருமானம் இல்லனாலும் வயத்து பொழப்புக்கு போதுமானதா இருக்கு, அதனால சில ஏமாற்றங்களை பெரிசா மனசுல எடுத்துக்க மாட்டேன்.

தொழில் போட்டியினால எனக்கு அப்புறம் கடை ஆரம்பிச்ச எல்லாருக்கும் கரண்ட் வசதி கிடைச்சிருச்சு, என் கடைக்கு இன்னும் கரண்ட் வசதி கிடைக்கல. பலமுறை கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுத்துட்டேன், ஆனா கண்டுக்கவே இல்ல.

ராத்திரி நேரம் கடை எங்க இருக்குன்னு பல பேருக்கு தெரியாது. இதனால பல ஆர்டர் கைநழுவி போயிருக்கு.

அதுபோக மர பிரேமில் டிரில்லிங் மிஷின் வச்சி ஓட்டை போட கரண்ட் வேணும். டிரில்லிங் மிஷின் வச்சு ஓட்டை போட மத்த கடைல கொடுத்தா, "இந்தா தாரேன், அந்தா தாரேன்"னு 5 நிமிஷம் வேலையை இழுத்து அடிக்கிறாங்க" என தனது வேதனையை வெளிப்படுத்துகிறார் வயர் பின்னும் மாற்றுத்திறனாளி ராஜா.

பார்வை திறன் சவால் இருந்தாலும், நம்பிக்கையாக தொழில் செய்து பயணிக்கும் ராஜா போன்றவர்கள் நமக்கு சிறந்த முன்னுதாரணம். அரசு இவர்களுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படையான தேவைகளை பூர்த்தி செய்தாலே, கூடுதல் நம்பிக்கையுடன் வாழ்வை முன்நகர்த்தி செல்வார்கள்.!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User