டாடா டியாகோவின் 10 ஆண்டுக்கால பயணம்: அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் டாடா மோட்டர்ஸ் CTO!

Jun 15, 2026 - 18:01
0
டாடா டியாகோவின் 10 ஆண்டுக்கால பயணம்: அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் டாடா மோட்டர்ஸ் CTO!

டாடா டியாகோ நாட்டில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய சாலைகளில் ஏழு லட்சம் டாடா டியாகோ கார்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் டாடா மோட்டர்ஸின் CTO விவேக் ஶ்ரீவத்சவ் உடன் இந்த நீண்ட பயணம் குறித்து உரையாடினோம். இந்த பயணம் தந்த அனுபவங்களில் இருந்து அவர் துவங்கினார்.

``டாடா டியாகோவுக்கு முன்புவரை அதிகமாகத் டாக்ஸியாகப் பயன்படுத்தப்பட்டுவந்த கார்களைத்தான் நாங்கள் விற்பனை செய்துவந்தோம். தங்களின் சொந்த பயன்பாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் நேரடியாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் எங்களுக்கும் முதல் பாலம் போட்டதே இந்த டியாகோதான்.

இந்த பத்து ஆண்டுக்காலத்தில் பல மைல்கல்களை டியாகோ கடந்திருக்கிறது. டியாகோ NRG நாட்டின் முதல் மின்சார ஹேட்ச்பேக், பாதுகாப்பிற்கு GNCAP-ல் நான்கு நட்சத்திரம் என்று அதற்கு நிறைய அடையாளங்கள் கிடைத்தன.

டாடா டியாகோ NRG
டாடா டியாகோ NRG

CNG எரிபொருளில் இயங்கும் முதல் AMT என்ற பெருமையையும் இப்போது டியாகோ பெற்றிருக்கிறது."

கேள்வி: இந்த பத்து ஆண்டுகளில் டியாகோவின் வாடிக்கையாளர்கள் இடமிருந்து நீங்கள் படித்த பாடங்கள் என்ன?

விவேக்: ஹேட்ச்பேக் கார்களை விரும்பி வாங்கும் பலரும் இப்போது காம்பேக்ட் எஸ்யூவியின் பக்கம் போய்கொண்டிருக்கிறார்கள். விலையின் காரணமாக புதிய தொழில்நுட்பங்களையும் அம்சங்களையும் ஹேட்ச்பேக் கார்களில் தர இயலாமல் போனதுதான் இதற்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது. அதனால் இப்போது நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய டியாகோவில் நவீன தொழில்நுட்பங்கள், நவீன பாதுகாப்பு அம்சங்கள், புதிய அம்சங்கள் - வசதிகள் ஆகியவற்றை சேர்த்திருக்கிறோம்.

டியாகோவில் இப்போது புதிதாக சேர்ந்திருக்கும் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் ஆகிய வசதிகளை குறுகிய சாலைகளில்கூட நம்பிக்கையோடு டியாகோவை ஓட்டவும் பார்க் செய்யவும் அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.

ஹைஸ்பீட் Snapdragon பிராசஸ்சர் கொண்ட பெரிய தொடு திரை டியாகோவுக்கு பிரிமியம் உணர்வை கொடுப்பதோடு துரிதமாகவும் செயல்படும். அண்ட்ராய்ட் ஆட்டோ, ஆப்பில் கார்ஃப்ளே போன்ற வசதிகள் இருப்பதால் நம் ஸ்மார்ட்ஃபோனை இதோடு வயர்லஸாகவே இணைத்துக் கொள்ள முடியும். டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டருக்கும் இப்போது அப்-மார்கெட் அடையாளத்தை கொடுத்திருக்கிறோம்.

LED முகப்பு விளக்குகளின் வீச்சை மேம்படுத்தியிருக்கிறோம். டெயில் லைட்ஸ் டிசைனையும் மேலும் கவர்ச்சியாக மாற்றியிருக்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக இதன் வெளிப்புறத்தோற்றம் இளைஞர்களை கவரும் வண்ணம் மாறியிருக்கிறது.

கேள்வி: எல்லாம் சரி, டியாகோ அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இதற்கு புதிய இன்ஜின் கொடுத்திருக்க வேண்டும்தானே?

விவேக்: டியாகோவை இயக்குவது 1.2 லிட்டர் NA இன்ஜின். இது நம்பகமான இன்ஜின். நிரூபிக்கப்பட்ட இன்ஜின். பல்வேறு கார்களில் அதாவது 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களில் இது திறம்பட இயங்கிக்கொண்டிருக்கும் இன்ஜின். இதைவிட பெரிய இன்ஜினை கொடுத்தால் மைலேஜ் குறையும். அதனால் இந்த இன்ஜினை நாங்கள் மாற்ற விரும்பவில்லை. ஆனால் டியாகோவின் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக் ஆர்கிடெக்ச்சரை மாற்றியிருக்கிறோம்.

`எவ்வளவு பணம் கொடுக்கிறீர்களோ, அந்த அளவுக்குத்தான் பாதுகாப்பு வசதிகள்' என்ற நடைமுறையை டியாகோ மூலம் உடைத்திருக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு சாய்ஸ் முக்கியம். அதனால் பெட்ரோல், CNG, EV என்று மூன்று வகையான எரிபொருள் தேர்வுகளை கொடுக்கிறோம். பெட்ரோல் மற்றும் CNG மாடல்களில் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷனும் உண்டு. CNG வேரியண்டில் பேடில் ஷிஃப்ட்டர்ஸ்கூட கொடுக்கிறோம்.

CNG வேரியண்ட் என்றால் பெட்டி படுக்கைகளை வைக்க இடம் இருக்காது என்ற கருத்தையும் டியாகோ பொய்யாக்கியிருக்கிறது. CNG வேரியண்ட்டில் இரட்டை சிலிண்டர்கள் இருப்பதால் டிக்கியில் பொருள்களை வைக்கவும் முடியும்.

கேள்வி: கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் மனநிலை இப்போது எப்படி இருக்கிறது?

விவேக்: தனிப்பட்ட பயன்பாட்டுக்காக கார்களை வாங்கும் போக்கு அதிகரித்து வருகிறது. மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களின் மீது வாடிக்கையாளர்கள் பெருமளவில் திரும்பத் துவங்கியிருக்கிறார்கள். குறிப்பாக மின்சார கார்களை நோக்கி கணிசமான வாடிக்கையாளர்கள் திரும்புவதை பார்க்க முடிகிறது. டாடா பஞ்ச்.ev அறிமுகமானதற்கு பிறகு 12 லட்சத்துக்கு குறைவான மின்சார கார்களின் சந்தை மூன்றரை மடங்கு அதிகரித்திருக்கிறது. அதே போன்ற ஒரு நகர்வு இப்போது டாடா டியாகோ.ev செக்மெண்ட்டிலும் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

குறிப்பாக டாடா டியாகோ.ev 2026 பற்றி ஏராளமான தகவல்களை சொன்னார் ஆனந்த் குல்கர்னி, டாடா மோட்டர்ஸின் CPO (Chief Products Officer), Tata Passenger Electric Mobility Limited. அதில் இருந்து சில துளிகள்:

"இது அறிமுகமானதில் இருந்து அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் 75 ஆயிரம் வாடிக்கையாளர்கள் டாடா டியாகோ.ev ஐ ஓட்டிவருகிறார்கள். அவர்கள் இதுவரை 230 கோடி கி.மீட்டர்கள் ஓட்டியிருக்கிறார்கள். போதும் போதும் என்கிற அளவுக்கு இப்போது எங்களிடம் தகவல் இருக்கிறது.

சற்று விரிவாக சொல்ல வேண்டும் என்றால், டாடா டியாகோ.ev ஐ ஓட்டுகிறவர்களில் 80 சதவிகிதம் பேர் பெரும்பாலும் இதை நகர்புறங்களில்தான் ஓட்டுகிறார்கள். மீதமிருக்கும் 20 சதவிகித வாடிக்கையாளர்கள் இதை சிட்டிக்கும் வெளியிலும் எடுத்துச் செல்கிறார்கள். அப்போது சிலர் ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்துகிறார்கள். இது போன்ற தகவல்களையும் அடிப்படையாக வைத்துத்தான் டாடா டியாகோ.ev ஐ மறுஉருவாக்கம் செய்திருக்கிறோம்.

இப்போது நாங்கள் மோட்டர் துவங்கி டயர்கள் வரை பலவற்றை மேம்படுத்தியிருக்கிறோம். அதனால் காரின் எடை சற்றே குறைந்திருக்கிறது. த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் ஓட்டுதல் அனுபவத்தை எளிதானதாக்கியிருக்கிறது. பேட்டரியில் கூட ரசாயன ரீதியாக சில மாற்றங்களை செய்திருக்கிறோம். அதனால் இப்போது இதை மேலும் வேகமாக சார்ஜ் செய்ய முடியும். அதாவது ஜஸ்ட் 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் இதை மேலும் நூறு கி.மீட்டர்கள் ஓட்ட முடியும்.

பேட்டரி மட்டுமல்ல காரின் ஹெட்லாம்ப்ஸ், பம்பர், போனட் என்று காரின் முகப்பை ரீடிசைன் செய்திருக்கிறோம். காரின் கேபினிலும் ஸ்டீயரிங் துவங்கி டச் ஸ்கிரீன் வரை பலவற்றை மேம்படுத்தியிருக்கிறோம். இப்போது எந்த வேரியண்டாக இருந்தாலும் ஆறு ஏர் பேக்ஸ் கொடுக்கிறோம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் இதை நிச்சயமாக 205 கி.மீட்டர் துவங்கி 215 கி.மீட்டர் கட்டாயம் ஓட்ட முடியும். இது C 75 என்று குறிப்பிடப்படும் ரியல் வேர்ல்ட் ரேஞ்ச். அதே போல NVH அளவையும் மேம்படுத்தியிருக்கிறோம். அதனால் காருக்குள் சாலையின் சத்தம் கேட்காது. டயர் சத்தம் என்பது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது" என்றார்.

மார்டின், தலைமை டிசைன் ஆஃபீஸர், டாடா மோட்டர்ஸ், "எண்ணிக்கொடுக்கும் பணத்துக்கு ஏற்ற காரான இதை மறுஉருவாக்கம் செய்வது என்பது சவாலான செயல் என்றாலும், அதை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறோம். கார் பெரிதாக தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக இதன் முகப்பை மாற்றி அமைத்திருக்கிறோம். காரின் கேபினையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றி அமைத்திருக்கிறோம். காரின் கேபினுக்குள் நீங்கள் பார்க்கும் ஃபேப்ரிக் துவங்கி திருகுகள் வரை... UX/UI வரை பலவற்றை மேம்படுத்தியிருக்கிறோம்" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User