Measuring Tape இல் இவ்வளவு ரகசியங்களா? - இது தெரியாமப் போச்சே?! - 11
நாம் அன்றாடம் சாதாரணமாகப் பயன்படுத்தும் `மெஷரிங் டேப்' (Measuring Tape) வெறும் நீளத்தை அளக்கும் கருவி மட்டுமல்ல; அது ஒரு மிகச்சிறந்த பொறியியல் அற்புதம்.
டேப்பின் நுனியில் உள்ள இரும்புக் கொக்கியில் இருக்கும் அந்தச் சிறிய துளை, ஆணி அல்லது ஸ்க்ரூவின் தலைப்பகுதியில் சரியாகப் பொருந்தும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. தச்சு வேலை செய்பவர்கள் பெரிய பலகைகளை அளக்கும்போது, டேப்பின் ஒரு முனையைப் பிடித்துக்கொள்ள ஆள் இருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் ஒரு சிறிய ஆணியை அடித்து, அதில் இந்தத் துளையை மாட்டிவிட்டு தனியாகவே எளிதாக அளக்கலாம்.
கொக்கியின் அடிப்பகுதியில் உள்ள சொரசொரப்பான அமைப்பு, பென்சில் இல்லாத நேரங்களில் அளவைக் குறிக்கப் பயன்படுகிறது. மரப்பலகை, ஜிப்சம் போர்டு அல்லது சுவரில் அளக்கும்போது, அளவைக் குறித்துக்கொள்ள டேப்பை லேசாக அழுத்தித் தேய்த்தால் அங்கு ஒரு சிறிய கீறல் விழுந்துவிடும்.
பலரும் டேப்பின் நுனியில் உள்ள கொக்கி சற்று லூசாக ஆடுவதைப் பார்த்துவிட்டு, அது பழுதாகிவிட்டது என நினைப்பார்கள். ஆனால் அதுவே ஒரு தொழில்நுட்பம்! இதற்குப் பெயர் True Zero. நீங்கள் ஒரு பொருளின் வெளிப்புறத்தை அளக்கும்போது அந்த கொக்கி அதன் தடிமன் அளவுக்கு வெளியே நகர்ந்து துல்லியமான அளவைக் கொடுக்கும். உட்புறத்தை அளக்கும்போது உள்ளே தள்ளிக்கொண்டு அளவைச் சரிசெய்யும்.
டேப் சுற்றப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பெட்டியின் பின்புறம் கவனித்தால், `3 inches' அல்லது `70 mm' என ஒரு அளவு பொறிக்கப்பட்டிருக்கும். ஒரு ஜன்னலின் உட்புறத்தை அளக்கும்போது டேப்பை மூலை வரை கொண்டுசென்று வளைத்து அளப்பதைப் பார்த்திருப்போம்; அப்படி வளைக்கத் தேவையில்லை. பெட்டியை சுவரோடு முட்டி வைத்துவிட்டு, டேப்பில் காட்டும் அளவோடு, பெட்டியின் அளவையும் (உ-ம்: 3 இன்ச்) கூட்டிக்கொண்டால் மிகத் துல்லியமான அளவு கிடைத்துவிடும்.
சாதாரண கருவி என நாம் நினைக்கும் டேப்பில், மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்த இவ்வளவு நுட்பங்கள் மறைந்திருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம் தான்!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0