சகோதரி கொலை வழக்கு: தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி சகோதரன் தற்கொலை

Nov 24, 2026 - 12:30
0
சகோதரி கொலை வழக்கு: தீர்ப்பை கேட்டதும் நீதிமன்ற மாடியிலிருந்து குதித்து குற்றவாளி சகோதரன் தற்கொலை

மும்பை அருகில் உள்ள நவிமும்பை நெரூல் பகுதியை சேர்ந்தவர் நாகேஷ்(36). ஆட்டோ டிரைவரான நாகேஷ் தனது மனைவி ஜோத்சனாவிற்கு தனது சகோதரியின் கணவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக சந்தேகப்பட்டார். இது தொடர்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இத்தகராறு காரணமாக நாகேஷ் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நெரூல் அருகில் உள்ள குக்ஷேத் கிராமத்தில் உள்ள ஜோத்சனாவின் தாய் வீட்டிற்கு சென்ற நாகேஷ், அங்கு தனது மனைவியை கத்தியால் தாக்கினார்.

பின்னர் அங்கிருந்து நெரூல் கிராமத்தில் உள்ள தனது சகோதரி சுனிதாவின் வீட்டிற்கு நாகேஷ் சென்றார். அங்கு சென்று தகராறு செய்தார். இதில் அவரை அமைதிப்படுத்த நாகேஷின் சகோதரி சுனிதா முயன்றார். இந்த சண்டையில், நாகேஷ் தனது சகோதரியை கத்தியால் மார்பில் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இக்கத்திக்குத்தில் சுனிதா பரிதாபமாக இறந்து போனார்.

நெரூல் போலீசார் 24 மணி நேரத்தில் நாகேஷை கைது செய்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக நாகேஷ் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் மீதான வழக்கு நவிமும்பையில் உள்ள பேலாப்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் கோர்ட் நேற்று தனது தீர்ப்பை வழங்கியது. நீதிபதி குற்றவாளிக்கு சுனிதாவை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனையும், மனைவியை கொலை செய்ய முயன்றதற்காக 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டார். இத்தீர்ப்பை தொடர்ந்து போலீஸார் கோர்ட் ஊழியர்களுடன் கோர்ட் நடைமுறைகளை முடித்துக்கொண்டிருந்தனர்.

அந்நேரம் நாகேஷ் திடீரென கோர்ட் பால்கனிக்கு ஓடி அங்கிருந்து அதாவது 5வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். அவரை போலீஸார் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். இந்த சம்பவம் நீதிமன்ற வாசலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User