சபரிமலை: திட்டமிட்டு பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சியா? தடயவியல் துறை விசாரணை

Nov 25, 2026 - 08:31
0
சபரிமலை: திட்டமிட்டு பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சியா? தடயவியல் துறை விசாரணை

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தரிசனத்துக்காக ஆன்லைனில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டன. அதேசமயம் சபரிமலையில் பக்தர்கள் எண்ணிக்கையும் குறைந்த அளவே காணப்படுகிறது. எனவே இடைத்தரகர்கள் மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, வேறு நபர்களுக்கு விற்பனை செய்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயகுமார் கூறுகையில், "வெர்ச்சுவல் க்யூ அல்லது ஸ்பாட் புக்கிங் வழியாக மட்டுமே ஐயப்பப் பக்தர்கள் வருவதால், முறையான முன்னேற்பாடுகளுடன் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒழுங்கைக் கொண்டுவர முடிந்தது.

அதனால் ஒரு வாரகாலமாக சிறந்த முறையில் சபரிமலை மண்டலகால தரிசனம் நடைபெற்று வருகிறது. பணப் பரிவர்த்தனைகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதால் வருவாய் இழப்பைத் தடுக்க முடிந்துள்ளது. இது மொத்த வருவாயை உயர்த்தும்.

சன்னிதானம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தூய்மையான சூழல் நிலவுகிறது. நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 12,000 வாகனங்கள் வரை அங்கு நிறுத்த முடியும். பக்தர்கள் தங்கள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக, நிலக்கல்லில் இருந்து இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

வெர்ச்சுவல் க்யூ (Virtual Queue) மூலம் முன்பதிவு செய்த பிறகு ரத்து செய்யப்படும் ஸ்லாட்டுகள், 8 மணி நேரத்திற்குப் பிறகே மீண்டும் முன்பதிவுக்குக் கிடைக்கும். இந்தப் புதிய நடைமுறை நவம்பர் 24 இரவு முதல் அமலுக்கு வருகிறது.

மொத்தமாக ஸ்லாட்டுகளை முன்பதிவு செய்துவிட்டு, பின்னர் அவற்றை ரத்து செய்து வேறு நபர்களுக்குக் கிடைக்கச் செய்யும் வகையில் திட்டமிட்ட முயற்சிகள் ஏதேனும் நடந்தால், அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

சபரிமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட காட்சி
சபரிமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட காட்சி

ஐயப்ப சுவாமியைத் தரிசிக்க வரும் எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். ஏதேனும் ஒரு முறையில் முன்பதிவு செய்துவிட்டு வர வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை ஏற்கனவே 5,000 அதிகரிக்கப்பட்டிருந்தது.

தேவைப்பட்டால் மேலும் 5,000 அதிகரிக்கப்படும். ஆனால் தற்போது அதற்கான தேவை இல்லை. பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தபோதிலும் அதிகாரிகளின் துல்லியமான ஒருங்கிணைப்பு காரணமாக சன்னிதானத்தில் நெரிசல் உணரப்படவில்லை.

சபரிமலை

பம்பை நதியில் துணிகளை வீசும் பல ஆண்டுகால தவறான பழக்கத்தை, விழிப்புணர்வு மூலம் பெருமளவில் குறைக்க முடிந்துள்ளது. யாத்திரை காலம் தொடங்கும் வேளையில், திட்டமிட்ட முறையில் பக்தர்களின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சி நடந்ததா என்பது குறித்து சைபர் தடயவியல் துறை விசாரணை நடத்தி வருகிறது.

இதுவரை அது தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்பாச்சிமேட்டில் உள்ள இதய சிகிச்சை மையத்திற்கு அருகே புதுப்பித்து அழகுபடுத்தப்பட்டுள்ள பக்தர்கள் ஓய்வறை ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும். புகைப்படம் எடுப்பதற்கு ஏற்ற வகையில் மிக அழகாக இப்பகுதி மாற்றப்பட்டுள்ளது. அப்பம் மற்றும் அரவணைப் பிரசாதங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளது" என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User