வைக்கோலுக்குள் ரூ.3.25 கோடி; காட்டிக்கொடுத்த மைத்துனர்; ம.பி., கொள்ளையர்கள் சிக்கியது எப்படி?
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தானிய வியாபாரி சுரேஷ் பார்மர் என்பவருக்குச் சொந்தமான ரூ.3.75 கோடியைக் கடந்த 18ம் தேதி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். வியாபாரியின் ஊழியர் வாகனத்தில் ரூ.3.75 கோடியை எடுத்து சென்றபோது அவரது வாகனத்தை வழிமறித்து அவரை கத்தியால் குத்திவிட்டு அதில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர்.
இக்கொள்ளை தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் பணத்தைக் கொள்ளையடித்த முக்கியக் குற்றவாளி கைது செய்யப்பட்டான்.
ஆனால் அவனிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இல்லை. இக்கொள்ளையில் பக்கத்து மாநிலமான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கும் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர். போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியின் மத்தியப் பிரதேச கிராமத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

உடனே நாக்பூர் போலீஸார் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றனர்.
வாரசியோனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டோர்லி கிராமத்தில், கொள்ளையடிக்கப்பட்ட பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அக்கிராமத்திற்கு நாக்பூர் தனிப்படை போலீஸ் சென்றது. முக்கியக் குற்றவாளியின் மைத்துனர் அர்விந்த் என்பவரிடம் உள்ளூர் போலீஸாரின் துணையோடு நாக்பூர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
முதலில் அர்விந்தின் தந்தையிடம் பேசிய போலீஸார், பின்னர் அர்விந்த்திடம் விசாரித்ததில், பணத்தை தோட்டத்தில் மறைத்து வைத்திருந்ததை அவர் ஒப்புக்கொண்டார். உடனே தோட்டத்திற்குச் சென்று தேட ஆரம்பித்தனர். அங்கு இருந்த வைக்கோலுக்குள் 3 சாக்கு மூட்டையில் பணம் வைக்கப்பட்டு இருந்தது.
மூன்று சாக்குமூட்டைகளும் பின்னர் அங்குள்ள பஞ்சாயத்து கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு போலீஸார் சுமார் நான்கு மணி நேரம் ரூபாய் நோட்டுகளை எண்ணினர். அதில் ரூ.3.25 கோடி இருந்தது. இந்த நடவடிக்கையின் போது ஏராளமான கிராம மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களை போலீஸார் கட்டுப்படுத்தினர். இக்கொள்ளை தொடர்பாக போலீஸார் சந்திரகாந்த், ரஜினிகாந்த் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர்.
இக்கொள்ளையில் தொடர்புடைய மேலும் 6 பேரைத் தேடி வருகின்றனர். கொள்ளையர்கள் சில நாட்களாக சுரேஷ் வீட்டிற்கு பணம் வருவது குறித்து கண்காணித்து வந்துள்ளனர். இதற்கு உள்ளூர் பிரமுகர்கள் சிலரும் உதவி செய்து இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட வாகனம் ரயில் நிலையம் ஒன்றிற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)