ராமேஸ்வரம் கோயில் இலவச லட்டு பிரசாதத்தில் ரூ.3.40 கோடி சுருட்டல் - ஊழியர்கள் 6 பேர் சஸ்பெண்ட்!
புனித தலமான ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு தனியார் மூலம் விற்பனை செய்யப்பட்டு வந்த பிரசாத உரிமம் ரத்து செய்யப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு முதல் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் நேரடியாக விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2023-24 ம் ஆண்டு வெளியிடப்பட்ட மானியகோரிக்கையின் அடிப்படையில் கடந்த 3 வருடங்களாக நாள் முழுவதும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் பொறுப்பு அலுவலராக கோயில் உதவி பேஷ்கார் பஞ்சமூர்த்தி என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த இலவச பிரசாத விநியோகத்தில் 30 கிராம் ஏடை கொண்ட லட்டும் வழங்கப்பட்டு வந்தது. இது தவிர 50 கிராம் எடை கொண்ட லட்டு ரூ. 15க்கு கோயிலுக்குள் உள்ள பிரசாத ஸ்டால்களிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் லட்டு தயாரிப்பு கூடத்தில் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வில் பிரசாதம் தயாரிப்புக்கு வாங்கப்பட்ட மூலப் பொருட்களின் இருப்பு குறைவாக இருந்துள்ளது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக பிரசாத விற்பனையும் குறைவாக இருந்துள்ளது. இதையடுத்து பிரசாத விற்பனை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் பிரசாத விற்பனை கூடுதலானதாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த இணை ஆணையர் இலவச மற்றும் விற்பனை பிரசாத கணக்குகளை முழுமையாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லட்டுக்கு பதிலாக கூடுதல் எடை கொண்ட லட்டுக்களை தயார் செய்து அவற்றை பிரசாத ஸ்டால்களில் விற்பனை செய்ததுடன் அதற்கான தொகையினை கோயில் கணக்கில் வரவு வைக்காமல் தனது சொந்த கணக்கில் வரவு செய்துள்ளார் பஞ்சமூர்த்தி. இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த முறைகேட்டில் ஈடுபட்ட இளநிலை உதவியாளரும் கோயில் உதவி பேஷ்காருமான பஞ்சமூர்த்தி, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அவரது மகன் விக்ரம், பிரசாத விற்பனையாளர்களான சிவனேஸ்வரி, செல்வி, லாவண்யா, அம்பிகா ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து இணை ஆணையர் செல்லத்துரை உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோயில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அவர்களது கணக்கில் வரவு வைக்கப்படாமல் கோயிலில் பணியாற்றிய கம்யூட்டர் ஆபரேட்டர் சிவா என்பவரது கணக்கில் வரவு செய்யப்பட்ட முறைகேடு நடந்தது. தற்போது பக்தர்களுக்கு வழங்க வேண்டிய இலவச பிரசாதம் மற்றும் பிரசாத விற்பனையில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. திருக்கோயிலில் நடைபெறும் இந்த தொடர் முறைகேடுகள் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)