150 வருட தாமதம்; நூலகத்துக்கு திரும்பிய புத்தகம்; அபராதம் எவ்வளவு தெரியுமா? - ஆஸ்திரேலிய சுவாரஸ்யம்
"ஒரு புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க மறந்துவிட்டேன்!" என்று யாராவது சொன்னால், அது சில நாள்களோ, சில மாதங்களோ தாமதமாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவின் கடலோர நகரமான கியாமாவில் செயல்பட்டு வரும் கியாமா நூலகத்தில் 1858-ஆம் ஆண்டு வெளியான Antiquities of Athens என்ற அரிய நூல், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நூலகத்துக்குத் திரும்பியது. ஆனால், அந்தப் புத்தகத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தாமத அபராதம் தான் நம்மை இன்னும் ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது.
இந்தப் புத்தகத்தை நூலகத்துக்குக் கொண்டு வந்தவர், தனது வீட்டைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது வீட்டில் மூடப்பட்டிருந்த பழைய நெருப்பறையின் (Fireplace) சுவரை அகற்றியபோது, செங்கற்களால் மூடப்பட்டிருந்த ஒரு தேநீர் மரப்பெட்டிக்குள் இந்தப் புத்தகம் மறைந்திருந்ததை பார்க்கிறார். பின்னர் அவர் அதை கியாமா நூலகத்திடம் ஒப்படைக்கிறார்.
இப்புத்தகத்தின் உள் அட்டையில் அச்சிடப்பட்டிருந்த 'வாரத்திற்கு மூன்று பென்ஸ் (Three Pence)' என்ற தாமதக் கட்டண விதிமுறையையும், 1872-ஆம் ஆண்டு கியாமா நூலகம் தொடங்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த விதிகளையும், பணவீக்கத்தையும் (Inflation) அடிப்படையாகக் கொண்டு இந்தப் புத்தகத்துக்கான தாமத அபராதம் இன்றைய மதிப்பில் சுமார் 28,000 ஆஸ்திரேலிய பணம், அதாவது இந்திய மதிப்பில் ரூ.18.7 லட்சம் என்று கணக்கிடப்பட்டதாக நூலக நிர்வாகம் கூறுகிறது.

மேலும் நூலகத்தின் பழைய விதிமுறைகளும் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. அப்போது ஒருவர் புதிய புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டுமெனில், முன்பு எடுத்த புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து, நிலுவையில் இருந்த அபராதத்தையும் முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, ஒரு குடும்பத்தில் குறைந்தது ஆறு பேர் படிக்கத் தெரிந்தவர்கள் இருந்தால் மட்டுமே, அந்தக் குடும்பத்திற்கு அதிகபட்சம் மூன்று புத்தகங்கள் கடனாக வழங்கப்பட்டன. மேலும், மது அருந்திய நிலையில் நூலகத்திற்கு வந்தவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படாது என்ற விதியும் நடைமுறையில் இருந்துள்ளது.
இதுகுறித்து நகைச்சுவையாகப் பேசிய மிசெல் ஹட்சன், ஒருவேளை அதனால்தான் அவர்கள் இந்தப் புத்தகத்தை எங்களிடம் திருப்பிக் கொடுக்காமல் போயிருப்பார்கள்! என்று சிரித்தபடி கூறினார்.
மேலும், இவ்வளவு பழைமையான புத்தகம் எங்களிடம் திரும்பி வந்தது இதுவே முதன் முறை. சமூக வலைதளங்களில் நான் பின்தொடரும் பிற நூலகங்களில் 30 அல்லது 40 ஆண்டுகள் தாமதமாக புத்தகங்கள் திரும்பிய சம்பவங்கள் நடந்திருக்கும். ஆனால் 150 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிய புத்தகம் இதுதான் முதல் முறை என்றார். இந்தப் புத்தகத்தை யார் கடனாக எடுத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. காரணம், 1870-களில் எந்த நபர் இந்த புத்தகத்தை எப்போது எடுத்தார் என்பதை பதிவு செய்திருந்த நூலகத்தின் கடன் பதிவேடு (Borrowing Journal) தற்போது காணாமல் போய்விட்டது. மேலும் இந்தப் புத்தகத்தை கடைசியாக யார் எடுத்தார்கள் என்பதைச் சொல்லும் எந்த ஆதாரமும் புத்தகத்தில் இல்லை. என்று ஹட்சன் தெரிவித்தார்.
நூற்றாண்டுகளாக புகைப்போக்கி அருகே இருந்ததால், புத்தகம் நீரால் சேதமடைந்துள்ளது. இந்தப் புத்தகம், கியாமா நூலகம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்த சுமார் 1,000 புத்தகங்களைக் கொண்ட அசல் சேகரிப்பில் இடம்பெற்ற 506-ஆவது புத்தகம் ஆகும். நூலகம் தொடங்கி சில ஆண்டுகளிலேயே இந்தப் புத்தகம் காணாமல் போயிருக்கலாம் என்றும்,
இப்போது இந்த அரிய புத்தகம், கியாமா நூலகத்தின் உள்ளூர் வரலாற்று சேகரிப்பில் நிரந்தரமாகக் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து மிசெல் ஹட்சன் கடைசியாக "இனி இந்தப் புத்தகத்தை யாருக்கும் கடனாகக் கொடுக்கப் போவதில்லை. மீண்டும் இது திரும்பி வர இன்னொரு 150 ஆண்டுகள் காத்திருக்க எங்களுக்கு விருப்பமில்லை!” என்று நகைச்சுவையாக கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)