கண்கள் காணாத சோழர் கலையை தொட்டுணர்ந்த நெகிழ்ச்சி; விழிச்சவால் கொண்டவர்களுக்கான சிறப்பு முன்னெடுப்பு!

Nov 27, 2026 - 15:32
0
கண்கள் காணாத சோழர் கலையை தொட்டுணர்ந்த நெகிழ்ச்சி; விழிச்சவால் கொண்டவர்களுக்கான சிறப்பு முன்னெடுப்பு!

"ஒரு சிற்பம் எப்படி இருக்கும் என்பதை இன்றுதான் என்னால் தொட்டு உணர்ந்து புரிந்துகொள்ள முடிந்தது. இதுவரை எனக்கு அதுபற்றி எந்த யோசனையுமே இருந்ததில்லை. இது எனக்கு வாழ்வில் மறக்க முடியாத புது அனுபவம்" — அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள புகழ்பெற்ற 'சண்டேச அனுக்கிரக மூர்த்தி' சிற்பத்தின் மாதிரியைத் தொட்டு உணர்ந்தபோது, விழித்திறன் சவால் கொண்ட 11-ம் வகுப்பு மாணவி எஸ்.கார்த்திகாவின் குரலில் அத்தனை நெகிழ்ச்சி.

ஆயிரம் ஆண்டுக்கால சோழர் சிற்பக்கலையின் நுணுக்கத்தை, கண்களால் பார்க்க முடியாத பார்வைத்திறன் சவால்மிக்கவர்கள் தங்கள் விரல் நுனிகளால் வருடி உணர்ந்த அந்தத் தருணம், கல் நெஞ்சங்களையும் கரைய வைக்கும் விதமாக இருந்தது.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

முதலாம் ராஜேந்திர சோழனால் (கி.பி. 1012–1044) கட்டப்பட்டு, யுனெஸ்கோவின் 'பெருமைக்குரிய சோழர் கோயில்கள்' பட்டியலில் இடம்பெற்றுள்ள கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில், இந்தியாவின் முதல் தொடு உணர்வு கலைக்கூடம் (Tactile Museum) அமைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெற்ற ஒரு வார கால உலகப் பாரம்பர்ய வார விழாவின் நிறைவு நாளை (நவம்பர் 25) முன்னிட்டு, மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்தியத் தொல்லியல் துறை (ASI) திருச்சி வட்டத்தின் சார்பில் இந்தச் சிற்பத்தின் 'தொட்டுணர் அனுபவ மாதிரி' மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருச்சி புத்தூர் அரசினர் விழித்திறன் மாற்றுத்திறனாளிகள் மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 47 மாணவிகள் பங்கேற்று, சிற்பத்தைக் கைகளால் வருடி உணர்ந்து உற்சாகத்தில் திளைத்தனர்.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

அதோடு, இக்கோயில் குறித்த பிரெய்லி (Braille) கையேட்டையும் திருச்சி வட்டத் தொல்லியல் துறை வெளியிட்டது.

"அவர்களுக்கு இதுவொரு புதிய உலகம்!"

இந்த முன்னெடுப்பின் அனுபவங்கள் குறித்து மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் துறை (ASI) திருச்சி வட்டக் கண்காணிப்பாளர் (பொறுப்பு) பி. அறவாழியிடம் நாம் பேசினோம்.

"சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு திருச்சி வானொலி நிலையத்தின் எஃப்.எம். நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டு கோயில் சிற்பங்களின் சிறப்புகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தேன்.

நேரடி நிகழ்ச்சியில் ஒருவர் கேட்ட கேள்வியே இந்தத் திட்டத்திற்கான விதையாக அமைந்தது. விழித்திறன் சவால் கொண்டவர்கள் ஒரு சிற்பத்தைத் தொட்டுப் பார்த்து அது யார் என்பதை அடையாளம் காண முடியுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

பொதுவாக காந்தி, விவேகானந்தர் போன்ற சிலரின் சிலைகளை வேண்டுமானால் தொட்டு அடையாளம் காண்பார்கள், ஆனால் நம் கடவுள் சிற்பங்களை அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை என்ற யதார்த்தம் பேசப்பட்டது. 'ஏன் நம்மால் இதைச் செய்ய முடியாது?' என்ற சிந்தனையில்தான் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது.

இப்போது இந்தச் சிற்ப மாதிரியைத் தொட்டு உணர்ந்த மாணவிகளுக்கு, இது ஒரு புதிய உலகத்தைப் பார்த்தது போன்ற பிரமிப்பைக் கொடுத்தது. இதுவரை அவர்களுக்குச் சிற்பங்கள் பற்றிய சித்திரங்கள் கற்பனையில் மட்டுமே இருந்திருக்கும்.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

இப்போது தங்கள் கைகளால் தொட்டு உணர்ந்ததும், 'சிற்பம் இப்படித்தான் இருக்குமா!' என்ற ஆச்சர்யமும் தெளிவும் அவர்களிடம் ஏற்பட்டது. சண்டேச அனுக்கிரக மூர்த்தி என்றால் யார் என்ற புரிதலும் இப்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. இந்திய அளவில் சிற்பங்களைத் தொட்டு உணர்ந்து, அவற்றுக்கான விளக்கங்களைப் பெறும் 'டச் அண்ட் ஃபீல்' (Touch and Feel) வசதி அமைக்கப்பட்டது இதுவே முதன் முறையாகும்.

கோயிலில் உள்ள அசல் கல் சிற்பங்களைத் தொடுவதற்குப் பதிலாக, மூலச் சிற்பத்தை அப்படியே பிரதிபலிக்கும் வகையில் முப்பரிமாண (3D) மாதிரியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிவன், பார்வதி மற்றும் சண்டேசர் ஆகிய மூவரின் உருவங்களும் தத்ரூபமாக இடம்பெற்றுள்ளன.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

மாணவிகள் சிற்ப மாதிரியின் தலை (மகுடம்), இடுப்புப் பகுதி என எந்த இடத்தைத் தொடுகிறார்களோ, அந்தப் பகுதியில் உள்ள சென்சார் மூலம் அந்த மகுடம் எப்படி அமைந்துள்ளது, என்னென்ன ஆபரணங்கள் அணியப்பட்டுள்ளன என்ற நுணுக்கமான விவரங்கள் தானாகவே ஒலியாகக் கேட்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் இந்த ஒலி விளக்கம் கிடைக்கிறது.

பி. அறவாழி

மேலும், இந்நிகழ்வில் செவித்திறன் மற்றும் வாய் பேசும் சவால் கொண்ட மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்கள் இந்த நினைவுச்சின்னம் குறித்துத் தங்கள் சைகை மொழியில் மிக அழகாக விளக்கமளித்தனர். அவர்களுக்காகப் பிரத்யேக சைகை மொழி வீடியோவும் தயாரிக்கப்பட்டிருந்தது.

அதோடு, அந்த மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் எந்த இடையூறுமின்றி மிக நேர்த்தியாக இருந்ததைக் கண்டு வியந்தோம். அவர்களின் ஓவியத் திறமையை எதிர்காலத்தில் ஒரு சிறந்த வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பாக மாற்றும் திட்டமும் உள்ளது" என்றார்.

கற்பனையிலிருந்து நிஜத்திற்கு..!

திருச்சி புத்தூர் அரசினர் விழித்திரை மாற்றுத்திறனாளிகள் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சோபியா மாலதி நம்மிடம்,

"ஒரு விழித்திறன் மாற்றுத்திறனாளியாகவும் தலைமை ஆசிரியையாகவும் இது எனக்கு மிகவும் சிறப்பான, புதிய அனுபவமாக இருந்தது.

சோபியா மாலதி

நாம் எல்லா இடங்களுக்கும் செல்வோம்; ஆனால் கோயில் தூண் சிற்பங்களைக்கூடத் தொட்டுப் பார்க்க அனுமதி கிடைக்காத நிலையில்தான் இதுவரை இருந்தோம். நமது உணர்வைப் புரிந்துகொண்டு இப்போது ஒரு சிலை மாதிரியை அமைத்திருக்கிறார்கள்; போகப்போக எல்லாக் கோயில்களிலும் இதுபோல் அமைப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளிலும் விளக்கம் உள்ளது.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

நமது பிள்ளைகள் தொட்டுப் பார்க்கும்போது, தலையிலிருந்து தொட்டுப் பாரு, கிரீடம் இருக்கிறது, ஆபரணங்கள் என்ன அணிந்திருக்கிறார்கள், என்ன வடிவம் இருக்கிறது என அதுவே வழிகாட்டி விளக்குகிறது. பிரெய்லி கையேடும் கொடுத்தார்கள்; தற்போதைக்கு ஆங்கிலத்தில் உள்ளது, அடுத்து தமிழிலும் கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறார்கள்.

அனைத்துக் கோயில்களிலும் இது போன்ற மாதிரி சிற்பங்களும், விழித்திறன் சவால் கொண்ட பிள்ளைகளுக்கான தொடு உணர்வுக் கூடங்களும் அமைக்கப்பட வேண்டும். மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிகளில் ஈடுபடும் விழித்திறன் சவால் கொண்ட மாணவர்களுக்கு இது மிகப் பெரிய உதவியாக இருக்கும். அதேபோல, கோயில்களில் பார்வை சவால் கொண்டோருக்கெனத் தனி வழிகாட்டிகள் (Guides) நியமிக்கப்பட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்." என்றார்.

சோழர் கலையைக் கைகளால் தரிசித்த நெகிழ்ச்சி

இந்த அனுபவம் குறித்து அதே பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி சி. பிரியதர்ஷினி,

"இதுவரை நாங்கள் கோயில்களுக்கு வரும்போது, எங்கள் ஆசிரியர்களோ உடன் வருபவர்களோ சிற்பங்களின் அமைப்பை விவரிப்பார்கள். அதை மனதில் கற்பனை செய்து மட்டுமே பார்ப்போம். ஆனால், இன்று ஒரு சிற்பத்தைத் தொட்டு உணர்ந்து, அது உண்மையில் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி. பண்டைய காலத்தில் மக்கள் எப்படி உடையணிந்திருந்தார்கள் என்பதையும் என்னால் உணர முடிந்தது"

என்று உற்சாகம் பொங்கப் பேசினார்.

வரலாறு என்பது வெறும் ஏடுகளிலும் காட்சிப் பொருள்களிலும் மட்டும் அடைபட்டுக் கிடப்பதல்ல; அது அனைவருக்குமான பொதுச் சொத்து. கண்கள் காணாத அழகை விரல்களால் தொட்டுணர்ந்து, தங்கள் கற்பனைகளுக்கு நிஜ வடிவம் கொடுத்த இந்தப் பிள்ளைகளின் புன்னகையே, இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றி!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User