சூடுபிடிக்கும் தொகுதி மறுவரையறை; பாஜக கணக்கும் காங்கிரஸின் கூட்டணி சிக்கலும்; திமுகவின் முடிவு என்ன?

Nov 27, 2026 - 13:32
0
சூடுபிடிக்கும் தொகுதி மறுவரையறை; பாஜக கணக்கும் காங்கிரஸின் கூட்டணி சிக்கலும்; திமுகவின் முடிவு என்ன?

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்களவையில் நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவையில் டிசம்பர் 2-ம் தேதியும் இந்தக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இருப்பினும், இந்தக் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரின் போது, 2023 மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும், தொகுதி மறுவரையறை செய்வதற்கு ஏதுவாக '2026 அரசியலமைப்பு (131வது திருத்த) மசோதாவை' பாஜக தலைமையிலான அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.

அந்த மசோதாவின்படி, மக்களவை இடங்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்படும். அதில் சுமார் 283 இடங்கள் சுழற்சி முறையில் பெண்களுக்கு ஒதுக்கப்படும். அதோடு, தொகுதி எல்லைகளை மாற்றியமைக்க ஒரு ஆணையத்தை அமைக்கும் அதிகாரமும் அரசுக்குக் கிடைக்கும். ஆனால், இப்படித் தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது, மக்கள்தொகை அதிகம் உள்ள வட இந்திய மாநிலங்களுக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம் என்ற அச்சம் மற்ற மாநிலங்களிடையே நிலவுகிறது.

தொகுதி மறுவரையறை தொடர்பான அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை தேவை. கடந்த ஏப்ரல் மாதத்தில் அரசுக்கு அந்தப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது பேசிய அமித் ஷா, 'அனைத்து மாநிலங்களிலும் ஒரே சீராக 50 சதவீத இடங்களை உயர்த்த அரசு சம்மதிக்கக்கூடும்' என்று குறிப்பிட்டார். ஆனால், அந்த அம்சம் மசோதாவின் உரையில் இடம்பெறவில்லை. இந்த முறை அது சேர்க்கப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

அதேநேரம், '2023 முதலே மகளிர் இடஒதுக்கீடு சட்டமாக இருக்கும்போது, தொகுதி மறுவரையறையுடன் அதை இணைக்காமல், இப்போதே நடைமுறைப்படுத்தலாமே' எனக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

தங்களுக்குச் சாதகமாகத் தொகுதிகளை மாற்றிக்கொள்ளவே அரசு 'மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னால் ஒளிந்துகொள்கிறது' என்றும் குற்றம்சாட்டுகின்றன. 'தொகுதி இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, எம்.பி-க்கள் மற்றும் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள்தொகை விகிதத்தைச் சமப்படுத்த உதவும்' என்று பாஜக வாதிடுகிறது.

இதற்கிடையில், வியாழக்கிழமை நடந்த அரசமைப்புச் சட்ட தின உரையில் பேசிய அமித் ஷா, ``மகளிர் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் தடுக்கிறது. என்ன நடந்தாலும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு நிச்சயம் கிடைக்கும். எங்களைத் தடுக்க முடியாது" என ராகுல் காந்திக்குச் சவால் விடுத்தார்.

அமித் ஷா சவால் விட்ட சில மணி நேரங்களிலேயே, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மக்களவை நவம்பர் 30-ம் தேதியும், மாநிலங்களவை டிசம்பர் 2-ம் தேதியும் கூடவுள்ளன.

ஏப்ரல் மாதம் தவறவிட்ட மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இப்போது திரட்டி, தொகுதி மறுவரையறைக்கான சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற அரசு முயற்சித்து வருகிறது.

அமித் ஷா
அமித் ஷா

மக்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கான இலக்கு சுமார் 360 ஆகக் கணக்கிடப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் 241 பாஜக எம்.பி-க்கள் உட்பட 319 உறுப்பினர்கள் இருப்பதாகத் தெரிகிறது. இரண்டாகப் பிரிந்த திரிணமூல் காங்கிரஸின் 20 பேர் கொண்ட எம்.பி குழுவும் இதில் அடங்கும். மேலும், பஞ்சாப் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுடன் கூட்டணியைப் புதுப்பித்துக்கொண்ட சிரோமணி அகாலி தளத்தின் ஒரு எம்.பி-யும் இந்த வாரம் இணைந்துள்ளார்.

அனைத்து மாநிலங்களிலும் ஒரே சமமாக 50 சதவீத தொகுதி உயர்வுக்கு ஆதரவளிப்பதாக என்சிபி (SP)-யின் கட்சித் தலைவர் சுப்ரியா சுலே முன்னதாகக் கூறியிருந்தார்.

இது தொடர்பாக நேற்று பேசிய அவர், ``முதலில் மசோதா தாக்கல் செய்யப்படட்டும். முழு மசோதாவும் நம் கையில் இருக்கட்டும். அது கிடைத்த பிறகு விவாதிக்கலாம். ஒருவேளை அது நல்ல மசோதாவாகக்கூட அமையலாம்" என்றார். இதன் அடிப்படையில் என்.சி.பி (SP)-யின் 8 எம்.பி-க்கள் ஆதரவு சேரும்போது மசோதாவுக்கான ஆதரவு எண்ணிக்கை 328 ஆக உயரும்.

இதனால் சுப்ரியா சுலேவின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹர்ஷவர்தன் சப்கால், ``இந்தத் தொகுதி மறுவரையறை தேச விரோதமானது, நாட்டுக்கு எதிரானது மற்றும் நாட்டை அழிப்பது... காங்கிரஸ் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா கூட்டணியும் இந்த மசோதாவை எதிர்க்கிறது" என்றார்.

சுப்ரியா சுலே
சுப்ரியா சுலே

இங்குதான் திமுக பங்கு கவனம்பெறுகிறது. தமிழ்நாட்டில் தவெக-வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததைத் தொடர்ந்து, இந்தியா கூட்டணியிலிருந்து திமுக வெளியேறியதும், அதைத் தொடர்ந்து மாநில அரசியலில் காங்கிரஸ் - திமுக உறவு அதலபாதாளத்துக்குச் சென்றிருப்பதும் காங்கிரஸுக்குச் சிக்கலாக மாறியிருக்கிறது.

எனவே, இந்த நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தில் திமுகவின் 22 எம்பிக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால், அதன் பலம் 351ஆக உயரும். எனவே, மசோதாவை நிறைவேற்றுவதற்கு இலக்கை எட்ட இன்னும் சுமார் 10 இடங்கள் குறைவாக இருந்தாலும், அது மசோதா நிறைவேறுவதற்கான நெருக்கமான எண்ணிக்கையாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் திமுக-வின் நிலைபாடு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், ``தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:

ஸ்டாலின் - கருணாநிதி
ஸ்டாலின் - கருணாநிதி

• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!

• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!

எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.

பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனை கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!" எனத் தெரிவித்திருக்கிறார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இன்று மாலை காங்கிரஸ் நாடாளுமன்ற வியூகக் குழுக் கூட்டத்திற்கும் திட்டமிட்டிருக்கிறது. இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை தாங்குகிறார். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிற மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். எனவே, தற்போது இந்திய அரசியல் களம் மீண்டும் பரபரக்கத் தொடங்கியிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://tinyurl.com/2b963ppb

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User